search icon
என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதனையடுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர். 

    • சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க.வும், காங்கிரசும் வாரிசு அரசியல் நடத்துகின்றன.
    • மோடி 3வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி என்றார் ராஜ்நாத் சிங்.

    நாமக்கல்:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங், திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து கையசைத்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன்பின், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்றவாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:

    தமிழ் கலாசாரம் மிகச்சிறந்த பாரம்பரியம் மிக்க கலாசாரம் ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் 30 ஆண்டுகளில் இந்தியாவுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார். அதனால் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் மரியாதை தருகின்றனர்.

    2014-ம் ஆண்டுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு வந்து உள்ளது. 2027-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3-வது இடத்திற்கு வருவது உறுதி.

    கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மோடி 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி.

    தமிழகத்தில் உள்ள தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் கூட்டணி அமைத்து தங்களது குடும்பம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்றனர்.

    நாம் உலக அளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, நமது விமானப்படை, தரைப்படை உள்ள அனைத்து ராணுவ பிரிவுகளும் மிகவும் பலம் மிக்கது. நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது எவ்வித ராணுவ தளவாடங்களும் இறக்குமதி செய்யப்படுவதில்லை.

    பிரதமர் மோடி தலைமையில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அதிக சக்தி கொண்ட மிகப்பெரிய நாடாக மாறும். எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்
    • நாமக்கல் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோவில் பங்கேற்றார்

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    அப்போது பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் என்று சொல்வதற்கு பதிலாக ரங்கராஜன் என்று ராஜ்நாத் சிங் கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த கே.பி.ராமலிங்கம் தனது பெயர் ரங்கராஜன் கிடையாது ராமலிங்கம் என கூறினார். பின்பு கே.பி.ராமலிங்கதிற்கு வாக்களியுங்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது.
    • திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    நாமக்கல்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    இதில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரோடு ஷோவின் போது சாலையோரம் திரண்டு இருந்த மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். மத்திய மந்திரி வருகையையொட்டி அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நாமக்கல்லில் டிரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் உமா உத்தரவிட்டு இருந்தார்.


    • ராஜநாத் சிங் டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
    • பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    நாமக்கல்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நாளை காலை 9 மணியளவில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ" செல்ல உள்ளார். இதற்காக மத்திய மந்திரி ராஜநாத் சிங் டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்காக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து நேராக ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி. கல்லூரிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு சென்று ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

    இந்த ரோடு ஷோவானது நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கி, சேலம் சாலை சந்திப்பு, நேதாஜி சிலை மற்றும் பஸ் நிலையம் வழியாக நடைபெற்று மணிக்கூண்டு பகுதிக்கு சென்றடைய உள்ளது. அப்போது தேர் நிலைய பகுதியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொது மக்களிடம் பேசுகிறார். இதில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அங்கிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மத்திய மந்திரி நாமக்கல் வருகையையொட்டி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    நேற்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே ரூ.7.86 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

    சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார்.
    • காலை முதல் இரவு வரை சோதனை நடத்தப்பட்டதில் பணம் பறிமுதல்.

    நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் 4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் நாமக்கள் எஸ்பிஐ வங்கியில் ஒப்படைத்துள்ளனர்.

    பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் ஒரு குடோனில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

    இச்சோதனையில் 5400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் காலி மது பாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் அடிப்படையில் வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ், விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    இதில் வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் என்கிற மாதேஸ்வரன் தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அப்பகுதிகளில் விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் 50 லிட்டரை கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபானம் தயாரித்த குடோனில் இருந்து ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்? எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர்? என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பிடிபடுவார்கள் என தெரியவருகிறது.

    • டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
    • கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ராசிபுரம்:

    சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அ.தி.மு.க. கட்சி சின்னம் பதித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசர்ட்டுகள் இருப்பது தெரிய வந்தது. டி சர்ட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மூர்த்தி (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட டி சர்ட்டுகளின் மதிப்பு ரூ.2லட்சத்து 36ஆயிரத்து 250 என தெரிய வந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    • பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள குப்பை மேட்டில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து எருமப்ப ட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குப்பைமேட்டில் இறந்து கிடந்த பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குப்பைமேட்டில் இறந்த பெண் சிசுவை வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ ர்கள் எருமப்பட்டி மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    ×