search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
    • தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    மன்னார்குடி:

    திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.

    அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.

    தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    • தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
    • தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார்.

    திருவாரூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? தி.மு.க. மேல் அவர் ஆத்திரம் கொள்வது ஏன்? என்பது குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை கொட்டுகிறார். மாநிலம் மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார். தி.மு.க. மேல் ஏன் அவருக்கு இவ்வளவு கோபம்?. இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை 'இந்தியா' கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை 'இந்தியா' கூட்டணி கலைத்துவிட்டது.

    தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதுபோல் எத்தனையோ ஏச்சுகள், ஏளனங்கள், அரட்டல்கள், மிரட்டல்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள்தான் நாங்கள். வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ?
    • திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண் வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கருணாநிதி பிறந்த, வளர்ந்த, வென்ற பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிக்கு வந்துள்ளேன். இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடிய தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளேன்.

    பிரசார கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

    முரரொலியை படித்து வளர்ந்த நான், வேட்பாளர் முரசொலிக்காக வாக்கு கேட்கிறேன். இந்திய கம்யூ.வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது. மாநிலங்கள் இருக்காது.

    கண்ணுக்கு எதிரிலேயே ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை பார்த்தோம். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் வைத்துள்ளனர்.

    இந்தியாவில் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம்.

    பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ? பாஜக அழுகுனி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு அழிவு, இந்தியாவிற்கு நல்லது அல்ல.

    தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் அளவிற்கு விடியலை திமுக அரசு வழங்கி வருகிறது.

    திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச தொகை திட்டம் இருக்காது.

    திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும். விற்பனை சந்தைகள் அமைக்கப்படும். திருவாரூரில் இருந்து புதிய ரெயில்கள்.

    அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

    அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு புறப்பட்டபோது திமுக போராட்டம் நடத்தியது. இப்போது, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியுள்ளோம்.

    ஆளுநர் விவகாரத்தில் இப்போது அதிமுக என்ன செய்கிறது? அதிமுக ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது. மதுரை எய்ம்ஸ் விஷயத்தில் இழுத்தடிப்பது குறித்து மோடியிடம் அதிமுக கேள்வி கேட்டதா ?

    கருப்புபணம் உள்ளிட்ட மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா ? 15 லட்சம் கூட வேண்டாம், 15 ரூபாயாவது மோடி கொடுத்தாரா ?

    வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என கூறினார்கள்.

    விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தபோது அதிமுக என்ன செய்தது. பச்சை துண்டு போட்டபடி விவசாயிகளை ஈபிஎஸ் ஏமாற்றினார்.

    விவசாயிகளுக்கு எதுவும் செய்யாததால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விட விவசாயிகள் தான் மோடிக்கு எதிரியாக தெரிகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
    • ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.

    இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கும் இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து இன்று மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேரும். பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.

    ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தின்போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 500 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்ச க்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். மக்கள் அதிகம் கூடுவதால் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்தல், அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
    • வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஒன்றியம் வைப்பூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் விஜயஸ்ரீ (வயது 13). இவர் வைப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே நடந்து வருகிறது. அதனால் விஜயஸ்ரீயை திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு விஜயஸ்ரீயை நேற்று அப்பள்ளிக்கு அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார்.

    ஆனால் ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை கொடுத்து சேர்க்கை படிவத்தில் கையெழுத்துட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.

    தனது விருப்பத்திற்கு மாறாக தோழிகளை பிரிந்து வெளியூர் சென்று படிக்க வேண்டியுள்ளது என விஜயஸ்ரீ மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு திரும்பிய முத்துலட்சுமி மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி விஜயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தோழிகளை பிரிவதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
    • மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் கடை வீதியில் அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது ஆட்சி காலத்தில் போதை பொருட்கள் பெரும் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் இளைஞர்கள் பெருமளவு கூடும் இடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.


    குறிப்பாக பல்வேறு விதமான போதைப் பொருட்கள் பல வண்ணங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாக கிடைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நல்வழியை ஏற்படுத்துகின்ற பாதுகாப்பான நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையான அ.தி.மு.க. என சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.

    தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரிப்பது போன்று இருந்து வந்துள்ளனர்.
    • மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை. இவரது மனைவி ஜெயம் (வயது 65). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ஜெயம் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் உள்ள சொத்துகளும், வேறு இடங்களில் சில நிலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

    கணவரும் இறந்து விட்டார் வாரிசுகளும் இல்லாமல் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரிப்பது போன்று இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை பராமரித்து வந்த அவரது உறவினர் ஒருவர் ஜெயத்தை வீட்டில் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளார்.

    தொடர்ந்து, அவருக்கு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். இப்படியே நாட்கள் செல்ல செல்ல பூட்டிய வீட்டில் ஜன்னல் வெளிச்சத்தில் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல், உடம்பில் உடை கூட இல்லாமல், உடல் மெலிந்த நிலையில் தனிமையில் மூதாட்டி தவித்து வந்துள்ளார்.

    மேலும், அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்தும், அதே இடத்தில் உறங்கியும் பரிதவித்து வந்துள்ளார்.

    நாளடைவில் அந்த பகுதியை கடந்தாலே துர்நாற்றம் கடுமையாக வீசுவதாலும், ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டியை காப்பாற்றுவதற்காகவும் சிலர் அந்த மூதாட்டியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்:-

    தனியாக இருந்த மூதாட்டியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக, பராமரிப்பது போன்று நடித்து சுமார் 6 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து தினமும் ஒரு வேலை உணவு மட்டுமே கொடுக்கின்றனர்.

    அதிலும் தற்போது எப்போதாவது தான் உணவு கொடுக்கின்றனர். மூதாட்டியின் இந்த நிலையை பார்த்து நாங்கள் மனவேதனையில் உள்ளோம் என்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    வாழ்க்கையின் இறுதி காலத்தில் துணை யாரும் இல்லாமல் வேதனையின் உச்சத்தில் தவித்த இந்த மூதாட்டிக்கு வந்த நிலைமை அக்கம் பக்கத்தினர் மட்டுமின்றி வீடியோவை காணும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை ததும்ப வைத்தது.

    • தனது மகள் மீது அளவில்லா அன்பு வைத்த சவுந்தரபாண்டியன், உயிரிழந்த மகளின் நினைவால் தினமும் தவித்து வந்தார்.
    • எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 40). இவர் திருவாரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், சபரிவாசன் என்ற மகனும் உள்ளனர். சக்தி பிரக்யா என்ற மகள் இருந்தாள்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 வயது குழந்தையாக இருந்த சக்தி பிரக்யா, வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தபோது வீட்டின் அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாள்

    தனது மகள் மீது அளவில்லா அன்பு வைத்த சவுந்தரபாண்டியன், உயிரிழந்த மகளின் நினைவால் தினமும் தவித்து வந்தார். தனது மகளை பெண் தெய்வமாக நினைத்த அவர் தனது வீட்டு பூஜை அறையில் மகள் சக்தி பிரக்யா புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபாடு நடத்தினார்.

    இந்த நிலையில் தனது செல்ல மகளுக்கு கோவில் கட்ட சவுந்தரபாண்டியன் முடிவு எடுத்தார். இதனையடுத்து சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் கோவில் கட்டும் பணியினை தொடங்கினார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடத்தினார். தனது மகளை அம்மனாக பாவித்து, மகளின் சாயலில் அம்மன் சிலை வைத்து சக்தி பிரக்யா அம்மன் என்ற பெயரில் கோவில் கட்டி சவுந்தரபாண்டியன் கும்பாபிஷேகம் நடத்தினார்.

    இறந்த தனது குழந்தையை மறக்க முடியாமல் அந்த குழந்தைக்கு சவுந்தரபாண்டியன் கோவில் கட்டியது அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    இதுகுறித்து சவுந்தரபாண்டியன் கூறுகையில், அன்பே தெய்வம் என்பார்கள். நான் எனது மகள் மீது வைத்த அன்பால், 2 வயதில் உயிரிழந்த எனது மகள் என்னுள் தெய்வம் ஆனாள். எனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு திருமணம் செய்தால் என்ன செலவு ஆகும் என்பதை நினைத்துத்தான் இதை நான் செய்துள்ளேன்.

    எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். என் மகள் நினைவாக கட்டிய இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவேன் என்றார்.

    • 70 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்பவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சி எதையும் செய்யவில்லை.
    • தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி தான் மிகவும் பின் தங்கி உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வந்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அண்ணாநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது . கொட்டும் மழையில் தொண்டர்களுடன் நடந்து வந்த அண்ணாமலை பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகில் பேசியதாவது:-

    70 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்பவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சி எதையும் செய்யவில்லை. இந்த தொகுதி என்ன வளர்ச்சி அடைந்திருக்கிறது? என்ற நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த தொகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்தார்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி தான் மிகவும் பின் தங்கி உள்ளது. தி.மு.க. அரசு மணல் விற்பனையில் ரூ.4700 கோடி ஊழல் செய்துள்ளது என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் கூறியுள்ளது.

    பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. எனவே நீங்கள் தமிழகம் வளர்ச்சி அடைய பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எனவே வரும் காலங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேதாரண்யம் தோப்புத்துறையில் என் மண் என்மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க. ஆட்சி அமைந்த உடன் இந்து சமய அறநிலையத்துறை என்பதே இருக்காது. திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது 6 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். மீனவர்களுக்கு எதிரான கட்சி என்றால் அது தி.மு.க.தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    என் மண் என் மக்கள் பாதயாத்திரையானது நாளை நாகை பகுதியில் நடைபெறும் என திட்டமிட்டு இருந்த நிலையில் அங்கு மழை பெய்வதாலும், புயல் உருவாகி கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பாதயாத்திரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.
    • சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவும், அன்றாட தேவைகளுக்காகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.

    இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இபுறாஹீமை சந்தித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    இதன் எதிரொலியாக முகமது இபுறாஹீம் தலைமையில், கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் தொடங்கி குமரன் பஜார், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், பங்களா வாசல், பெரிய கடை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை துப்புரவு பணியாளர்களை கொண்டு விரட்டி, விரட்டி பிடித்தனர். இரவு 9 மணி தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை மாடுகளை பிடித்தனர். மொத்தமாக 46 மாடுகள் பிடிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாட்டர் டேங் அருகில் உள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டது.

    இதுகுறித்து செயல் அலுவலர் முகம்மது இபுராஹிம் கூறுகையில்:-

    பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளாத மாடுகளை மயிலாடுதுறை அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கபடும் என்றார்.

    நள்ளிரவு வரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை விரட்டி, விரட்டி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து வளாகம் காணப்படுகின்றன.
    • இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளார்கள். நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் நோயாளிகளும் வந்து செல்கிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள ஏழை கிராம மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி தான் உள்ளார்கள்.

    திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த மருத்துவமனையை பிரதான மருத்துவமனையாக உள்ளது.

    இந்த மருத்துவமனையில் தற்போதைய இந்த நிலையால் நோயாளிகள் நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    நாள்தோறும் மழை நீர் சேற்றில் சிக்கி பலர் மற்றும் நோயாளிகள் வழுக்கி விழுவதாக அங்கு இருப்பவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

    மருத்துவமனை பிரதான கட்டிடம் பின்புறம் உள்நோயாளிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் கட்டிடம் அருகிலேயே உபயோகிப்பட்ட மருத்துவ கழிவுகள் உட்பட குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.

    அவை முறையாக அகற்றப்படுவதில்லை என பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.

    பிரதான கட்டிடத்தில் இருந்து உள்நோயாளிகள் பிரிவிற்கும் உள்நோயாளிகள் கூட வரும் நபர்கள் தங்கும் கட்டத்திற்கு செல்லும் பாதையும் சேறும் சகதியுமாக நடக்கக்கூட முடியாத அளவிற்கு உள்ளது.

    எனவே அரசு மருத்துவமனை அருகில் உள்ள சேற்றையும், அங்குள்ள குப்பைகளையும் அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×