search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
    • 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பள்ளி மாணவர்கள், மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.

    போலீசார் கண்காணித்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிறு வயதிலேயே லாரிகளை ஓட்டிச் செல்லும் குழந்தைகளை பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்தால்தான் ஓட்டுனர் உரிமமே வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    சில நேரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இதே போல ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    இதனை அவரது குடும்பத்தினரே ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிறுவன் டிராக்டர் ஓட்டி வரும் போது தெருவில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
    • 7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது.

    கூடலூர்:

    தமிழகத்தில் 5-வது புலிகள் காப்பகமாக கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் 21-வது புலிகள் காப்பகமாகும். இங்கு மேகமலை பகுதியில் உள்ள கண்டமனூர், எரசக்கநாயக்கனூர், சாப்டூர் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா காடுகளாகவும், அதில் தனியார் ஏலக்காய், காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாதது, தொழிலாளர் பிரச்சனை, வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    ஹைவேவிஸ் வனப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேசி விலைக்கு வாங்கியுள்ளனர்.

    7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவிலேயே வர்த்தகம் இல்லாத பயன்பாட்டுக்காக வனப்பகுதியில் புலிகள் காப்பகத்துக்கு என மாநில அரசு தனியாரிடம் நிலம் விலைக்கு வாங்குவது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டு தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை அதிகரித்துள்ளனர்.

    • இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
    • பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.

    தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.

    தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
    • மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

    கம்பம்:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகி போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம் கம்பம் நகர அ.ம.மு.க. துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக்ராஜா. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச மதவாத கட்சியான பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைத்ததால் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன். மேலும் அ.ம.மு.க. கட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சிந்தித்து செயல்படுங்கள் என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

    இது குறித்து தேனி அ.ம.மு.க. நகர செயலாளர் மணி கூறுகையில், துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியே பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக சலீம் என்பவர் நகர துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்?
    • மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொளுத்தும் வெயிலிலும் என்ன காண வந்துள்ள தாய்மார்களாகிய நீங்கள் நினைத்தால் வெற்றி நிச்சயம்.

    * தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்?

    * 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

    தொடர்ந்து 3 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது.
    • ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இங்கு கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1500 வாக்குகள் பதிவானது.

    வெள்ளிமலை பகுதியில் வெளியூர் பகுதி மக்கள் குடும்பத்துடன் தங்கி வந்த நிலையில் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வேறு நபருக்கு கைமாற்றி விட்டது போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. இதனால் அங்கு தங்கி இருந்த தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

    இதனால் வெள்ளிமலையில் வசிக்கும் குடும்பத்தினர் குறைந்து தற்போது 2 குடும்பத்தினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அதில் 2 பெண்கள், 4 ஆண்களுக்காக அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது. அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் 12 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை ஓட்டு ஜாவிதாவில் 6 பேர் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவர்களுக்காக அங்கு வாக்குச்சாவடி மையம், தேர்தல் அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த கிராமத்தில் தொழிலாளர்கள் இல்லாத நிலை ஒரு பக்கம் இருப்பதால் வெளி மாநில தொழிலாளர்கள் அவ்வப்போது தேவைக்கு வந்து தங்கி விட்டு பின்னர் சென்று விடுவது வழக்கம்.

    மேலும் இந்த கிரமத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
    • சிரப்பாறையைச் சேர்ந்த பலசரக்கு வியாபாரி சுருளிராஜ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.98,450 பணத்தை கொண்டு சென்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கண்டமனூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்பவர் காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் பணம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

    தான் ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை பார்த்து வருவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தும் அதிகாரிகள் கேட்காமல் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சிரப்பாறையைச் சேர்ந்த பலசரக்கு வியாபாரி சுருளிராஜ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.98,450 பணத்தை கொண்டு சென்றார். அவரது வாகனத்தையும் மறித்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதன் பின்பு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,78,450 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான கம்பம் அருகே கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது அறிவுறுத்தலின் பேரில் கலால் சிறப்பு படை உதவி கலால் ஆய்வாளர் தாமஸ்ஜான், தலைமை நிர்வாக அதிகாரி மரியாஆல்பின் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில் ராஜாக்காடு, கச்சிரபாலம், சஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சி அப்பகுதியில் உள்ள ரிசார்ட்ஸ் மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பண்ணை வீட்டு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 17 லிட்டர் சாராயம், இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    தேனி:

    தமிழக பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தேனியில் தொடங்குகிறார். இதற்காக நாளை இரவு தேனிக்கு வரும் அவர் ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    அன்று இரவு தேனியில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுநாள் (24-ந் தேதி) தேனி அல்லிநகரம், பெரியகுளம், மூன்றாந்தல் ஆகிய இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    • அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
    • நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

    குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.

    அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.

    இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.

    மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகின்றன.
    • திராட்சை பழங்களே சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

    மருத்துவ குணம் கொண்ட இப்பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் விதை இல்லா திராட்சை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதி திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.

    கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதிக அளவு திராட்சை பல்வேறு பகுதிகளுக்கு தொழிலாளர்களால் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஆனால் வரத்து குறைந்துள்ளதால் பல ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. குறிப்பாக விதை இல்லா திராட்சைகள் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்த வகை திராட்சை பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தற்போது ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை பழங்களை சுத்தம் செய்ய ரசாயனங்களில் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    ரசாயனம் கலந்த திராட்சை பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் ½ மணி நேரம் ஊற வைத்து கழுவிய பின்னர் சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் திராட்சை பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் போது இது போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை.

    இதனால் திராட்சையை வாங்கியவுடன் சாப்பிடும் பொதுமக்களுக்கு தொண்டை வலி, வயிறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் திராட்சை பழங்களே சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகாரிகள் இது போன்ற திராட்சை பழங்களை எவ்வாறு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது? என்றும், அதில் ரசாயன கலப்பு உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×