search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள் மழைநீர் புகுந்தது- நோயாளிகள் அவதி
    X

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். இதனால் படுக்கைகள் காலியாக இருக்கும் காட்சி.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள் மழைநீர் புகுந்தது- நோயாளிகள் அவதி

    • மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
    • மழைநீர் ஒழுகும் இடத்தை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு செங்கல்பட்டு பகுதியில் பலத்த மழை தொடர்ந்து நீடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதற்கிடையே கனமழை காரணமாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் மழை நீர் புகுந்தது.

    மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.

    இதனால் அங்கிருந்த நோயாளிகள் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் நோயாளிகளின் அறைக்குள் மழைநீர் வருவது அதிகரித்தது.

    இதை தொடர்ந்து அவசர சிகிச்சை, எலும்பு முறிவு நோயாளிகள் அங்கிருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். உடனடியாக அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மழைநீர் ஒழுகும் இடத்தை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

    முக்கியமான மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் லேசான மழைக்கே மழைநீர் புகுந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மழை தீவிரம் அடைந்து தொடங்குவதற்குள் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×