search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டு கடந்த பேருந்துகளை மாற்றி புதியவற்றை வாங்க வேண்டும்
    • பழைய பேருந்துகளை பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்

    திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுனர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

    புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்.
    • இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

    மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாகூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

    பலமுறை சம்மன் அனுப்பியும் பிரக்யாக சிங் ஆஜராகாமல் இருந்தார். தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலையில், ஏப்ரல் 25-ந்தேதிக்குள் (இன்று) நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜரானார். அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், உள்ளங்கையால் கையெழுத்து போட முடியாததால் கைரேகை வைக்க அனுதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கேள்வி- பதில் வடிவில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.

    பிரக்யா தாகூர் உள்ளிட்ட ஆறு பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணையை சந்தித்து வருகிறார்கள்.

    மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றது.

    முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது. அதன்பின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)க்கு மாற்றப்பட்டது.

    • திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது
    • அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்

    திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

    எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • 2022-ல் சுமார் 900 கைதிகள் தப்பிச்சென்றனர்.
    • கட்டமைப்புகள் அரிதாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கைதிகள் தப்பிக்க மிகவும் எளிதாகிவிட்டன.

    நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா அருகே உள்ள நைஜர் மாநிலத்தின் சுலேஜா என்ற இடத்தில் பழமையான சிறைச்சாலை ஒன்று உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்து வேலி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சிறைத்துறையினர் மற்றும் மற்ற ஏஜென்சிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 கைதிகளை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சுலேஜாவை ஒட்டியுள்ள மாநிலத்தில் அடர்ந்த காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டால் பிடிக்க கஷ்டமாகிவிடும் என அதிகாரிகள் பயப்படுகின்றனர். அந்த காடு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள கும்பல் அதிகமாக வாழ்ந்து வரக்கூடிய இடமாகும்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நைஜீரியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாக, 1960-க்கும் முன் காலனி ஆதிக்கத்தில் கட்டப்பட்டதாகும்.

    கட்டமைப்புகள் அரிதாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கைதிகள் தப்பிக்க மிகவும் எளிதாகிவிட்டன. அபுஜா ஜெயிலில் இருந்து இதுபோன்று ஆயிரம் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 2022-ல் சுமார் 900 கைதிகள் தப்பிச்சென்றனர்.

    • காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு
    • புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்

    சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:

    மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம்.

    புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். சில விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். வேறு எந்த ஊடுப்பயிருலும் இந்தளவுக்கு அதிக லாபம் எடுக்க முடியாது. மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

    இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.

    குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் திரு. சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.

    இதுமட்டுமின்றி, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும்.

    இக்கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சியில் உள்ள முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன் அவர்களின் இயற்கை விவசாய பண்ணையில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
    • புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். 

    • சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு

    1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக ஜானகிராமன் என்பவர் பொறுப்பு வகித்துள்ளார்.

    மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி பெயரிலும் அப்போதைய மதிப்பில் 32 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

    இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுற்ற நிலையில், முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் இரண்டாம் குற்றவாளியான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

    மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    • மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
    • ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.

    • அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
    • சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது

    ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

    இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.

    மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.

    பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    • கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.

    மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

    ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவு.
    • தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ×