search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வை உடைக்க நினைப்பவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள்- எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க.வை உடைக்க நினைப்பவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள்- எடப்பாடி பழனிசாமி

    • எல்லா இடங்களிலும் தான் ஒட்டியிருக்கிறார்கள். அரசியல் என்றால் ஒட்டத்தான் செய்வார்கள். அவை உண்மைக்கு புறம்பான செய்திகள்.
    • அ.தி.மு.க.விற்கு எதிராக செயல்படுகிறவர்கள், மற்றவர்களின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பவர்கள்,

    சேலம்:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    கேள்வி:-அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கான தேர்தல் எவ்வளவு காலத்திற்குள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது?

    பதில்:-அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இன்றைக்கு வலிமையாக இருக்கின்ற கட்சி. சுமார் 33 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி புரிந்த கட்சி. இப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது.

    சில பேர் வேண்டுமென்றே திட்டமிட்டு, சிலரின் தூண்டுதலின் பேரிலே இந்த கட்சியை பிளக்க, உடைக்க பார்க்கின்றார்கள். அது ஒருபோதும் நடக்காது. உச்சநீதி மன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கின்றது. அந்த விசாரணை முடிந்த பின்னர் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்.

    கேள்வி:-மதுரையில் உங்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததே?

    பதில்:-எல்லா இடங்களிலும் தான் ஒட்டியிருக்கிறார்கள். அரசியல் என்றால் ஒட்டத்தான் செய்வார்கள். அவை உண்மைக்கு புறம்பான செய்திகள். வேண்டுமென்றே திட்டமிட்டு, பத்திரிகையிலும், ஊடகத்திலும் விறுவிறுப்பான செய்தி வர வேண்டும். உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக அப்படிப்பட்ட சுவரொட்டியை ஒட்டி உள்ளார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட பா.ஜ.க.வுக்கு உரிமை இருக்கிறது என்று வைத்தியலிங்கம் கருத்து தெரிவித்துள்ளாரே?

    பதில்:-அவர் எப்படி கட்சி நடத்துகிறார் பாருங்கள். அவர்கள் கட்சிக்கு, பிரதான கட்சிக்கு அவர்கள்தான் பொறுப்பாளர்கள். அடுத்தவர்களை நுழைக்க வேண்டும் என்றால் இவர் கட்சிக்கு விசுவாசமாக இருப்பாரா. இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் எல்லாம் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர்கள்.

    விசுவாசம் உள்ள ஒரு தொண்டராக இருந்தால் கூட, அந்த கட்சியில் அவரவர்கள் விருப்பப்படி கட்சி நடத்துவது தான் முறை. இதைத்தான் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்புவார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் கழகம் செயல்பட்டு வருகிறது. சில பேர் திட்டமிட்டு நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்த கட்சியை பிளக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று சில பேரின் தூண்டுதலின் பெயரிலே செயல்படுவார்கள் என்றால் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள்.

    கேள்வி:-ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களே?

    பதில்:-100 சதவீதம் ஒருங்கிணைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு இந்த ஊடகத்தின் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்கிறேன். அ.தி.மு.க.விற்கு எதிராக செயல்படுகிறவர்கள், மற்றவர்களின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பவர்கள், அ.தி.மு.க. இன்றைக்கு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வரும் இந்த சூழ்நிலையிலே வேண்டுமென்றே சில பேர், அ.தி.மு.க.விற்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையிலே அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

    இப்படி செயல்படுபவர்களுக்கு இந்த இயக்கத்தில் இடமில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தொண்டர்கள்தான் இன்றைக்கு தலைவர்களாக இருந்து வழி நடத்துவார்கள். தலைவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொண்டர்கள் தான் முன்னின்று அ.தி.மு.க.வை நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×