search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி கணக்கு தொடங்கி ரூ.83 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் சஸ்பெண்டு- போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

    • வங்கி கிளையில் 14 பெயர்களில் வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ 700 கிராம் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
    • அதிர்ச்சி அடைந்த தணிக்கை அதிகாரிகள் வங்கி மேலாளர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூரில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் டி.ஜி.புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஏளூர், அத்தயப்பகவுண்டன் புதூர், வீரசின்னனூர், கொடிவேரி, சின்ன கொடிவேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்த வங்கியில் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம், வேங்கையர் வீதியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் வங்கி மேலாளர் குறித்து தலைமை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து கோவை மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் டி.ஜி.புதூரில் உள்ள வங்கி கிளையில் தணிக்கை செய்தனர்.

    அப்போது வங்கி கிளையில் 14 பெயர்களில் வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ 700 கிராம் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தணிக்கை அதிகாரிகள் வங்கி மேலாளர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து நகைகளை திரும்ப ஒப்படைக்க மண்கண்டனுக்கு 2 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மணிகண்டன் நகைகளை திரும்ப ஒப்படைக்கவில்லை. மேலும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

    இதையடுத்து வங்கியின் கோவை மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது வங்கி மேலாளர் மணிகண்டன் தனது உறவினர்கள், நண்பர்கள் 14 பேர் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் சுமார் 2 கிலோ 700 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்ததாக போலியாக கணக்கு காட்டி அதன் மூலம் ரூ.83 லட்சத்தை மோடி செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் 2 வாடிக்கையாளர்களின் 10 பவுன் நகையை கையாடல் செய்து அதை வேறு இடத்தில் மறு அடகு வைத்ததும் தெரிய வந்தது.

    மோசடி பணத்தில் வங்கி மேலாளர் மணிகண்டன் ஆன்லைன் சூதாட்டம் விளையாடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மோசடி செய்த வங்கி மேலாளர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் பற்றி தெரிய வந்ததும் வங்கி முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். வங்கியின் மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் பொதுமக்களின் நகைகள் பத்திரமாக உள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கைதான வங்கி மேலாளர் மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்தும் வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×