search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
    • கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

    கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.

    அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.

    கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

    தேர்தலில் போட்டியிட 39 தொகுதிகளிலும் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் போது பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு அரசியல் கட்சியினர் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    வேட்புமனுவை வாபஸ் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளையே வெளியிடப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து தினமும் அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அருகே தடங்கம் பி.எம்.பி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் அனைத்து கட்சி தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் முற்றுகையிட்டு போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டல் ஹைவே இன் அருகில் அவர் பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பல்லாவரம் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலை, அன்னை தெரேசா பள்ளி அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் 11.30 மணிக்கு ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு ஆலந்தூர் கோர்ட்டு அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு பல்லாவரம் சந்தை ரோடு பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு தாம்பரம், சண்முகம் சாலை, காந்தி மார்க்கெட் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் காலை 11 மணியளவில் சென்னை மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தேரடி சந்திப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில் அவர் ஓட்டு சேகரிக்கிறார். பின்னர் இரவு 7 மணியளவில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணிக்கு வேளச்சேரி திருவள்ளுவர் நகரில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை 8 மணி முதல் அவர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தலைவர்கள் பலர் முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம், வேகம் எடுத்துள்ளது.

    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.
    • வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.

    4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்றி பாராளுமன்ற கணக்கையும் தொடங்கியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    அதற்கான செயல் திட்டங்களை ஒரு ஆண்டுக்கு முன்பே டெல்லி மேலிடம் தொடங்கி விட்டது.


    வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். 39 தொகுதிகளிலும் பரவலாக கவனம் செலுத்துவதைவிட வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப் பயண திட்டமும் வகுக்கப்பட்டது.

    பலம் வாய்ந்த, பிரபலமான வேட்பாளர்களை களம் இறக்கி மோத வைத்துள்ளது. கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து டாக்டர் தமிழிசையை தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது தவிர அண்ணாமலை, ராதிகா சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் என்று பல பிரபலங்களை பல தொகுதியில் போட்டியிட வைத்து உள்ளது.

    மக்களிடம் அறிமுகமான முகங்களை போட்டியிட வைப்பதன் மூலம்தான் அந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்புடன் வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தது.

    களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் அந்த வியூகத்தையும் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 10 முதல் 15 தொகுதிகளில் பா.ஜனதா 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


    இந்த தகவலை திமு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பென் நிறுவனம் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறது.

    அந்த அறிக்கையை பார்த்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து விட்டு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எந்த தொகுதியிலும் 2-ம் இடத்தை பா.ஜனதா பிடித்து விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே போன்ற தகவல் சென்றுள்ளது.

    அவரும் அசந்து போனது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலளர்களை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரிந்து நிற்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற மிதப்பில் தி.மு.க.வினரிடம் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்பது உண்மை. இதனால் கூட தலைவர் இப்படி உசுப்பி விட்டிருக்கலாம் என்றார்கள்.

    • பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    சாதாரண ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட, டாக்டர் பாரிவேந்தர், மக்களின் பெரும் ஆதரவை பெற்று, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும், உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு, உலகத் தரக் கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்க தக்க செயல்களை செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற மக்களவை சென்ற டாக்டர் ப்பாரிவேந்தர், மக்களவையில் 268 முறை கேள்விகள் எழுப்பியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதங்களில் முப்பத்தி ஒன்பது முறை பங்கேற்றுள்ளார், இரண்டு முறை தனி நபர் மசோதா கலந்து கொண்டுள்ளார். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, இலவச கல்வி உதவி திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மொத்தம் ஆயிரத்தி இருநூறு மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு, நூற்றி இருபத்தாறு கோடி ரூபாயை தமது SRM பல்கலைக்கழகம் மூலம் வழங்கினார். டாக்டர் பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்..

    டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு, சொந்த நிதியிலிருந்து boreவெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில், தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் பதினெட்டு லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் முப்பத்தொன்பது லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, ரூபாய் இருபது லட்சம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைத்தல் ருபாய் இரண்டு புள்ளி ஐம்பது லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ருபாய் மூன்று லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ருபாய் நாற்பது லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர், ருபாய் இருபத்தி நான்கு லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ருபாய் ஏழு லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை, ருபாய் ஒன்பது லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் CCTV கேமரா, ருபாய் பத்து லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ருபாய் ஐந்து புள்ளி இருபத்தெட்டு லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.


    தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி, ரூபாய் முப்பத்தியோரு கோடி ஐம்பத்தாறு லட்சம், CCTV கேமரா ரூபாய் மூன்று லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் நான்கு லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி-கண்ணனூர் ஊராட்சியில், பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் 31 லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் 2.74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம், ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 31.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம், முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் 27 லட்சம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம், ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    டாக்டர் பாரிவேந்தர் தொகுதிக்கு செய்த உள்கட்டமைப்புகள்

    டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வரலாற்று மிக்க சிறப்பு திட்டங்கள் தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு சொந்த நிதியிலிருந்து போர்வெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு செய்த பணிகள் என்ன?

    டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 39 லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக 20 லட்சம் ரூபாய், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்தல் ரூபாய் 2.50 லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 3 லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ரூபாய் 40 லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர் ரூபாய் 24 லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ரூபாய் 7 லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை ரூபாய் 9 லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமரா ரூபாய் 10 லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ரூபாய் 5.68 லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.

    தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி ரூபாய் 3156 லட்சம், சி.சி.டி.வி. கேமரா லால்குடி ரூபாய் 3 லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் 4 லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி. கண்ணனூர் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் 31 லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் 2.74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.


    தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 31.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம் முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் 27 லட்சம், தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம் ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    தமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தண்ணீர் தொட்டி ரூபாய் 2.50 லட்சம், மண்ணச்சநல்லூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூபாய் 33 லட்சம், சனமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைத்தல் ரூபாய் 37.30 லட்சம், சிறுகுடி ஊராட்சியில் இரண்டு வகுப்பறை அமைத்தல் ரூபாய் 33.56 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    எழுச்சி மிக்க தலைவராக டாக்டர் பாரிவேந்தர் செயல்படுவது எப்படி?

    டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாக திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் 118 கோடியே 77 லட்சத்து 51 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு படிப்புகளில் 1,200 மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்துள்ளார். இதனிடையே, கொரோனா பேரிடர் கால உதவிகளை ரூபாய் 2 கோடியே ரூபாய் 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும். மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூபாய் 1 கோடியே 9 லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றி உள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூபாய் 4 கோடியே 80 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 126 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளை பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.

    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

    • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டப் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வாளகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் வருகிறார். இரவு அவர் சேலத்தில் தங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டப் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டம் நடைபெறும் பகுதியைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி. பவனேஸ்வரி தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மேற்பார்வையில் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெப்பத்தை தணிக்கும் வகையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சென்னையில் கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில் ஆட்டோ ரிக்ஷாவில் தனித்துவமான சில மாற்றங்களை டிரைவர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் முன்புறம் டிரைவர் ஒருவர் குழாய் பொருத்தி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரமேஷ் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவில் ஆட்டோவின் முன்புற கண்ணாடி அருகே ஒரு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதில் வெப்பத்தை தணிக்கும் வகையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் குறுகலான இடத்தில் செல்லும் போது அதன் நகர்வுக்கு ஏற்ப காற்றின் வேகத்தை அதிகரித்து டிரைவருக்கு ஏ.சி. போன்று குளிர்ந்த காற்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
    • தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    மன்னார்குடி:

    திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.

    அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.

    தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    • சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.

    தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.

    நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.

    • பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், விழிப்புணர்வையும் செய்து வருகின்றனர்.

    கிராமங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டும், நகரங்கள், கல்லூரிகளில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பரத நாட்டியம், பாடல்கள், இசை கருவிகள் இசைத்தல், வீணை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, மாணவிகள் முன்னிலையில் வீணை வாசித்து 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும், தேர்தல் அலுவலர் லட்சுமீ சுமார் ½ மணி நேரம் வீணை வாசித்து அசத்தினார். இவரை தொடர்ந்து சேலம் இசை பள்ளி மாணவிகள் வீணை வாசித்தும், பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
    • கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.

    ஏ.டி.எம். மையங்களில் நின்று கொண்டு அங்கு வரும் கிராமப்புற பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் பணம் எடுத்து தருவதாக அவர்களது கார்டை வாங்கி அந்த பணத்தை திருடிச் சென்றார். இவர் மீது தேனியில் 3 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3, ராஜபாளையத்தில் 2, வாலந்தூரில் 2, செக்காணூரணியில் 2, திருமங்கலத்தில் 3, சென்னையில் 1, ஆந்திராவில் 2, கேரளாவில் 1, கர்நாடகாவில் 4 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் தேடி வந்தனர்.

    இவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.

    கடைசியாக அவர் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவரது புகைப்படத்தை கைப்பற்றி தேனி உள்பட பல்வேறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் போடி வந்து தம்பிராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×