search icon
என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.
    • நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியுடன் இணைந்து தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.

    இது குறித்து பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதிலிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்த போது அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். இதையறிந்த நான் என் நண்பரின் காரில் ஓசூர் நோக்கி சென்றேன்.

    கிருஷ்ணகிரியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மனூர் அருகே சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளில் வந்த நாம் தமிழர் கட்சியினர், எங்கள் காரை வழிமறித்து என்னையும் என்னுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில் நீ போட்டியிட கூடாது. நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்:

    ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணமின்றி ரூ.10 லட்சம் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (35) என்பவர், பேரண்ட பள்ளி பகுதியில் கிரஷர் கம்பெனி நடத்தி வருவதாகவும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பெங்களூரிலிருந்து பணம் வாங்கி வந்ததாகவும் தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட அந்த பணத்தை, அதிகாரிகள் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், உதவி கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர்.

    இதே போல், ஓசூர் அம்பாள் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த தினேஷ்குமார் (45) என்பவர் வங்கியில் செலுத்த, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60,000/- பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓசூர் அருகே உள்ள கக்கனூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பெங்களூரை சேர்ந்த காய்கறி வியாபாரி அன்னையப்பா (65) என்பவர் காரில் எடுத்து வந்த 2 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் ஓசூர் கொத்தூரில் காய்கறி வாங்கியதற்காக செலுத்த வேண்டிய பணம் என்பது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி கிராம பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் பெட்ரோல் பங்கில் வசூலான பணம் என தெரிய வந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும், ஓசூர் இஎஸ்ஐ ரிங் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் சென்ற ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த சின்னராஜ் (40) என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கட்டுமான தொழிலுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஓசூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஓசூர் ராம்நகரில், கலெக்டர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் பஸ் நிலையம் அருகே ஒரு கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூனை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எம். சரயு பறக்கவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஓசூர் ராம்நகரில், கலெக்டர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர், அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே, அணி வகுப்பு நிறைவடைந்தது.

    இதில், டிஎஸ்பி பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மத்திய பாதுகாப்பு படை போலீசார் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை, அதை நிறைவேற்றியே தீருவோம் என்று கோஷங்களை முழக்கினர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

    மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம், அதனை தடுத்தே தீருவோம் என்று என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். மழைக்காலங்களில் உபரிநீர், கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.


    அந்த அணைவிலிருந்து மேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கும் நீர் பாய்ந்து சென்று, தமிழக மக்களுக்கும் பயன்படும். எனவே, இதில் அரசியல் செய்ய வேண்டாம். பெங்களூரு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் குடிநீர் இல்லாத காரணத்தால் அங்கு வாழும் தமிழ் மக்களை, தமிழ்நாட்டுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள தயாரா? எனவே, மேகதாது விவகாரத்தில் , விளையாட வேண்டாம். ஓசூர், தாளவாடி, மற்றும் நீலகிரியை கர்நாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேகதாது போராட்டத்திற்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், அங்கு, அணை கட்டுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திற்கு வரக்கூடாது.

    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். எல்லைப் பகுதிகளை அடைப்போம் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    • மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.

    மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.

    அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
    • மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலளாம் மலைபகுதி, கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரமான மலை கிராமம் என்பதால், பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் அப்பகுதியில் நிலங்களை விலைக்கு வாங்கி ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், தேன்கனிக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில், ஆயிரம் அடிவரை அழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைப்பதில்லை.

    இந்நிலையில், பெட்டமுகிலாளம் மலை பகுதி, காவேரி வடக்கு உயிரின சரணாலய பகுதியாக உள்ளதால், மண் வளம், வன உயிரினங்களை பாதுகாக்க, ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், பெட்டமுகிலாளம் மலை பகுதிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோடு, பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடியாததால், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று அய்யூர்- பெட்ட முகிலாளம் சாலையில் உள்ள வனத்துறை விடுதி அருகே, அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியல் செய்தனர். மேலும், அவர்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கோஷங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த எர்ரஅள்ளி கருகன்சாவடி சேர்ந்தவர் வேலன் (வயது42).

    இவர் குடிநீர் தொட்டி டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை 5 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் ஏழுஜடை முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஏரி அருகேமின் மோட்டார் அணைக்க சென்றார்.

    அங்கு அதே பகுதியை சார்ந்த முனியப்பன் என்பவர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து வேலன் முனியப்பனுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியால் வேலனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே வேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து அந்த பக்கம் சென்றவர்கள் வேலன் கீழே பிணமாக இருப்பதை பார்த்து உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து வேலனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஏரியில் இருந்த மீன் ஷெட்டுக்கு தீ வைத்தனர்.

    இதனால் மீன்பிடிக்கும் செட்டுக்குள் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்தது.

    பின்பு பாலக்கோடு ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். பின்பு அவர்கள் அங்கிருந்து காவேரிப்பட்டணம்-சேலம் மெயின் ரோடு, பாலக்கோடு பிரிவு சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பேப்பருக்கு தீவைத்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அவர்களை சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. அப்பொழுது அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதனை அடுத்து வேலனை கொலை செய்த முனியப்பன் தருமபுரிக்கு தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் உடனே விரைந்து வந்து தருமபுரி பஸ் நிலையத்தில் தலைமறைவாக இருந்த முனியப்பனை நேற்று இரவு கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள்ளாகவே கொலையாளி முனியப்பனை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    மேலும் 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து கடையில் மது பானங்கள் விற்கப்படுகிறது.

    குறிப்பாக பாலக்கோடு ரோட்டில் உள்ள சந்து கடையில் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களை குடித்துவிட்டு வீண் தகராறுகள் ஏற்பட்டு தற்போது நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்றனர்.

    எனவே இப்பகுதியில் உள்ள சந்துகடைகளில் 24 மணிநேரமும் நடைபெறும் மது விற்பனையை உடனடியாக அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
    • உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலை அருகே சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள ஒரு தையற் கடையில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்குமார் ஆகிய இருவரும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.

    பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து, சப்- கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், எந்தவித அனுமதியின்றியும் மத்திய அரசின் திட்டத்தில் கடனுதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு விநியோகித்த விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள், கணினிகளை பறிமுதல் செய்தும், மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில்:-

    "தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம், ஆனால் இங்கு உரிய அனுமதி பெறாமல் தையற் கடையில் வைத்து சிலர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது போன்ற செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினார்.

    உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    • பா.ஜ.க. ஏற்பாடு செய்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா தமிழர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
    • அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசினார். பா.ஜ.க. சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது அவர் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

    அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.

    இதற்கிடையே, கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் வருத்தம் அடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்தை வாபஸ் பெறுகிறேன் என மத்திய மந்திரி ஷோபா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

     இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் கூறியதாவது:

    அமைதியாக வளர்ச்சியை நோக்கிச் செல்லும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பற்றி மத்திய மந்திரி ஷோபா கரந்தலஜே கூறியது கடும் கண்டனத்திற்கு உரியது.

    அமைதியை விரும்பும் கிருஷ்ணகிரி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வேலையாகவே பா.ஜ.க. மந்திரியின் இந்த செயலை நான் பார்க்கிறேன்.

    அன்று கோட்சே எப்படி தேசத்தந்தை காந்தியை கொலை செய்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தானோ, அதே திட்டத்தை தான் இன்று பா.ஜ.க. எனது கிருஷ்ணகிரி தொகுதியில் திட்டமிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
    • சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×