search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஒன்றில் பலவானவன்!
    X

    ஒன்றில் பலவானவன்!

    • பிள்ளைகளோடு காட்டும் தந்தை நிலையை மனைவியோடு நீங்கள் காட்ட முடியாது.
    • ‘நீங்கள் குதர்க்கம் பேசுகிறீர்கள். எல்லா உறவுக்குள்ளும் நான் ஒருவன் தானே இருக்கிறேன்’ என்பீர்களாக்கும்.

    கம்பர் இறைவனைப் பற்றிப் பேசுகையில், 'ஒன்றே என்னின் ஒன்றேயாம் பல என்றுரைக்கின் பலவேயாம்' என்று பாடியிருக்கிறார். ஒன்று எப்படி பலவாகும். பலது எப்படி ஒன்றாகும்? இது குழப்பமாக இல்லையா? என்று அன்பர் ஒருவர் கேட்கிறார்..

    குழம்புவதற்கு இதில் என்ன இருக்கிறது? கம்பர் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். ஒன்று பலவாவதையும், பலது ஒன்றாவதையும் சாதாரணர்களாகிய நமது வாழ்க்கையிலேயே காணக்கூடியதாக இருக்கையில், எல்லாம் வல்ல இறைவனிடம் அத்தன்மை இருப்பதில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது?

    கொஞ்சம் விளங்கச் சொல்கிறேன்! உதாரணத்திற்கு உங்களேயே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரா பலரா? என்று கேட்டால், "நான் ஒருவன்தான்" என்று பதிலளிப்பீர்கள். ஆனால் ஒருவராகிய உங்களுக்குள்ளேயே பலர் இருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? அது எப்படி என்று முதலில் சொல்லுகிறேன்.

    உங்களின் பெற்றோருக்கு நீங்கள் மகன்.

    உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன்.

    உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தந்தை.

    உங்கள் மாமனுக்கு நீங்கள் மருமகன்.

    உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் மாணவன்,

    உங்கள் மாணவனுக்கு நீங்கள் ஆசிரியர்.

    அலுவலகத்தில் நீங்கள் ஊழியன்.

    இப்படி உங்களுக்குள்ளேயே பலர் இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

    'நீங்கள் குதர்க்கம் பேசுகிறீர்கள். எல்லா உறவுக்குள்ளும் நான் ஒருவன் தானே இருக்கிறேன்' என்பீர்களாக்கும். உண்மைதான்.

    எல்லா உறவுகளுக்குள்ளும் நீங்கள் ஒருவரே இருந்தாலும், அந்தந்த உறவிற்கேற்ப உங்கள் நிலை மாறுகிறதா இல்லையா?

    பிள்ளைகளோடு காட்டும் தந்தை நிலையை மனைவியோடு நீங்கள் காட்ட முடியாது.

    மனைவியோடு காட்டும் கணவன் நிலையை உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் காட்ட முடியாது.

    ஒவ்வொரு உறவுக்கேற்பவும்,

    உங்கள் நிலை மாறுகிறது..

    உங்கள் பண்பு மாறுகிறது..

    உங்கள் இயல்பு மாறுகிறது..

    இவ்வளவும் மாறும் பொழுது நான் ஒருவன்தான் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?

    சிலரோடு தொடர்பு வைத்திருக்கும் உங்களுக்கே இத்தனை வடிவங்களும், இத்தனை நாமங்களும், இத்தனை பண்புகளும் இருக்கும் போது, இந்த பிரபஞ்சம் முழுவதுடனும் தொடர்புபட்டிருக்கும் இறைவனுக்கு பல வடிவங்களும் பல நாமங்களும், பல பண்புகளும் இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

    அதனால் தான் கம்பர் இறைவனை ஒன்றானவன் என்றும் பலவானவன் என்றும் உரைத்தார். இப்போது உங்கள் குழப்பம் தீர்த்ததா?

    -இலங்கை ஜெயராஜ்

    Next Story
    ×