search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2-வது இடத்துக்கு முன்னேறும் பாஜக... கள நிலவர அறிக்கையால் நிர்வாகிகளை அலறவிடும் ஸ்டாலின்- எடப்பாடி
    X

    2-வது இடத்துக்கு முன்னேறும் பாஜக... கள நிலவர அறிக்கையால் நிர்வாகிகளை அலறவிடும் ஸ்டாலின்- எடப்பாடி

    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.
    • வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.

    4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்றி பாராளுமன்ற கணக்கையும் தொடங்கியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    அதற்கான செயல் திட்டங்களை ஒரு ஆண்டுக்கு முன்பே டெல்லி மேலிடம் தொடங்கி விட்டது.


    வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். 39 தொகுதிகளிலும் பரவலாக கவனம் செலுத்துவதைவிட வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப் பயண திட்டமும் வகுக்கப்பட்டது.

    பலம் வாய்ந்த, பிரபலமான வேட்பாளர்களை களம் இறக்கி மோத வைத்துள்ளது. கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து டாக்டர் தமிழிசையை தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது தவிர அண்ணாமலை, ராதிகா சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் என்று பல பிரபலங்களை பல தொகுதியில் போட்டியிட வைத்து உள்ளது.

    மக்களிடம் அறிமுகமான முகங்களை போட்டியிட வைப்பதன் மூலம்தான் அந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்புடன் வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தது.

    களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் அந்த வியூகத்தையும் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 10 முதல் 15 தொகுதிகளில் பா.ஜனதா 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


    இந்த தகவலை திமு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பென் நிறுவனம் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறது.

    அந்த அறிக்கையை பார்த்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து விட்டு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எந்த தொகுதியிலும் 2-ம் இடத்தை பா.ஜனதா பிடித்து விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே போன்ற தகவல் சென்றுள்ளது.

    அவரும் அசந்து போனது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலளர்களை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரிந்து நிற்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற மிதப்பில் தி.மு.க.வினரிடம் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்பது உண்மை. இதனால் கூட தலைவர் இப்படி உசுப்பி விட்டிருக்கலாம் என்றார்கள்.

    Next Story
    ×