search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உறுதிமொழி எடுக்க தடுமாறிய டி.ஆர். பாலு?
    X

    உறுதிமொழி எடுக்க தடுமாறிய டி.ஆர். பாலு?

    • டி.ஆர். பாலு 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • ஆறு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 82 வயதாகும் டி.ஆர். பாலு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் டி.ஆர். பாலு உறுதிமொழி எங்கிருக்கிறது என்பதை சிறிது நேரம் தேடிக்கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மேலும், தேர்தல் அதிகாரி உதவியாளரை அழைத்து உறுதிமொழி இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு சைகை காட்டினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட டி.ஆர். பாலு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

    கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் டி.ஆர். பாலு உறுதிமொழியை வாசிக்க திணறியது ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணைய தளத்தில் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன்னிடம் கையிருப்பாக ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 1.08 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், 16 கோடி ரூபாய் அளவில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    டி.ஆர். பாலு 1996-ல் இருந்து 2004 வரை நான்கு முறை தென்சென்னை தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்றார். 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2014-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019-ல் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    1986 முதல் 1992 வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2003 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் மத்திய மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×