search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
    • முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

    ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.
    • ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.இதில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம். ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களைஅவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள். இதனால் உஷாரான அமெரிக்க படையினர் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அழித்தனர்.

    இந்த டிரோன்கள் வீசியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 

    • இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் அனிகோ ரோஸ் என்ற பெண் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
    • மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் தீர்வாக கூறப்படுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் சுகமான வாழ்க்கையை வாழவும், பணம் சம்பாதிக்கவும் மக்கள் பல வேலைகளை நாடுகிறார்கள். என்ஜினீயரிங், மருத்துவம் போன்றவை பல இளைஞர்களின் தேர்வுகளாக உள்ளது. அதே நேரத்தில் சிலர் சற்று வினோதமாக வாழ்க்கை பாதையை தேர்வு செய்கிறார்கள்.

    அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் அனிகோ ரோஸ் என்ற பெண் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் தீர்வாக கூறப்படுகிறது. இதனால் அனிகோவுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 42 வயதான அனிகோ கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொழிலை நடத்தி வருகிறாராம்.

    தற்போது 1 மணி நேரத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,400 வசூலிக்கிறார். சிலர் இந்த அமர்வை நீட்டித்து, கூடுதல் பணம் கொடுத்து தங்களது மன அழுத்தத்தை போக்கி கொள்கிறார்கள். இதற்காக கூடுதல் பணம் வசூல் செய்யப்படுகிறது.

    இதன்மூலம் அனிகோ லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து அனிகோ ரோஸ் கூறுகையில், அரவணைப்பு ஒரு நபருக்கு மகிழ்ச்சியையும், மன அழுத்தம் மற்றும் தனிமையில் இருந்து விடுதலையும் தருகிறது. ஒரு நபர் சோகமாகவோ, மன அழுத்தமாகவோ இருந்தால் அவர்களின் மன ஆரோக்கியம் மனித தொடுதலின் மூலம் மேம்பட தொடங்குகிறது. என்னிடம் வரும் வாடிக்கையாளர்களில் 20 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட முதியவர்கள் வரை அடங்குவார்கள் என்றார்.

    • விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.
    • பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்காக சென்ற 45 பேர் பஸ் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மோரியா நகரில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 46 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்

    அந்த பஸ் மலைப்பாதை யில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கீழே பாய்ந்ந்தது.

    சுமார் 165 அடி உயரத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். பஸ்சும் சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.

    என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பெண்கள் உள்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங் களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சிதைந்து காணப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
    • கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

    அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளது. கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    இதுகுறித்து ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரெயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

    • ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டமிட்டார்.
    • விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    மாட்ரிட்:

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார்.

    அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார்.

    ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அவர்கள் டோனானா தேசிய பூங்காவுக்கு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
    • இஸ்ரேல இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்க்கு எதிரான போர் என்ற பெயரில் காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டியது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் அதை மறுத்தது. எங்களது நோக்கம் ஹமாஸ்தான். எங்களை பாதுகாப்பதற்காகவே ராணுவ நடவடிக்கை எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எல்லை வழியாக உணவு பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை என தென்ஆப்பிரிக்கா மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.

    இந்த நிலையில் காசாவுக்கு உணவுகள், தண்ணீர், எரிபொருள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தடையற்ற ஏற்பாடு அடிப்படையில் எந்தவிதமான தாமதம் இல்லாத வகையில் கிடைக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இனப்படுகொலை ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன மக்கள் பாதிக்கும் வகையில் இஸ்ரேல் எந்தவிதமான ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

    கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
    • சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    வன விலங்குகள், பறவைகளை பூங்காக்களில் கூண்டுக்குள் பார்க்கும் பார்வையாளர்கள் பரவசப்படுவார்கள். அதே நேரம் அவை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஆபத்தாக மாறிவிடும்.

    அந்த வகையில் நெருப்புக்கோழி ஒன்று சாலைகளில் ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி திடீரென சுரங்க பாதை பகுதிக்குள் புகுந்தது.

    தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய இந்த நெருப்புக்கோழி சாலைகளில் ஓடியதோடு, சில வாகனங்கள் மீது மோதி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    சிலர் தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், நெருப்புக்கோழி அழகாக ஓடுகிறது எனவும், மற்றொரு பயனர் நெருப்புக்கோழிக்கு சுதந்திரம் கிடைத்தது எனவும் பதிவிட்டுள்ளார்.

    • பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
    • நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர்.

    அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆற்றில் உள்ள இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில் அப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர். அவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் கவுதமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்தினார்.

    இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    • இந்த மாதம் தொடக்கத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.

    நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெரத் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக்காணக்கானோர் காயம் அடைந்தனர். மேலும் வீடுகளை இழந்தனர்.

    அம்மாகாண மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒருமாத காலம் ஆனது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைக்க 400 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒருவாரம் அனுமதி அளித்தது.

    ஒருவாரம் விசாரணைக்குப் பிறகு இன்று அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்கா அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது. "கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. அதன்படி டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கண்டனத்தை தெரிவித்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது தொடர்பாக கூறுகையில் "தனிப்பட்ட தூதர உரையாடல்கள் பற்றி பேசவில்லை. நாங்கள் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பது ஆகியவற்றை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதை யாரும் எதிர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

    வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களுடைய நடவடிக்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தேர்தலை சந்திக்க மிகவும் சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதை நாங்கள் அறிவோம்" என்றார்.

    ஏற்கனவே அதிருப்தியில் உள்ள இந்தியா, மேலும் அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    ×