search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

    • சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • தென்காசி, தேனி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ இடங்களிலும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற ஒரு இஸ்லாமிய அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கப்பட்டது.

    அபுபக்கர் என்பவரை நிறுவன தலைவராக கொண்ட இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் கிளை அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஏராளமான உறுப்பினர்களும் உள்ளனர். சுதந்திரம், சமூக நீதி மற்றும் பாதுகாப்பு கொண்ட மனித சமூகத்தை உருவாக்குவதே நோக்கம் என்று இந்த அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 16 ஆண்டுகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிகப்பெரிய ஒரு கட்சி போல மாறி உள்ளது. இந்த அமைப்பு சார்பில் சமூக சேவைகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகில் செல்வதற்கு அனைவரும் பயந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் துணிச்சலுடன் செயல்பட்டு அந்த உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர்.

    ஆனால் இந்த அமைப்பு மீது கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆயுதக்குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், லவ்ஜிகாத் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்ட வட்டமாக மறுத்தது.

    இந்த அமைப்புக்கு எதிராக சில மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    கடந்த ஜூன் மாதம் இந்த இரு அமைப்புகளும் இணைந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கி கணக்குகளை முடக்கின. இதன் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

    10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் இன்று அதிகாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த அமைப்பின் நிர்வாகிகள் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதேபோன்று தமிழகத்திலும் இன்று அதிகாலை தென்காசி, நெல்லை, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, கோவை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 50 பேர் வந்தனர்.

    பெரிய வாகனத்தில் வந்து இறங்கிய அவர்கள் மூக்காத்தாள் தெருவில் உள்ள கட்டிடம் ஒன்றில் 3-வது மாடியில் இயங்கி வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் அலுவலகம் முன்பு திரண்டு என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனர் அரிகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 8.30 மணிவரை 5 மணிநேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது.

    இந்த சோதனையின்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். காலை 8.30 மணி அளவில் சோதனையை முடித்துக்கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன்பிறகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகளிடம் அந்த அமைப்பின் நிர்வாகி பயஸ் அகமது வாக்குவாதம் செய்தார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கைதான பயஸ் அகமது மீது பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் (வயது 43) வீடு கோவை கரும்புக்கடை சவுகார் நகரில் உள்ளது. இந்த வீட்டில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    டெல்லியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட அதிகாரிகள் காலை 5.30 மணிக்கு இஸ்மாயில் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒரு மணி நேரம் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையையொட்டி அவரது வீட்டு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் பரவியதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இஸ்மாயில் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் உக்கடம் ஆத்துப்பாலம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சோதனை முடிவில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவின் ஹார்ட் டிஸ்க் மட்டும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி இஸ்மாயிலை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு அவரை அழைத்துச் சென்றனர்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த மீனாட்சிபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் பெண்கள் அறிவகம் மற்றும் மதரசா செயல்பட்டு வருகிறது.

    இங்கு இன்று அதிகாலை 5 மணி முதலே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

    சோதனை நடக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழையாமல் இருக்க அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தென்காசி மாவட்டம் பண்பொழிக்கு இன்று அதிகாலையில் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு வசித்துவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகியான முகமது அலி ஜின்னா என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இதனையொட்டி அவரது வீடு அமைந்துள்ள தெருவுக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாதபடி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரையில் கோரிப்பாளையம், நெல்பேட்டை, குலமங்கலம் மெயின் ரோடு, வில்லாபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் ஏராளமான என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    கோரிப்பாளையத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட தலைவர் இத்ரீஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது சிகாம், குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் யூசூப், வில்லாபுரத்தில் உள்ள மாவட்ட துணைத் தலைவர் காலித் மற்றும் மேலும் 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங் களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரையில் 7 இடங்களிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்தது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிப்பாளையம், நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. அமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    சோதனை நடந்த இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் சோதனை நடந்த பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலி நோக்கம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத் துல்லா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலை 2.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 6 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் பேகம்பூர் முகமதியார்புரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3-வது மாடி கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.

    இதே போல் தேனி மாவட்டம் கம்பம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மண்டல செயலாளர் யாசர் அராபத் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பிறகு யாசர் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரளாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் அலுவலகங்களிலும் இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கேரளாவின் மலப்புரம், மஞ்சேரி, அடூர், பரக்கோடு, பூந்துறை, பத்தினம்திட்டா பகுதிகளில் உள்ள பாப்புலர் பிரண்ட் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே பூந்துறையில் உள்ள பாப்புலர் பிரண்ட் நிர்வாகியின் வீட்டில் நடந்த சோதனையின்போது அங்கிருந்த பென் டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களை என். ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.

    Next Story
    ×