search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • 2019 தேர்தல் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது.
    • தற்போது காங்கிரஸ் கர்நாடகா மாநில ஆளுங்கட்சியாக உள்ளது.

    இந்தியாவின் தென் மாநிலங்களில் கடந்த 2019 தேர்தலில் பா.ஜனதா மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது.

    சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற அம்மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

    இந்த முறை மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என சித்தராமையான தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "கர்நாடகா மாநிலத்தில் வாக்களார்களிடம் நல்ல வரவேற்று உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை பற்றி எனக்குத் தெரியாது. கர்நாடகா மாநிலத்தை பொருத்தவரை நாங்கள் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    தற்போது வழங்கப்பட்டு வரும் உத்தரவாத திட்டங்கள், அடுத்த முறை ஆட்சி அமைத்தால் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது. உத்தரவாத திட்டங்கள் தொடரும். அதற்காக பட்ஜெட்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

    கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 26-ந்தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு மே 7-ந்தேதியும் நடக்கிறது.

    • ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • பூஜா மாண்டியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு 1½ வயதில் திரிசூல், திரிஷா ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர்களது ஊருக்கு வாகனத்தில் கொண்டு வந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது. இதை பூஜா தனது 2 குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தார். பின்னர் அவரும் சாப்பிட்டார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மேலும் பூஜாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களை மாண்டியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இரட்டை குழந்தைகள் திரிசூல், திரிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பூஜா மாண்டியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் இந்த ஊரில் பலர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இரட்டை குழந்தைகள் மரணம் சந்தேகத்துக்கு உரியது என்று அரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • தசை பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மற்ற மாவட்டங்களில் 30-க்கும் குறைவானவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தற்போது வரலாறு காணாத வகையில் அனல் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. கர்நாடகாவில் குடகு மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடி வருகிறது.

    இதனால் தற்போது பகல் நேரங்களில் வேட்பாளர்கள் பிரசாரத்தையே ரத்து செய்து விட்டனர். கொளுத்தும் வெப்பம் காரணமாக வட கர்நாடகாவில் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தசை பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாகல் கோட் மற்றும் சித்ரதுர்காவில் தலா 50 பேர் வெப்ப பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கலபுரகியல் 39 பேரும், ராய்ச்சூரில் 38 பேரும், யாத்கிரியில் 35 பேரும், பெல்காம் பகுதியில் 32 பேரும் தட்சிண கன்னடாவில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 30-க்கும் குறைவானவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல் காற்று வீசுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உஷ்ண பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி தண்ணீர் குடியுங்கள், வெப்பநிலை அதிகரிப்பால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பல்வேறு உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    • பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
    • மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நாயனகோளி செக்போஸ்ட் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் 1100 பீர் பெட்டிகள் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

    மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10.77 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பீலகி படதின்னி கிராமத்தை சேர்ந்தவர் யங்கப்பா (50). இவரது மனைவி யல்லவ்வா (45). இவர்களுக்கு புந்தலிகா (22) என்ற மகனும், நாகவ்வா (20) என்ற மகளும் உள்ளனர். நாகவ்வாவுக்கு அசோக் (24) என்பவருடன் திருமணமாகி விட்டது. யங்கப்பாவிற்கு சொந்தமான வயல், ஹொன்யாலா கிராஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் வயலில் வேலை முடிந்ததும், வயலில் இருந்து யங்கப்பா உள்பட 5 பேரும் வெளியே வந்து சாலையோரம் நின்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.

    தகவல் அறிந்த பீலகி போலீசார் அங்கு சென்றனர். கவிழ்ந்த லாரி கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டது. இதில் லாரியின் அடியில் சிக்கிய 5 பேரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி ஓட்டுநர் காயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
    • வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே மாதம் 7-ந்தேதியும் நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 18-ந்தேதி சிவமொக்காவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.

    இந்த கூட்டத்தில் மைசூரு-குடகு தொகுதி வேட்பாளர் மைசூரு மன்னர் யதுவீர், மண்டியா தொகுதி வேட்பாளர் குமாரசாமி, ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் பால்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மைசூரு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் மாலை 6 மணி அளவில் மங்களூருவுக்கு செல்ல உள்ளார். முதலில் மங்களூரு கோல்டு பிஞ்ச் சிட்டி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்கிறது. மைசூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    லேடிஹில் நாராயணகுரு சர்க்கிளில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி லால்பாக், மங்களூரு மாநகராட்சி அலுவலகம், பல்லால்பாக், எம்.ஜி.ரோடு, பி.வி.எஸ். சர்க்கிள், கே.எஸ்.ராவ் ரோடு வழியாக ஹம்பன்கட்டா சிக்னல் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நடக்க உள்ளது. இந்த வாகன பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகன பேரணியின் போது பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இந்த வாகன பேரணியையொட்டி மங்களூரு நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாகன பேரணி நடக்கும் லேடிஹில் பகுதியில் இருந்து ஹம்பன்கட்டா சிக்னல் வரை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு பதற்றமான பகுதி என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கர்நாடக வருகையையொட்டி பா.ஜனதாவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது.
    • 'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது.

    இது தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன.

    எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது. அதனால்தான் '400க்கு மேல்' என உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர்.

    'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேர் கைது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    முன்னதாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • சகோதரிகள் இருவரும் பிளஸ் 2வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.
    • இரட்டையர்களான சுக்கி, இப்பானி சந்திரா இருவரும் 10-ம் வகுப்பில் 620 மதிப்பெண்கள் எடுத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் சுக்கி மற்றும் இப்பானி சந்திரா ஆகியோர் பிளஸ் 2 வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுக்கு முன் 10ம் வகுப்பு தேர்விலும் இருவரும் 625க்கு 620 மதிப்பெண்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக சகோதரிகளில் ஒருவரான சுக்கி கூறுகையில், இது ஒரு தற்செயலான நிகழ்வு. நாங்கள் எப்படி ஒரே மதிப்பெண் பெற்றோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை என்றார்.

    நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல, மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி என இருவரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே மதிப்பெண்கள் எடுத்த சம்பவம் பெங்களூருவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை.
    • தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா.

    கர்நாடகா அதிமுகவின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ராஜினாமா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க மறுத்ததால் அதிருப்தி என தெரிவிக்கப்படுகிறது.

    பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார்.

    ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எஸ்.டி.குமார் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும்.
    • போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3-ந்தேதி அழைப்பு வந்தது. அதில் கூரியர் நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன ஊழியர் பேசுவதாகவும், உங்களது முகவரியிட்டு அனுப்பப்பட்ட பார்சலில் 140 கிராம் போதை பொருள் இருந்ததாகவும், உங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறி அழைப்பை வேறு ஒரு நபருக்கு திருப்பிவிட்டார்.

    இதையடுத்து மும்பை சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி தனது பெயர் அபிஷேக் சவுகான் என அடையாளப்படுத்திக் கொண்டு அழைப்பில் இணைந்தார். அப்போது அவர் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். வழக்கில் இருந்து விடுவிக்க நாங்கள் சொல்வதை போல் செய்யுங்கள் என கூறி அந்த பெண்ணிடம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்து சாட்டிங் தொடங்கும்படி கட்டாயப்படுத்தினார். மேலும் உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து கடந்த 3-ந் தேதி மதியம் 2.15 மணி முதல் 5-ந் தேதி அதிகாலை 1.15 மணி வரை சுமார் 35 மணி நேரத்தில் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் பயத்தைகாட்டினர். அப்போது அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் போதைப்பொருள் சோதனைக்காக ஆடைகளை அகற்ற வேண்டும் என கூறினார். ஏறக்குறைய 36 மணி நேரம் நீடித்த ஒரே அழைப்பில், அந்த பெண் நிர்வாணமாக பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டார். ரூ. 15 லட்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுவதாக அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண் ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.10.7 லட்சத்தை அபிஷேக் சவுகான கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை 2 பரிவர்த்தனைகளாக அனுப்பி வைத்தார். இதனிடையே அபிஷேக் சவுகான் மேலும் ரூ.10 லட்சம் தருமாறு கேட்டார். இல்லையொன்றால் வீடியோவை வலைதளங்களில் வெளியிடப்படும். நீங்களும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்துபோன அந்த பெண் கடந்த 5-ந் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசாரை அணுகினார்.

    இதையடுத்து போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கூரியர் மோசடி தொடர்பாக எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டாம், உடனடியாக சைபர் காவல்துறையை தொடர்பு கொள்ளவும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், போலி கூரியர் மோசடி மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நபரை அழைத்து தங்கள் பெயரில் ஒரு கூரியரில் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக தெரிவிக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் கூரியர் நிறுவன ஊழியர்களாக காட்டிக்கொண்டு பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×