search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • சதீஷ், ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
    • சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குடும்பத்துடன் வசிப்பவர் செல்வேந்திரன் (வயது 57). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தலிங்கம் (25).

    இவர் கஞ்சா விற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி செல்வேந்திரனும், அவரது மனைவி பார்வதியும் வெளியே சென்று இருந்த வேளையில் அவர்களது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதில் திருடப்பட்ட, பணம் ரூ.48 லட்சம் என்றும் பின்னர் ரூ.7 லட்சம் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே 12 கிராம் தங்க நகையும், ரூ.2 லட்சமும் திருட்டு போனதாக ஆறுமுகநேரி போலீசார் 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர் விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஏரல் சேதுக்குவாய்தான் கிராமத்தை சேர்ந்த விஜயராமன் மகன் சத்தியமுகேஷ் என்ற சதீஷ் (24) மற்றும் இவரது உறவினரான மேலாத்தூர் சொக்கப்பழக்கரையை சேர்ந்த கோபால் மகன் சச்சின் (23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

    விசாரணையில் சதீஷ் மீது ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இப்படி ஒரு வழக்கின் காரணமாக சதீஷ் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக இருந்தபோது தான் அவருக்கும் காயல்பட்டினம் ஆனந்த லிங்கத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே சதீஷ் ஜாமீனில் வெளியே வர இருந்த சூழ்நிலையில் அவரிடம், ஆனந்தலிங்கம் உதவி கேட்டுள்ளார். அதாவது, தன்னை பெற்றோர்கள் ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதனால் நீ எங்கள் வீட்டிற்கு சென்று அங்கே வைத்திருக்கும் லட்சக்கணக்கான பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு பின்னர் என்னை ஜாமினில் வெளியே கொண்டு வந்துவிடு. நாம் அதன் பிறகு பணத்தை செலவழித்து ஜாலியாக இருக்கலாம் என்ற திட்டத்தை கூறியுள்ளார்.

    இதன்படி சதீஷ் ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் திசை திருப்பிவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். தனக்கு உதவியாக சச்சின் என்பவரை சேர்த்துக் கொண்டுள்ளான்.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷிடமிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    • நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
    • எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

    நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.

    தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.

    விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    தூத்துக்குடி, மே.7-

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.

    இதில் தூத்துக்குடியில் உள்ள மையத்தில் மொத்தம் 760 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 தேர்வு மையத்தில் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மையத்தில் மட்டும் எம், என், ஓ, பி ஆகிய வரிசையில் கேள்வி தாள்கள் வழங்கப்பட்டன. அதில் சிலருக்கு கியூ, ஆர், எஸ், டி. வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் தேர்வு முடிந்தபிறகு தனியார் பயிற்சி மையங்கள் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டனர். அதில் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்களுக்கு விடைகள் வெளியிடப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் விடைகளை சரிபார்த்தபோது அவர்களின் வினாத்தாள் வித்தியாசமாக இருப்பதை அறிந்தனர். இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் குழப்பம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து சில மாணவர்களின் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அங்கு உள்ள மனுக்கள் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர். அந்த மனுவில், துத்துக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் வேறு வரிசை கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் குழப்பம் உள்ளது. எனவே தேசிய தேர்வு முகமை இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதுதொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறுகையில், எப்போதும் ஒரே விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்வில் ஒரே மையத்தில் 2 விதமான கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்களுக்கு மட்டும் தான் விடைகள் வந்துள்ளன.

    எம், என், ஓ, பி. ஆகிய வரிசை கேள்வி தாள்களுக்கு விடை வரவில்லை. இந்த 2 கேள்வி தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருந்தது. இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே எம், என், ஓ, பி. வரிசையில் தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக கட் ஆப் மார்க் வழங்க வேண்டும் என்றனர்.

    • வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (வயது33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.

    தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் அசரியா. இவரது மனைவி எஸ்தர் (வயது 52).இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அசரியா இறந்து விட்டதால் வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்திதிற்கு சொந்தமான அய்யாசாமி காலனி வீட்டில் வசித்து அவரது 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோவையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக எஸ்தர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு கடந்த 30-ந்தேதி மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலைவாணர், பொன்பாண்டி உட்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்ராஜ் என்ற கருவாடு (20), சந்தோஷ்குமார் (21), சந்திரன்(20), ஹரிபிரசாத் (23), சோட்டையன் தோப்பை சேர்ந்த 18 வயதுடைய 2 பேர் மற்றும் ஒரு இளஞ்சிரார் உட்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று சிப்காட் காவல் சரக பகுதியில் மேலும் 5 வீடுகளில் அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை தினத்தால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.

    கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

    மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    • இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    தரிசனத்திற்கு முன்னதாக அவர்கள் கடலில் புனித நீராடி அதன்பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிற்பகலில் 1 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியேறியது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

    • செல்போன் செயலி மூலம் மோசடி.
    • உடந்தையாக இருந்த மேலும் ஒருவர் கைது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவரிடம் கூறினார். மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கி வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக கோவில்பட்டி வாலிபரிடம் பணம் கேட்டுள்ளார்.

    இதை நம்பிய அவர் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 159-ஐ ஜி.பே மூலம் கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடியில் ஈடுபட்டது தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜவேல் (வயது 31) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவருக்கு உடந்தையாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சிங்கசந்தரா பகுதியை சேர்ந்த கணேசன் (31) என்பரும் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    • இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
    • கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    திருச்செந்தூர்:

    சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது குடும்பத்தினர் 11 பேர் சென்னையில் இருந்து நேற்று காலை திருச்செந்தூருக்கு ரெயிலில் வந்து விடுதியில் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காலை 10 மணியளவில் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டெம்போ வேன் உருண்டு ஓடியது. அதில் பயணித்த சகாயராஜின் மனைவி சுமதி (வயது 37) படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் சகாயராஜின் தாயார் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ்குமார் (13), ரமேஷ் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (8), டெம்போ வேன் டிரைவர் குலசை, முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் விஜயகுமார்(38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இதில் மேரி மற்றும் தன்ஷிக் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், டிரைவர் சுப்பையா திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த் நகர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்நிலையில் போதையில் இருந்த மந்திர மூர்த்தியும், அவரது நண்பர் செல்வ மாரியப்பனும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் மந்திர மூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். செல்வ மாரியப்பன் லேசான காயம் அடைந்துள்ளார்.

    அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த மந்திர மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.
    • தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்- மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் பழக்கம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்து இருக்கும் என நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவத்தை பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை எல்லாம் பார்க்கும் போது தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இப்படி அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதாலும் பரிகார பூஜைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததினால் பக்தர்கள் தங்கள் வந்த வாகனங்களை கோவில் அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி செல்வதால் அந்த பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்கு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. 

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    இதனால் விடுமுறை தினங்கள் மற்றும் கூட்டம் அதிகமாக காணப்படும் நேரங்களில் கோவில் அருகில் உள்ள தெரு இளைஞர்கள் தங்கள் தெருவுக்கு வரும் பாதைகளை அவர்களே பேரிகாட் அமைத்து தடுக்கின்றனர்.

    மேலும் ஏராளமான வாகனங்கள் தெப்பகுளத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் வரை சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×