search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சண்டிகர்:

    17-வது ஐ.பி.எல். சீசனின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதனால் களத்திலேயே நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு பீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது.
    • இறுதியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை போராடி வென்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து 77 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அந்த நேரத்தில் ஷஷாங்க் சிங்- அசுதோஷ் சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தது. ஷஷாங்க் சிங் 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது. அதிரடியாக விளையாடிய அசுதோஷ் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 15 ஓவரில் 141 ரன்கள் எடுத்திருந்தது.

    அந்த நிலையில் 16-வது ஓவரை மும்பை அணியின் மத்வால் வீசினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய இந்த ஜோடி 3 சிக்சர் உள்பட 24 ரன்கள் குவித்தது. இதனால் 16-வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 165 ரன்கள் குவித்தது. இதனால் 24 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மிகவும் பதட்டமாக காணப்பட்டார். அப்போது டைம் அவுட் கேட்கப்பட்டது. டைம் அவுட் முடிந்த நிலையில் இருந்து ரோகித் சர்மா பீல்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் ஆலோசனை நடத்துவது என கேப்டனாகவே மாறிவிட்டார். இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    மேலும் சிங்கம் படத்தில் சூர்யா charge எடுப்பது போல ரோகித் சர்மா எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
    • ஹம்பி 6 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், வைஷாலி 5.5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 12-வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 57-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 4-வது வெற்றியாகும். அப்சோவை 2-வது முறையாக வீழ்த்தியுள்ளார்.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 12-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார் . கறுப்பு நிற காய்களுடன் விளையாடி பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அமெரிக்கா வீரர் பேபியானோவிடம் தோல்வியை தழுவினார். இன்னொரு ஆட்டத்தில் ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரான்சை சேர்ந்த பிரவுசியாவை தோற்கடித்தார்.

    12 சுற்றுகள் முடிவில் குகேஷ், இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா ஆகிய 3 வீரர்கள் தலா 7.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பேபியானோ 7 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா 4.5 புள்ளியுடன் 7-வது இடத்திலும், அப்சோவ் 3 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர். இன்னும் 2 சுற்றுகளே எஞ்சியுள்ளன. இன்று ஓய்வு நாளாகும்.

    பெண்கள் பிரிவில் வைஷாலி 12-வது சுற்றில் வெற்றி பெற்றார். உக்ரைன் வீராங்கனை அன்னா முசிசெக்கை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.

    ஹம்பி 6 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், வைஷாலி 5.5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    • அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது.
    • இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    முல்லான்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 9 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.

    முல்லான்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 25 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 18 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், சாம் கரண் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் 183 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் பஞ்சாப் அணி 9 ரன்னில் தோற்றது.

    அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), சசாங்சிங் 25 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பும்ரா, கோயட்சி தலா 3 விக்கெட்டும், மத்வால், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பஞ்சாப் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:-

    நாங்கள் நெருங்கி வந்து விட்டோம். அருகாமையில் வந்து தோற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய் விட்டது. அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம்.

    இவ்வாறு நெருக்கமாக வந்து தோற்றதால் எங்களுக்கு இதயம் நொறுங்கி விட்டது. இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். தோல்வியை தழுவினாலும் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சாம்கரண் கூறியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் 3-வது வெற்றியை பெற்றது.இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பாண்ட்யா கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த ஆட்டமாகும். ஒவ்வொரு வீரருக்கும் பதட்டம் ஏற்பட்டது. அசுதோசின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக போராடி இந்த வெற்றியை பெற்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றனர்.
    • நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் காட்சிகளை மையப்படுத்தி அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது.

    17-வது ஐ.பி.எல். சீசனில் இன்று லக்னோவில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி சென்னை வீரர்கள் லக்னோ சென்றடைந்து அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் டோனியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் காட்சிகளை மையப்படுத்தி அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனை சிஎஸ்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் ஏகனாவுக்கு பேட்ட பராக் என பதிவிட்டிருந்தது.

    • சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
    • டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.

    சென்னை- லக்னோ மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (சனிக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    • பஞ்சாப் - மும்பை போட்டிக்கு முன்னதாக் ரோகித் மற்றும் தவான் சந்தித்து கொண்டனர்.
    • இருவரும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முல்லாப்பூர்:

    10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. தோள்பட்டை காயத்தில் இருந்து ஷிகர் தவான் இன்னும் மீளாததால் சாம் கர்ரன் பஞ்சாப்பின் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மாவும் தவான் சந்தித்து கொண்டனர். சந்தித்து கொண்ட இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும் தவானை பார்த்த சந்தோசத்தில் ரோகித் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பஞ்சாப் அணி தோல்வியடைந்த பிறகு தவான் மற்றும் ரோகித் தோளில் கை போட்டு சிரித்து பேசி மகிழ்ந்த புகைப்படமும் வைரலாகியது.

    இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
    • இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முல்லாப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடியது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பாதகையில் ரோகித் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அதில் எங்களுக்கு ஐபிஎல் கோப்பை வேண்டாம் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது.
    • பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து இதுவரை அன்திம் பன்ஹால் மட்டுமே தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிஷ்கேக்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதன் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தீபக் பூனியா (86 கிலோ), சுஜீத் கலக்கல் (65 கிலோ) ஆகியோர் துபாய் விமான நிலையத்தில் தவிக்கிறார்கள். அங்கு வரலாறு காணாத மழை காரணமாக இவர்களது பயணம் தாமதமாகியுள்ளது. இருவரும் போட்டிக்குள் கிர்கிஸ்தான் சென்றடைவார்களா என்பது சந்தேகம் தான்.

    மற்ற 15 பேரில் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதே போல் 23 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் அன்ஷூ மாலிக் (57 கிலோ), மன்சி (62 கிலோ), வீரர் அமன் செராவத் (57 கிலோ) உள்ளிட்டோரும் அணியில் கவனிக்கத்தக்க நட்சத்திரங்களாக உள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து இதுவரை அன்திம் பன்ஹால் மட்டுமே தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை.
    • லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 2 தோல்வி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன் குவித்த சென்னை அணி, 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருதுராஜ், ஷிவம் துபேவின் அரைசதமும், யார்க்கர் பந்து வீச்சில் மிரட்டிய பதிரானாவின் 4 விக்கெட்டும் வெற்றிக்கு உதவின. விக்கெட் கீப்பர் டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன் விளாசி கலக்கினார்.

    சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை. அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். மற்றபடி சென்னை அணி எல்லா வகையிலும் வலுவாகவே விளங்குகிறது. லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது. பந்து திடீரென எகிறுவதும், தாழ்ந்து செல்வதும் என்று இரு வித தன்மையுடன் காணப்படுகிறது. அதற்கு ஏற்ப வீரர்கள் ஆட வேண்டியது முக்கியம்.

    லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), 3 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் உள்ளது.

    கடைசியாக ஆடிய டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவிய லக்னோ வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. உள்ளூர் சூழல் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அவர்களின் பேட்டிங் ஒரு சேர 'கிளிக்' ஆகாதது தான் பின்னடைவாக உள்ளது. குயின்டான் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோரின் பேட்டிங்கையே அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யா, யாஷ் தாக்குர் ஓரளவு நன்றாக செயல்படுகிறார்கள். காயத்தில் சிக்கிய 'புயல்' வேக பவுலர் மயங்க் யாதவ் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டார். ஆனாலும் அவர் களம் காணுவாரா என்பதில் உறுதி இல்லை. மொத்தத்தில் ஒருங்கிணைந்து விளையாடினால் சென்னை அணிக்கு சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். நேற்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடிய லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு பிறந்த நாள் பரிசாக வெற்றிக்கனி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    சென்னை- லக்னோ அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா ஒன்றில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ:

    குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், குருணல் பாண்ட்யா, அர்ஷத் கான் அல்லது தீபக் ஹூடா, மொசின் கான், ரவி பிஷ்னோய், ஷமார் ஜோசப், யாஷ் தாக்குர்.

    சென்னை:

    ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
    • ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் யூடியூப் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

    இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு அணிகளும் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    பாகிஸ்தான் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி. குறிப்பாக பந்து வீச்சு வலுவாக உள்ளது. அவர்களுடன் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் மோதினால் நிச்சயம் அது ஆகச்சிறந்த போட்டியாக இருக்கும். அற்புதமான ஒரு தொடராக அமையும். முழுக்க முழுக்க கிரிக்கெட் அடிப்படையில் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது' என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'இம்பேக்ட்' விதிப்படி ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராக சேர்க்க முடிகிறது. இந்த புதுமையான விதி குறித்து ரோகித் கூறுகையில், 'இம்பேக்ட் விதிமுறையால் ஆல்-ரவுண்டர்களின் திறமை மேம்படுவது தடுக்கப்படுவதாக நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாட்டே தவிர, 12 பேர் அல்ல. எனவே இம்பேக்ட் விதி என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக பொழுதுபோக்கை கொடுக்கலாம். ஆனால் கிரிக்கெட்டை வைத்து பாருங்கள். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டர்கள் இம்பேக்ட் விதியால் பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    மேலும், 2008-ம் ஆண்டு முதல் 2023-ம்ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் இரண்டு முறை மட்டுமே 250 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஐ.பி.எல்-ல் இப்போதே 4 தடவை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு விட்டன என்றால், இந்தி விதிமுறையின் தாக்கத்தை கவனியுங்கள். அது மட்டுமின்றி கூடுதலாக ஒரு முன்னணி பேட்ஸ்மேன் இறங்கும் போது, உங்களது வழக்கமான 6-வது அல்லது 7-வது வரிசை பேட்ஸ்மேன்கள் 7-8 பந்துகளை சந்திக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணித் தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் நான் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் கூறினார்.

    • அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார்.
    • பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறஹ்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் முறையே ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சாம் கர்ரன், பிரப்சிம்ரன் சிங் முறையே 6 மற்றும் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்பிரீத் சிங் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

    இதன் காரணமாக பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சஷான்க் சிங் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய ஹர்பிரீத் சிறப்பாக ஆடினார்.

    19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மோத்வால் 2 விக்கெட்களையும், ஸ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×