search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
    • தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.

    அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
    • இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    உதகை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு தரப்படும்.
    • தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை சிலிண்டர் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தற்போது தேர்தல் வந்து விட்டதால் ரூ.100 குறைத்து விட்டு நாடகமாடுகிறார்கள். இதனை நீங்கள் நம்ப வேண்டாம். டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து விட்டது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு தரப்படும். பெட்ரோல் 65 ரூபாய்க்கு தரப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அவர் சொன்னதை செய்து காட்டுவார்.

    நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.35 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள், சுற்றுலா தல வழித்தடங்கள், இந்தியா சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் மேம்படுத்தப்படும்.

    மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய அகல ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். நீலகிரியில் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைந்து தொடங்கப்படும்.

    இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற நீங்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் போடுகிற ஓட்டு தான், மோடிக்கு வைக்கிற வேட்டு.

    தமிழ்நாட்டிற்கு இதுவரை பிரதமர் மோடி ஏதாவது கொடுத்துள்ளாரா? சென்னை, நெல்லை, தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்தரா? வரவில்லை. பேரிடர் பாதிப்புக்கு எந்த நிதியும் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் வந்தவுடன் அடிக்கடி தமிழகத்திற்கு வருகின்றனர்.

    தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தி.மு.க. போராடி வருகிறது. அதற்காக தான் இந்த தேர்தல்.

    இப்போது பா.ஜ.க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரப்போவதாக கூறுகிறார்கள். அது நடைமுறையில் சாத்தியம் இல்லை.

    ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் மறைவுக்கு பிறகான அ.தி.மு.க. ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வந்து தமிழக கல்வி உரிமையையும் பறித்து விட்டனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

    பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி உரிமை, பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று இந்தியாவில் முதல் முறையாக சட்டம் இயற்றியவர் கருணாநிதி.

    அவரின் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரும் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், பெண்களுக்கான இலவச பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

    இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தை பார்த்து தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கனடா நாட்டிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் கொண்டு வரப்பட்டு, மகளிருக்கு மாதம், மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். தேர்தல் முடிந்த 6 மாதத்தில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கண்டிப்பாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.
    • ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தாளூர்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.


     வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி வந்தடைந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

    மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அருவங்காடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    • சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர்.
    • வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அன்னூர் அருகே உள்ள பொகலூர் பகுதியில் நடிகையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நடிகை நமீதா வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பொகலூர் பகுதியில் திரண்டிருந்தனர். நமீதா திறந்த வேனில் நின்றபடி வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.

    அங்கு நின்ற சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர். மேலும் நமீதாவுடன் சிறுவர்களும், பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கு சிரமம் வேண்டாம், நானே உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன் என பிரசார வாகனத்தில் நின்றபடியே சுற்றி, சுற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.

    பொதுமக்கள் மத்தியில் நடிகை நமீதா பேசியதாவது:-

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. கூகுள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரி வர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொது மக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளது. செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்துக்கான கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளது.

    வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா ரூ.300ஆக உள்ள நிலையில் இந்தியாவில் ரூ.10 மட்டுமே. நீலகிரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபரின் பெயரை கூட தனக்கு சொல்ல விருப்பமில்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்துகிறார். எனவே வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஊட்டி குதிரைப்பந்தய போட்டியில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ள சூழ்நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்க உள்ளன.

    ஊட்டி குதிரைப்பந்தயம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:-

    நீலகிரி கோடை விழாவின் ஒரு நிகழ்வாக குதிரைப்பந்தய போட்டிகள் இன்று தொடங்கி வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடக்கிறது.

    மேலும் முக்கிய குதிரை பந்தயங்களான ஆயிரம் கின்னிஸ் 20-ந் தேதியும், இரண்டாயிரம் கின்னிஸ் 21-ந் தேதியும், நீலகிரி டர்பி மே 12-ந்தேதியும், நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தய போட்டிகள் மே 26-ந்தேதியும் நடக்க உள்ளது.

    ஊட்டி குதிரைப்பந்தய போட்டியில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சென்னை, மைசூரூ, பெங்களூரு, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் வரவழைக்கப்பட்டு, அவை போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    • நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு மத்தியில் பேசும்போது, நீலகிரியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது தி.மு.க நிர்வாகிகள், உதயசூரியன் சின்னம் என்பதை நினைவுபடுத்தினர். பின்னர் சுதாரித்து கொண்ட செல்வப்பெருந்தகை, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களுக்கு மத்தியில் பேசியதாவது:-

    இந்த நாட்டில் அமைதி நிலவவும், ஜாதி-மத கலவரத்தை தடுத்து நிறுத்தவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பொறுப்பு உண்டு. அவற்றை எல்லாம் நீங்கள் தடுத்து நிறுத்தி நாட்டை மேன்மைப்படுத்த வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரோ, அதைவிட 2 மடங்கு அதிகம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

    மேலும் உங்கள் பகுதிக்கு ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வரஉள்ளார். கொடுப்பவர்களுக்கும், எடுப்பவர்களுக்குமான தேர்தலில் கொடுப்பவராக ராகுல்காந்தியும், எடுப்பவராக மோடியும் உள்ளனர். எனவே திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க.
    • அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம்.

    ஊட்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா. அவர் ஊட்டிக்கு வரும் போதெல்லாம் மலைவாழ் மக்களை சந்தித்து செல்வார். நீலகிரி மாவட்ட மக்களை ஜெயலலிதா மிகவும் நேசித்தார். நீலகிரிக்கு அதிக முறை வந்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை.

    நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை. அவர் தலைக்கணம் பிடித்தவராக பார்க்கப்படுகிறார். பெரியவர்களை மதிப்பதில்லை. நாட்டுக்காக பாடுபட்டவர்களை, மக்களை மதிப்பதில்லை.

    அவர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் தான் தி.மு.க. வேட்பாளர். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் புரிகிற கட்சி தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணும் கட்சியும் தி.மு.க.

    நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க. 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்தது நாம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் மீண்டும் வர உள்ளது. ஆகவே அவர் இங்கே இருப்பாரா எங்கே இருப்பார் என்பது விரைவில் தெரிய வரும். தி.மு.க.வில் ஒவ்வொருவராக ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆ.ராசாவும் ஜெயிலுக்கு செல்வார்.

    இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது தி.மு.க. அரசு தான். தரைப்பகுதியில் இருந்து மலைப்பகுதி வரை போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதனை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    தி.மு.க.வினரே போதைப்பொருளை விற்கும்போது எப்படி அதனை தடுக்க முடியும். தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் ஒருவர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இன்னும் பலர் போக உள்ளனர்.

    ஊர் ஊராக சென்று ஒருவர் என்னையும், கட்சியையும் விமர்சித்து கொண்டிருக்கிறார். அவரும் செல்வார் என பரவலாக தகவல்.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அதனால் அவர்களால் மக்களிடம் போய் பேச முடியாது. பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் தான் எங்கு சென்றாலும் என்னையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம். அதனால் நாங்கள் உரிமையோடு வந்து ஓட்டு கேட்கிறோம். ஆனால் நீங்கள் இந்த மாவட்டத்திற்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஒன்றும் இல்லை. எனவே மக்களாகிய உங்கள் ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி மலரும். ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா உங்களுடன் இருந்ததை போன்று எங்கள் அரசும் ஒன்றாக இருந்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம்.

    தி.மு.க. ஆட்சியில் குன்னூர், ஊட்டியில் கடை வாடகைகளை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி ஆட்சி இருண்ட ஆட்சி என்று கூறுகிறார். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது? ஊட்டிக்கு வாங்க கண்ணை திறந்து பாருங்கள் நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊட்டியில் பிரசார கூட்டம் முடிந்ததும் இன்று மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதன்பின்னர் அவர் இரவு 7 மணிக்கு கோவை நகருக்கு வருகை தருகிறார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    • ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
    • கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இது ஒரு குளிர்பிரதேசம் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்ததால் அங்குள்ள அணைகள் மற்றும் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    நீலகிரியில் கோடைக்காலம் தொடங்கும்போது அனல் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு பெய்ய வேண்டிய கோடைமழை தொடங்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சடசடவென கோடைமழை பெய்ய தொடங்கியது. இது சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    இதனால் ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

    இது அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கோடைக்காலம் காரணமாக வனப்பகுதிகள் வறண்டு காணப்படுவதால் அங்கு தற்போது அடிக்கடி வனத்தீ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டியில் கோடைமழை காரணமாக அங்கு தற்போது குளிர்ந்த காற்று வீசுவதுடன் இதமான காலநிலையும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    ×