search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கமல் கட்சி, தே.மு.தி.க. இணைகின்றன?
    X

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கமல் கட்சி, தே.மு.தி.க. இணைகின்றன?

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம்.
    • இந்த முறை 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள 23 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் அண்ணா அறிவாலயத்தில் கூட்டி இருந்தார்.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினரை இப்போதே தயார் செய்வது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார்.

    அவர் பேசும் போது மாவட்டச் செயலாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். மற்ற கட்சிகளை விட தி.மு.க.தான் மக்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நமது கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இதில் மாவட்டச் செயலாளர்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

    பொதுமக்கள் உங்களிடம் கோரிக்கைகளை சொல்லும் போதும் மனு கொடுக்கும் போதும் பொறுமையாக கேட்டு மனுவை வாங்குங்கள். எரிச்சல் படக்கூடாது.

    நாம் நடந்து கொள்ளும் விதம்தான் நம்மை உயர்த்தும். மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த முறை 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    அதற்கான பணிகளில் நீங்கள் இப்போதே இறங்க வேண்டும். தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கட்சிக்கு உண்மையாக பணியாற்ற கூடிய பூத் ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.

    கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்து கொள்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வலுவான கூட்டணியை அமைப்போம். அதை தேர்தல் சமயத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன்.

    மக்கள் மத்தியில் நமக்கு செல்வாக்கு உள்ளது. எனவே அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் அவ்வப்போது எடுத்துச் சொல்லுங்கள்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை பார்க்கும் போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    இதில் தே.மு.தி.க. கட்சியையும், கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தி.முக. கூட்டணியில் சேர்க்க தலைவர் வியூகம் வகுத்து வருவதாக கூறினர்.

    விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாதான் தே.மு.தி.க. கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடன் இருப்பதாகவே கூறி வருகிறார்.

    எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பிரேமலதா நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.

    இதற்கு வலுசேர்க்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்து போட்டியிட்டால் தான் கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் ஒரு சவாலாக அமையும். அதற்கு அக்கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற தூது விடும் என்ற நம்பிக்கையில் தி.மு.க. மேலிடம் உள்ளது.

    இதே போல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தி.மு.க. கூட்டணியில் சேரும் என கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தால்தான் அது சாத்தியப்படும் என்ற நிலையில் உள்ளனர்.

    எனவே தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாக தி.மு.கவினர் இப்போதே பேச தொடங்கி விட்டனர்.

    Next Story
    ×