search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பலி: உடலை தோளில் சுமந்து சென்ற நண்பர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×