search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாரிய தலைவர் பதவி கேட்டு கூட்டணி கட்சியினர் நெருக்கடி- ரங்கசாமி ஆலோசனை
    X

    வாரிய தலைவர் பதவி கேட்டு கூட்டணி கட்சியினர் நெருக்கடி- ரங்கசாமி ஆலோசனை

    • கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.
    • கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடக்கிறது.

    ரங்கசாமி பதவியேற்று 2 ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 4 அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளை என்.ஆர். காங்கிரசாரும், சபாநாயகர், 2 அமைச்சர் பதவியில் பா.ஜனதாவினரும் உள்ளனர்.

    ஆட்சியில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாரிய பதவி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட இது எதிரொ லித்தது.

    எம்.எல்.ஏக்கள் பேசும் போது, அரசு சார்பு நிறுவன தலைவர்களாக தங்களை நியமித்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக செயல்படுத்துவோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

    ஏற்கனவே பா.ஜனதா தரப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான அ.தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனாலும் தேர்தல் உடன் படிக்கையின்படி தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாரிய பதவி அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் கடந்த 2 ஆண்டு காலமாக முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் சாதித்து வருகிறார். இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.

    இது வாரிய பதவியை மையமாக வைத்தே ரங்கசாமி பேசியதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் உற்சாகமாக கொண்டாடவில்லை. இதற்கு கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியமானது. இல்லாவிட்டால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர், எம்.எல்.ஏ.க்களை உத்வேகப்படுத்த தொகுதிகளில் வாக்கு பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பா.ஜனதா, அ.தி.மு.க. தரப்பிலும் வாரிய தலைவர் பதவியை வழங்கும்படி நெருக்கடி அளிக்கின்றனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.

    Next Story
    ×