search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி: 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிப்பு

    • திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    திருச்சி:

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இந்த ரெயில்களில் சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதுக்குடி கிராமம் அருகிலுள்ள மேலவாளாடி பகுதிக்கு நள்ளிரவு சுமார் 1.05 மணிக்கு வந்தது.

    அப்போது திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    ரெயில் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் நிற்க வைத்த நிலையில் ஒரு டயரும், படுக்க வைத்த நிலையில் மற்றொரு டயரும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிக வேகத்தில் ரெயில் வந்ததால் அந்த டயர்கள் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதுடன் ரெயிலின் வேகமும் குறைந்தது.

    இந்த விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து என்ஜின் டிரைவர் உள்ளிட்டோர் இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் என்ஜினுக்குள் சிக்கிய நிலையில் 2 லாரி டயர்கள் கிடந்தன. அத்துடன் அவை என்ஜின் பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களையும் கடுமையாக சேதப்படுத்தி இருந்தது.

    இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர்களை கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

    விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கும் நிலை ஏற்படும் என்று கூறி அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில்தான் ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து சதிச்செயல் அரங்கேறியுள்ளது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், கிராமத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி நபர்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×