என் மலர்
- லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின.
- தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும்.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இந்த நிலையில்தான் அரபிக்கடலில் பிபோர்ஜோய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
தற்போது பிபோர்ஜோய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதற்கேற்ப மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இது விவசாயத்திற்கு உகந்தது என்பதால் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் சாகுபடி பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. பிபோர்ஜோய் புயல் காரணமாக மழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று கூறியுள்ளது.
- நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
- ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.
பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-
ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
- குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தினார்.
- இவரின் செய்கையை கவனித்து வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கில்டாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

"அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன்.
- கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும்.
மதுரை:
மதுரை செக்கானூரணியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே துறை வரலாற்றிலேயே மிக கொடூரமான, கோரமான விபத்து ஒடிசாவில் ஏற்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது சதி வேலையா? என்பது பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அப்படி சதி வேலையாக இருக்குமானால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே ரெயில் பயணம் என்பதே ஆபத்தை உண்டாக்கும் என்கிற பயத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் இதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டுபிடித்து, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. இதில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி வைத்து செயல்பட்டது பாராட்டுக்குரியதாகும்.
மேலும் மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போதே மேகதாதுஅணை கட்டியே தீருவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும். அது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கிருஷ்ண ராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும். இது நமது தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்து. மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும் என்பதுதான் என் குற்றச்சாட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செய லாளர் முனியசாமி, பாஸ்கர் சேதுபதி, மகபூப்ஜான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த வைகோ, மதுரை 44-வது வார்டு கவுன்சிலர் தமிழ் செல்வியின் பேரனுக்கு ஆதித்த கரிகாலன் என்று பெயர் சூட்டினார்.
- என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
- தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது.
திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்...அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.
மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-
கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.
இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய குழுவினர், பயணிகளுக்கு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.
அந்த விமானம் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை ஏர் இந்தியா தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள குழுவினர், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர் என்றும், பயணிகளின் மருத்துவ உதவி, தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடர் பயணங்களுக்கான உதவிகளை செய்வார்கள் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்தது.
- இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தகவல்.
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
1960-க்களில் இருந்து இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என நியூயார்க் நகர சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலை, பல நாட்கள் வரை நீடிக்கும் என்றும், இது அவசரகால நெருக்கடி என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்தார்.
- அடுத்த 3 நாட்களில் புயல் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- புயல் பாதிப்புகளை சமாளிக்க மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், புயல் இன்று அதி தீவிர புயலாக வலுவடைந்தது உள்ளது. காலை நிலவரப்படி, கோவாவில் இருந்து 870 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையிலும், மும்பையில் இருந்து 930 கிமீ தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டிருந்தது. அடுத்த 48 மணிநேரத்தில் புயல் படிப்படியாக மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
- இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 பெண் போலீசார் மீதும் கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார்.
வண்டலூர் :
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பெண் போலீஸ் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா. இவர்கள் கடந்த 4-ந் தேதி இரவு மணிமங்கலம், படப்பை, கரசங்கால், சோமங்கலம் பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ஜூஸ் கடையில் உணவு பொருட்களை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோ காட்சியில் பதிவான விவரம் வருமாறு:-
படப்பையில் உள்ள ஒரு ஜூஸ் கடைக்கு பெண் போலீசார் 4 பேரும் செல்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு ஓசியில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு கடை உரிமையாளரிடம் போலீஸ் ஏட்டு ஜெயமாலா செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அப்போது அவருடன் ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா உடன் இருக்கிறார்கள்.
போலீஸ் ஏட்டு ஜெயமாலா கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து 6 சாக்லேட்டுகளை எடுத்து சக போலீசாரிடம் கொடுத்து விட்டு கல்லா பெட்டி பகுதியில் நின்றுக் கொண்டிருந்த கடை ஊழியரிடம் 'ஏன் சாண்ட்விச் போடவில்லை?' என்று கேட்கிறார்.
அப்போது ஊழியர் 'மிஷின் ரிப்பேர். அதனால் சாண்ட்விச் இன்று போடவில்லை' என்கிறார்.
உடனே 'இன்ஸ்பெக்டர் மேடத்துக்கு ஒரு ஜூஸ் போடு' என்று ஊழியரிடம் கேட்கிறார்.
இதற்கிடையே ஊழியர் தனது செல்போனில் இருந்து கடை உரிமையாளருக்கு போன் செய்து ஏட்டு ஜெயமாலாவிடம் கொடுக்கிறார்.
ஏட்டு ஜெயமாலா, 'மேடத்துக்கு ஜூஸ் வேணும். வாரத்துக்கு ஒரு ஜூஸ், ஒரு சாண்ட்விச் தர முடியாதா? நீ போலீஸ் நிலையத்திற்கு வந்து மேடத்தை பாரு, எப்ப வர 5 மணிக்கு வரியா. சரி உங்களுக்காகதான் நாங்க இரவு ரோந்து பணியில் ஈடுபடுகிறோம், எங்களுக்காக ஒரு ஜூஸ், சாண்ட்விச், 2 ரூபாய் சாக்லேட் தர முடியாதா?' என்கிறார்.
எதிர் முனையில் பேசிய கடை உரிமையாளர் , 'டீ மட்டும் குடித்துவிட்டு போங்க' என்கிறார். 'அந்த டீயை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது' என்று கேட்டுவிட்டு ஏட்டு ஜெயமாலா செல்போன் இணைப்பை துண்டித்து விடுகிறார்.
இதனை தொடர்ந்து அவர் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆடியோ உடன் தெளிவாக பதிவாகி இருந்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் பரபரப்பானது.
இந்த சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கடை உரிமையாளர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், டீ கடைக்கு சென்று ஓசியில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டது தொடர்பாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா ஆகிய 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜோடியை படப்பை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட மணிமங்கலம் போலீசார் மிரட்டி கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கி உள்ளனர். அவர்களை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
- தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.
ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.