search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவை போல் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்கும்- மோடி குற்றசாட்டு
    X

    கர்நாடகாவை போல் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்கும்- மோடி குற்றசாட்டு

    • கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது
    • மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது

    கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.

    வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

    அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது

    மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு எதிரானவர். ஆனால் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்ற ஆபத்தான தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு யுக்திகளை கையாள்கிறது.

    கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டவிரோதமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. முஸ்லிம்களின் அனைத்து சாதியினரும் ஓபிசி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஓபிசியினருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, மதத்தின் அடிப்படையில் அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறையை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

    "ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் மத்தியப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக அறியப்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இங்கு வளர்ச்சி தொடங்கியது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    Next Story
    ×