search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.
    • தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.

    தேர்தலில் ஆட்சி பலம், அதிகார பலம் பண பலம் பெற்று நம்மை எதிர்நோக்கி இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வேட்பாளர்களை தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நிற்கும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆசீர்வாதம் பெற்று எளியவராக நிற்கும் வேட்பாளருக்கு பெருவாரியான வெற்றியை தரவேண்டும்.

    2011-ல் இந்த கூட்டணி எப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்றதோ அதேபோல 2024-ல் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து இந்த மெகா கூட்டணியை அமைத்திருக்கிறோம் .

    இது மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு கூட்டணி என்பதை வருங்கால தேர்தலில் நிருபிப்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளோம் . இந்த தேர்தலில் நாம் பெறும் வெற்றி வருகிற 2026-தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும்.


    பாலாறு மாசடைய காரணமாக ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமிய கழிவுகளை உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டும்.

    நிலத்தடி நீர் பாதித்து புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் அபாயகரமானதாக உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    1000 ரூபாய் தருவதாக ஏமாற்றிய, கஞ்சா புழக்கத்தை கொண்டு வந்து எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடை திறந்துள்ள தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவீர்களா, நெசவும், விவசாயமும் அழிந்ததற்குகாரணம் இந்த அரசுஎன்பதை உணறுகிறீர்களா?

    வேலை வாய்ப்பு இல்லை, வறுமை, பாலியல் கொடுமை, சட்டம் ஒழுங்குசீர்கேடு உள்ள இந்த ஆட்சிக்கு பாடத்தை கொடுத்தால் தான் மீதமுள்ள ஆட்சி காலத்தில் நல்லது செய்வார்கள்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுஇல்லை. இதுவா மக்கள் ஆட்சி என்பதை சிந்திக்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
    • 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

    அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.

    மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

    வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.

    எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?

    எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.

    7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.

    நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.

    விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
    • அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார்.

    அரக்கோணம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார்.

    முன்னதாக கட்சியினர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கினர். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வெள்ளி வீரவாளை அசைத்துக்காட்ட அங்கிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் அமைச்சர் காந்தி ஏற முற்பட்டார்.

    இதனால் பேச்சை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர் வாகன த்தில் ஏறி நிற்கும் வரை காத்திருந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்பொழுது அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார். அங்கு கூடி இருந்த பெண்கள் உட்பட அனைவரும் வேண்டாம் நீங்கள் பேசுங்கள் என கூறினர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன் பேச்சை தொடர்ந்தார்.

    இதனால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

    • நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.
    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    ஆற்காட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆற்காட்டில் புதிய பஸ் நிலையம், காவனூர் மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலை கூடிய விரைவில் திறக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்கப்படும், விளாப்பாக்கம் கூட்டுறவு வங்கி, ஆற்காட்டில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததை கேட்டால் மத்திய அரசு நிதியில்லை என்று சொல்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.

    நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.

    கவர்னர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி, வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி.

    தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது.
    • பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    அவர்கள் எளிதில் மலைக்கு சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    மேலும் ரோப்கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர். காந்தி தலைமையிலான நன்கொடையாளர்கள் மூலம் ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

    இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமைவிடத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவில் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

    லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    சென்னையிலிருந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 105 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணம் வந்தால் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மரை எளிதில் தரிசனம் செய்யலாம்.

    இதனால் அதிகமான பக்தர்கள் சென்னையில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.

    இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.

    இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

    எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.

    இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன
    • ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ரூ.5 கோடி கொடுத்து விட்டார். அதை கொண்டு வந்தவரை போடா ராஸ்கல் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன். உடனே எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இந்த தகவலை தெரிவித்தேன். அவர் அண்ணே நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் இனிமேல் வீட்டில் இருக்க வேண்டாம்.

    நான் ஒரு இடம் ஏற்பாடு செய்கிறேன் அங்கே போய் இருங்கள் என்றார். எனக்காக லாட்ஜில் தனியாக அறை எடுத்துக் கொடுத்து 15 பேரை பாதுகாப்புக்காகவும் வைத்தார்.

    எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. செல்போனில் தலை எடுப்பேன். உயிரை எடுப்பேன் என்று பல அறைகூவல்கள் வந்தன. அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். பணத்திற்காகவோ அல்லது என் உயிர் போகும் என்பதற்காகவோ பதவிக்காகவோ இந்த இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல.

    மக்களுக்காக செயல்படுகிற பாடுபட ஏற்றமிகு தொண்டர்கள் உள்ள இயக்கம் அ.தி.மு.க. அதனை எண்ணிப் பார்த்து இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளித்தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தனக்கு சாதகமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி அனுப்பி வைத்ததாக தமிழ் மகன் உசேன் பேசியது தற்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
    • ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.

    மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

    இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமதாஸ். இவரது மனைவி ஜமுனா (வயது 50). இவர் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் அரசினர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவருடன் ஜமுனா பைக்கில் வந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஐவிபிஎம் அருகே வந்த போது, பைக்கில் சாலை ஓரத்திலிருந்து சாலையில் ஏற முயன்ற போது எதிர்பாராதவிதமாக ஜமுனாவும் அவரது கணவரும் சாலையில் விழுந்தனர்.

    அப்போது பின்னால் சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கன்டெய்னர் லாரி ஏறியதில் ஜமுனா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
    • கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38 ). தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.

    கண்ணாடிவிரியன் பாம்பு அவரை கடித்தது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.

    மேலும் கண்ணாடிவிரியன் பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு கதிரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×