search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.
    • பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும்

    வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.

    பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass ) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    திண்டுக்கல்:

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6-ந் தேதி நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட உள்ளது.

    நெல்லையில் தொடங்கி விருநகர், மதுரை, சென்னை வழித்தடத்தில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புண்ணிய தலங்களான காசி, அயோத்தி, திருவேணி சங்கமம், கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18650, குழந்தைகளுக்கு ரூ.17560 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன் பதிவு தற்போதே தொடங்கி விட்டதால் பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.
    • கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    திண்டுக்கல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கோடைகாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் 'epass.tnega.org' என்ற இணையதளத்தின் மூலம் நேற்று முதல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் அனைத்துக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன்மூலம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 919 பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளனர். இதில் கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் 28 ஆயிரத்து 168 சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கின்றனர்.

    இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலாப்பயணிகள் வடுகையால் கடும் போக்குவரத்து நெரிசல்.
    • அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    அதன்படி கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் நாளை (7-ந் தேதி) முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறையையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசு பஸ்களில் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விபரங்கள் நேரடியாக போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே அரசு பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    கொடைக்கானலுக்கு வருகை தர உள்ள சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் விபரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடும், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாள கோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோட்டுடனும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல், வெள்ளி நீர்வீழ்ச்சி, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் பெற்றுக் கொண்டால் போதுமானது.

    சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு தங்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து இ-பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் செல்போன் செயலி மூலம் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விபரங்களை தெரிந்து கொள்வார்கள்.

    இ-பாஸ் தொடர்பான துரித சேவைகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவையாகும்.

    இதில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில் மேட் விரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்ததால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எளிதாக இருந்தது. மேலும் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மே 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறு நாள் 22-ந் தேதி வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதனிடையே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திரக்கழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களுமு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர கழு வருகிற 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கிரிவலம் வரும் இந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மே தினம் என்பதால் நேற்று கொடைக்கானலுக்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக வருகை தந்தார்.

    பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். தனது ஓட்டலிலேயே நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பசுமை பள்ளத்தாக்கில் உள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார்.

    அதன்பின் விடுதிக்கு திரும்பியபோது ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    மே தினம் என்பதால் நேற்று கொடைக்கானலுக்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலைச்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கும், பேரிஜம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மோயர்பாயிண்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ஏரி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்ததுடன் படகு சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவரது அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் துர்கா ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக படகு குழாமுக்கு வந்த துர்கா ஸ்டாலினை நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையர் சத்தியநாதன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

    5 நாள் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி வரை இங்கு தங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அவர் சென்னை புறப்பட உள்ளார். இதற்காக கொடைக்கானல் ஓட்டலில் இருந்து கார் மூலம் பிற்பகலில் மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளார். இதனை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
    • துடைப்பத்தால் மாமன், மைத்துனர் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முதல் நாளில் கன்னியப்ப பிள்ளை பட்டியில் இருந்து அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    2-ம் நாளில் காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின்பு கிராமத்தில் உள்ள மாமன் மைத்துனன் உறவு முறை கொண்டவர்கள் உடல் முழுவதும் சகதியை பூசிக் கொண்டும், சணல் சாக்கு கட்டிக் கொண்டும், கயிற்றால் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்டும் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி கோவில் வளாகத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின் துடைப்பத்தை எடுத்து சகதியில் நனைத்து மாமன், மைத்துனர் உணவுமுறை கொண்டவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இவ்வாறு செய்வதால் அவர்களது உறவு வலுப்படும் என்று பல ஆண்டுகளாக இவ்வகை நேர்த்திக்கடனை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

    நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த உறவுகள் கூட இத்திருவிழாவின் போது ஒன்று கூடி துடைப்பத்தால் அடித்து உறவை மேம்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

    • நேற்று மாலை 6 மணி அளவில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார்.
    • கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவரை அந்த பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் பார்த்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்குச் சென்றார்.

    கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார். நேற்று மாலை 6 மணி அளவில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்குள்ள பசுமை புல்வெளியில் சிறிதுதூரம் நடந்து சென்ற அவர் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

    கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவரை அந்த பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் பார்த்தனர். அவருக்கு வாழ்த்தும், வணக்கமும் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    முதலமைச்சருடன் 'செல்பி'யும், புகைப்படமும் எடுத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு திரும்பினார்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது மகள் செந்தாமரை மற்றும் பேரன், பேத்திகளுடன் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


    • காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பையட்டிகிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பழமை வாய்த்த பிரசித்தி பெற்ற பெரியதுரையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, மூலவர், நவகிரக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோழிகளையும் பக்தர்கள் கருப்பண்ணசாமிக்கு பலியிட்டனர். இதைத்தொடர்ந்து அருகிலேயே ஆடுகள் உறிக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது. கோழி இறைச்சியும் தயாரானது. அதன்பிறகு கோவில் வளாகத்திலேயே சமையல் செய்யும் பணியும் நடந்தது. இதற்காக விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கு சாப்பாடு சமைக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி குழம்பும் தயாரானது. இதைத்தொடர்ந்து அன்னதானம் தொடங்கியது. மதியம் தொடங்கிய அன்னதானம் மாலை வரை நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து கோம்பைப்பட்டி பகுதியை சேர்ந்த துரைச்சாமி என்பவர் கூறுகையில், சித்திரை திருவிழா அன்று மழை வேண்டி 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது நேற்று மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கோம்பைப்பட்டி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றார்.

    • நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் நாளை செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள போடிகாமன்வாடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). இவர் விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது உறவினரான வீரக்கல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று வத்தலக்குண்டு சாலை போடிகாமன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

    இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×