search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.
    • கோவை ரைசிங் என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

    கோவை:

    தி.மு.க. சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவை ரைசிங் என்ற தலைப்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு:

    கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.

    கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.

    கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும். புதிய பசுமை தொழில் பூங்காக்கள் நிறுவப்படும்.

    நகை தொழில் புத்துயிர் பெறவும், கிரில் உற்பத்தியாளர்களுக்காகவும் கோவையில் சிட்கோ பூங்கா நிறுவப்படும்.

    விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்.

    பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கோழிப்பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சனைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார்.
    • மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தை கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன், மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பஜனை கோவில் வீதி, தாசம்பாளையம் கோவில் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஓடந்துரை ஊராட்சிக்குட்பட்ட கல்லார் பழங்குடியின கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

    அங்கிருந்த மக்கள், இதற்கு முன்பு இருந்த எம்.பி.க்கள் யாரும் எங்களுடைய கோரிக்கை எதனையும் நிறைவேற்றவில்லை என்றும், இந்த முறை கல்லார் கிராமத்தின் எல்லா வாக்குகளும் பா.ஜ.க.விற்கு தான் என்றும் கூறினார்கள்.

    அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது, இதற்கு முன் இருந்தவர்கள் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனால், நான் பொறுப்பேற்றவுடன் இந்த கிராமத்தை தத்தெடுத்து, இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்றார்.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார். அப்போது மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தை கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    • 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும்.

    கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்கள் இலவசமாக பயனடைய உள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரும் பொருட்செலவில் இந்த ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பரிந்துரைகள் துல்லியமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வுக்கூடத்தில் பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து அறியும் முழுமையான தானியங்கி கருவிகள், மண்ணின் அங்கக கரிம அளவை அறியும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆய்வக தொழிற்நுட்ப வல்லுனர் குழுக்களோடு மிக சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மண் பரிசோதனை சேவை முதற்கட்டமாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த சேவையை பெறும் விவசாயிகளின் நிலத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக செல்வார்கள். அங்கு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். பிறகு விவசாயிகளின் நிலத்தில் இருந்து பெறப்பட்ட மண், ஆய்வுக்கூடத்தில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.


    இந்த பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த வேளாண் வல்லுநர் குழு பயிர் ஆலோசனை மற்றும் உரப் பரிந்துரைகளை வழங்கும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தொடர் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்த இலவச மண் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மற்றும் மண்ணின் அங்கக வளம் பற்றி அறிந்து கொள்ளவும், பயிர்வாரியான ஊட்டச்சத்து தேவை மற்றும் மண்ணின் தன்மை முதலியவற்றை கருத்தில் கொண்டு உர மேலாண்மை செய்திடவும், பயிரின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை பெருக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெருமளவில் உதவி புரியும்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் 33 "மண் காப்போம்" இருசக்கர வாகனங்களின் பயணம் ஆதியோகி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதிலும் சென்று உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராமங்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்கு விரைவாக சென்று சேவையாற்ற முடியும். மேலும் விவசாயிகளை விரைவில் அணுகவும், புதிய சந்தைகளை திறம்பட கண்டறியவும் இந்த வாகனங்கள் உதவும் என்பதால் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.
    • 2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று காலை சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி இருக்க கூடிய ஒரு நபர் நரேந்திர மோடி மட்டுமே. பிரதமருக்கு என்று பொறுப்பு இருக்கிறது. பலம் இருக்கிறது.

    அந்த பொறுப்பில் இருந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். இத்தனை பிரதமர்கள் இருந்தாலும் மோடிக்கு என்று தனித்தன்மை இருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிக பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது.

    கடந்த 10 ஆண்டு ஆட்சியில் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறும். தனிநபர் வருமானத்தையும் இரட்டிப்பு செய்துள்ளோம்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவரையும் மையப்படுத்தி இந்த ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு என்று எண்ணற்ற மாபெரும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளது. வருடா வருடம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு உள்ளது.

    கடந்த 10 ஆண்டில் 4 கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்.

    பிரதமர் மோடி மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களின் வாழ்வை உயர்த்தி உள்ளார். நாடு நன்றாக இருப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    சிலர் பிரதமர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தலைவரின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.

    நாளையுடன் பிரசாரம் முடிய போகிறது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் இந்தியா கூட்டணி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காக்க என்னோடு வாருங்கள் என்று அழைக்கிறார். உங்களிடம் இருந்தும், உங்கள் குடும்பத்திடம் இருந்தும் மக்களை காக்க தான் நாங்கள் வீதியில் வந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    தமிழகத்தில் 21 இடங்களில் தான் தி.மு.க போட்டியிடுகிறது. 21 இடத்தில் நிற்கும் தி.மு.க. 543 பாராளுமன்ற தொகுதி உள்ள நாட்டில் எதனை போய் காப்பாற்ற போகிறார்கள்.

    மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.

    ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி உலகம் 3-வது உலக போரை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும், அதனுடைய தாக்கம் இந்தியாவில் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் என்பது உலகம் முழுவதும் பின்னி பிணைந்துள்ளது.

    2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார். உலக தலைவனை இந்தியாவில் இருந்து நாம் அனுப்ப உள்ளோம். உலக பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா இருக்கும். நமது வளர்ச்சியும் வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

    • விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி.
    • முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும்.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக பொள்ளாச்சிக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் மொத்தமே நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. அதில் பொள்ளாச்சியில் மட்டுமே இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன.

    விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி. இப்படி விவசாயிகளுக்காக செய்வது தான் திராவிட மாடல். ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.

    இலவச மின்சாரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 10 ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது. விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

    திராவிட மாடல் என்பது பெண்களுக்கானது. உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம் எல்லாம் உங்களுக்கானது. ஆனால் பெண்களுக்கான அரசாக மத்திய அரசு இல்லை. விவசாயிகளுக்காக பல நன்மைகளை செய்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசா அல்லது விவசாயிகளை விரோதிகள் போல பார்க்கும் மத்திய அரசா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு மக்களுக்காக வேலை செய்யும் அரசு.

    நாட்டுக்கு நல்லது செய்யும் அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே. இந்த பொய் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று பல்லடம் ரங்கநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது மிகப்பெரிய தேர்தல். ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்தியாவில் உள்ள 98 கோடி மக்களும் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகாலம் யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர்.

    நம்மிடத்தில் நரேந்திர மோடி என்ற ஒரு தலைவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு 5 ஆண்டு காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. 10 செம்மறி ஆடுகள் கூட ஒரு வாரத்தில் தங்கள் தலைவனையோ, தலைவியையோ தேர்ந்தெடுத்து விட்டு தான் அடுத்த வேலையை செய்யும்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர், யார் தலைவர் என்றே தெரியாமல் தத்தளிக்கும் நிலை தான் காணப்படுகிறது.

    இந்த தேர்தல் பிரதமருக்கான தேர்தல். அவர் எப்படிப்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அவர் எப்படி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்பதற்காக தான் நாம் வாக்களிக்கிறோம்.

    மோடியை தவிர அந்த நாற்காலியில் வேறு யாராவது பிரதமராக வந்து அமர்ந்தால் நாடு என்னவாகும் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள். எனவே நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.


    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. அதுவும் பிரதமர் மோடியே வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 4 கோடி மோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 3 கோடி மோடி வீடுகளை கட்டி கொடுப்போம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான, வளர்ச்சியான அரசியலை கொடுப்பது பா.ஜ.க மட்டும் தான்.

    100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் சம்பளமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை ரூ.174 தான் இருந்தது. கடந்த வாரம் வரை ரூ.284 சம்பளமாக வழங்கப்பட்டது. அதனை தற்போது ரூ.319 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தான் முழு பணத்தையும் கொடுக்கிறது. மாநில அரசு கொடுக்கவில்லை. ஸ்டாலின் கொடுக்க வில்லை.

    ஆனால் அவர்கள் வெறும் வாயில் ஒற்றை வரியில் பா.ஜ.க.வை உள்ளே விட்டு விடாதீர்கள். அவர்கள் வந்து விடக்கூடாது என்கிறார்கள். அதனை விளக்கும் வகையில் நாங்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம்.

    அந்த வீடியோவில் ஒரு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். அப்போது பின்னால் அமர்ந்து இருக்கும் மனைவி, தனது கணவரிடம் ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் கணவர் அதனை கண்டு கொள்ளாமல் நீ பேசாமல் வா என்கிறார்.

    இருந்தாலும் மனைவி மீண்டு பேச முற்படும் போது, கணவர், வேகமாக நீ வாக்கை மாத்தி போட்டு விடாதே. பா.ஜ.க உள்ளே வந்து விட போகிறது என்கிறார். அவர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள்.

    100 மீட்டர் தூரம் சென்றதும், ஒரு பூக்கடையில் கணவனும், மனைவியும் சண்டை போடுகிறார்கள். அந்த கணவன், பூக்கடையில் இருக்கும் பணத்தை எடுத்து டாஸ்மாக் கடைக்கு செல்கிறேன் என்கிறார். இன்னும் சில அடி தூரத்தில் செவிலியர்கள், அரசு பஸ் ஊழியர்கள் போராடுகின்றனர். இன்னும் சில 100 மீட்டர் தூரத்தில் காவல்துறை போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக ஆளுங்கட்சி பிரமுகரை கைது செய்து செல்கிறது.

    இதனை எல்லாம் மோட்டார் சைக்கிளில் செல்லும் கணவன், மனைவி பார்த்தபடியே செல்கின்றனர். அப்போது கணவர் சொல்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க வருவதற்கான நேரம் வந்து விட்டது என்று.

    உண்மையிலேயே தமிழகத்தில் பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளே வர வேண்டிய நேரம் வந்து விட்டது.இது மாற்றத்திற்கான நேரம். நிச்சயமாக ஒரு கட்சி நேர்மையான ஆட்சி கொடுக்கும் என்றால் அது பா.ஜ.கவால் மட்டும் தான் முடியும்.

    தமிழகத்தில் 33 மாத காலமாக ஆட்சியில் உள்ளனர். அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம் இருக்கிறது. இருந்தாலும் பணத்தை கொடுத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதுவும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்து விட்டு வீடு, வீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கொடுத்து வருகிறார்கள்.

    50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளால் நேரடியாக தேர்தலை சந்திக்க முடியவில்லை. பணத்தை கொடுத்து தான் வாக்குகளை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

    நாம் ஏதாவது கேட்டால் பணத்தை வாங்கி கொண்டு தானே வாக்களித்தீர்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள். 50 ஆண்டுகாலமாக நாம் ஏழையாக, வளர்ச்சியடையாமல் இருக்கிறோம். தமிழகத்தை திராவிட கட்சிகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்.

    நான் கோவைக்கு என்று 100 வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன். 500 நாட்களில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தி.மு.கவினர் போன்று 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்ற முடியாமல் பயந்து, பயந்து வர வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் 100 வாக்குறுதியை 500 நாளில் நிறைவேற்றுவோம். வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு கம்பீரமாக வருவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு .
    • அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு சூலூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இருகூர் பிரிவு பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது இரவு 10 மணி ஆகி விட்டதால் மைக்கை ஆப் செய்து விட்டு கையசைத்தபடி சென்றார்.

    இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் போலீசார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சேலஞ்சர் துரை, விஜயகுமார், சிதம்பரம் உள்பட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் காமாட்சிபுரம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பா.ஜ.கவினர் பிரசாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே பீளமேடு போலீசாரும் அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    • கடந்த 10 ஆண்டுகாலம் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், அப்பழுக்கற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார்.
    • தங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாததன் காரணமாகவே, உதயநிதி மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியனர் பிரதமரை விமர்சித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் கோவை மணியகாரம்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. பொதுவாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தலைவன் என்று ஒருவன் இருக்க வேண்டும். தலைவன் இல்லை என்றால் அதனை ஒரு போட்டியாகவே கருதமுடியாது.

    அதுபோன்று தான் எதிர்கட்சிகளில் யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியாமல் பயனித்து கொண்டிருக்கிறார்கள். எதிர் கட்சிகளில் யார் தலைவர், பிரதமர் வேட்பாளர் என்று தெரியாத சூழ்நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்ற சூழலில் தான் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

    நல்லவர்கள், வல்லவர்கள், தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்படுவது தான் மோடியின் அரசு. கடந்த 10 ஆண்டுகாலம் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், அப்பழுக்கற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார்.

    50 ஆண்டுகாலமாக இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் ஒன்றும் கிடையாது. ஆனால் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

    அடுத்து 3-வது முறையும் பிரதமராக மோடி தான் வருவார். பிரதமராக வந்ததும், அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்களை இப்போதே தனது கையில் வைத்திருக்கிறார். அந்த திட்டங்களை நோக்கி அவரது பயணம் உள்ளது. இப்படி ஆட்சிக்கு வரும் முன்பே திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறது பா.ஜ.க அரசு.

    தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் தான் அவர்கள் எப்போது பார்த்தாலும் மோடியை விமர்சித்து வருகின்றனர். விமர்சிப்பவர்களுக்கு தனது செயல்கள் மூலம் அவர் பதிலடி கொடுத்து வருகிறார்.

    தி.மு.க.வினர் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் உள்ளிட்டவற்றை கொடுப்பதாக கூறுகிறார்கள். அதனை அந்த கட்சியில் உள்ள அமைச்சர் மற்றும் எம்.பி ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.

    தி.மு.கவினர் மக்களுக்கு கொடுப்பது உரிமைக்காக அல்ல. உங்களுடைய வாக்குக்காக தான். அதனை கொடுத்து விட்டு ஏளனம் செய்வது தான் தி.மு.க.வின் வாடிக்கையாக உள்ளது.

    தங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாததன் காரணமாகவே, உதயநிதி மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியனர் பிரதமரை விமர்சித்து வருகிறார்கள்.

    அண்ணாமலை எந்த விவகாரமாக இருந்தாலும் புள்ளி விவரத்துடன் பேசுகிறார். அதனால் எதிர்கட்சிகள் அவரை பார்த்து பயப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
    • கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.

    ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.

    இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×