search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சென்னை அணிக்கு சவால் அளிக்குமா லக்னோ? இன்று மோதல்
    X

    சென்னை அணிக்கு சவால் அளிக்குமா லக்னோ? இன்று மோதல்

    • சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை.
    • லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 2 தோல்வி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன் குவித்த சென்னை அணி, 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருதுராஜ், ஷிவம் துபேவின் அரைசதமும், யார்க்கர் பந்து வீச்சில் மிரட்டிய பதிரானாவின் 4 விக்கெட்டும் வெற்றிக்கு உதவின. விக்கெட் கீப்பர் டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன் விளாசி கலக்கினார்.

    சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை. அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். மற்றபடி சென்னை அணி எல்லா வகையிலும் வலுவாகவே விளங்குகிறது. லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது. பந்து திடீரென எகிறுவதும், தாழ்ந்து செல்வதும் என்று இரு வித தன்மையுடன் காணப்படுகிறது. அதற்கு ஏற்ப வீரர்கள் ஆட வேண்டியது முக்கியம்.

    லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), 3 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் உள்ளது.

    கடைசியாக ஆடிய டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவிய லக்னோ வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. உள்ளூர் சூழல் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அவர்களின் பேட்டிங் ஒரு சேர 'கிளிக்' ஆகாதது தான் பின்னடைவாக உள்ளது. குயின்டான் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோரின் பேட்டிங்கையே அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யா, யாஷ் தாக்குர் ஓரளவு நன்றாக செயல்படுகிறார்கள். காயத்தில் சிக்கிய 'புயல்' வேக பவுலர் மயங்க் யாதவ் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டார். ஆனாலும் அவர் களம் காணுவாரா என்பதில் உறுதி இல்லை. மொத்தத்தில் ஒருங்கிணைந்து விளையாடினால் சென்னை அணிக்கு சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். நேற்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடிய லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு பிறந்த நாள் பரிசாக வெற்றிக்கனி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    சென்னை- லக்னோ அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா ஒன்றில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ:

    குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், குருணல் பாண்ட்யா, அர்ஷத் கான் அல்லது தீபக் ஹூடா, மொசின் கான், ரவி பிஷ்னோய், ஷமார் ஜோசப், யாஷ் தாக்குர்.

    சென்னை:

    ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×