search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது.
    • எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும்.

    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்தது. சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர்.

    குறிப்பாக போர் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர வானிலை நிகழ்வுகள் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023-ம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர். 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா மற்றும் யோமன் ஆகிய நாடுகளில் நீடித்த பெரும் உணவு நெருக்கடிகள் தொடர்கின்றன.

    ஹைட்டி நாட்டில் மோசமான அரசியல் ஸ்திரமின்மை மற்றும் விவசாய உற்பத்தி குறைந்ததால் பட்டினி ஏற்பட்டுள்ளது. எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். 13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாக உள்ளன.

    வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
    • நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    "நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.

    • கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு.
    • விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று அறிவிப்பு.

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

    சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் போயிங்

    ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் முதல் பைலட்களில் ஒருவராக அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும், இந்த மிஷனை வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

    விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
    • இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    வாஷிங்டன்:

    ஈரான் அதிபர் இப்ரா ஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெ ரீப்பை சந்தித்து பேசினார்.

    இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் பொருளாதாரத் தடைகள் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார்.

    மேலும் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு விநியோகம் செய்த சீன மற்றும் பெலாரசை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறித்து அவர் கூறும்போது, பேரழிவு ஆயுதங்களை அதிகமாக்கி மற்றும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகள் என்பதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிறுவனங்கள் சீனா மற்றும் பெலாரசை அடிப்படையாகக் கொண்டவை. பெலாரசில் உள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதை நாங்கள் கண்டோம்.

    பேரழிவு ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பாக, அவை எங்கு நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
    • அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

    அமெரிக்க நாட்டில் வசிக்க உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகிறார்கள்.மேலும் வேலை மற்றும் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்கா சென்று வருகிறார்கள்.

    அமெரிக்காவின் வாழ்க்கை ,வசதிகள் பிடித்த காரணத்தால் அந்நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை பெற தினந்தோறும் ஏராளமான பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.





    2022 -ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி 46 மில்லியன் வெளிநாட்டில் பிறந்த மக்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் .இது அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையான 333 மில்லியனில் 14 சதவீதம் ஆகும்.

    மெக்ஸிகோவில் பிறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கியூபா மற்றும் டொமினிகன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள் என சமீபத்திய கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.




    2022 -ல் 128,878 மெக்சிகன் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றனர். அதை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்தவர்கள் 65,960 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர். பிலிப்பைன்ஸ் 53,413, கியூபா 46,913, டொமினிகன் குடியரசு 34,525, வியட்நாம் 33,246 பேர் குடியுரிமை பெற்றனர்.




    இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

    • அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் இருந்து வருகிறது.
    • வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா, சீனா என்னும் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது.

    தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீனக்கடல் பகுதியில் சீன ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் சீனாவின் ரஷிய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இன்னொரு புறம் இரு தரப்பு வர்த்தக மோதலும் இருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்லும் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், அங்கு வெளியுறவு மந்திரி வாங் யீ உள்ளிட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் எனவும் தகவல் வெளியானது.

    • மர்ம வாலிபர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான குற்ற வழக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது ஒரு மர்ம வாலிபர் அங்கு வந்தார். அவர் துண்டு பிரசுரங்கள் வீசினார். திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் அவர் உயிரிழந்தார்.

    விசாரணையில் அவரது பெயர் மேக்ஸ் அஸ்ஸரெஸ்லா (வயது 37) என்பது தெரியவந்தது. புளோரிடாவில் உள்ள செயிண்ட் நகரை சேர்ந்தவர். கடந்த வாரம் தான் அவர் அங்கிருந்து நியூயார்க் வந்தார். எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேக்ஸ் அஸ்ஸரெஸ்லா தீக்குளித்தபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
    • பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.

    உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் வயதானாலும் சிலருக்கு உடல் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் மெக்சிகன் பகுதியை சேர்ந்த 61 வயதான டேவ் பாஸ்கோ என்ற முதியவர் தனக்கு 38 வயது இளைஞருக்கான உடல் அமைப்புடன் இளமையாக தோன்றுவதாக கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.

    அவர் கூறுகையில், கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார். மேலும், என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. அதனால் நான் அதை திட்டமிடுகிறேன். மற்றவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை நான் இழக்க மாட்டேன் என்றார்.

    ஆர்கானிக் உணவு வகைகள் மற்றும் மாட்டிறைச்சி, கோழி, மீன் உணவு வகைகளும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுவதாக கூறும் டேவ் பாஸ்கோ பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

    உலகம் முழுவதுமே ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் புளோரிடாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதிக்கு போன் பில் கட்டணமாக ரூ.12 லட்சம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ரெனேரேமண்ட் என்ற 71 வயதான முதியவர் தனது மனைவி லின்டாவுடன் (வயது 65) சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவர் வெளிநாட்டில் பயன்படுத்திய மொபைல் டேட்டாவுக்கு கட்டணமாக 1,43,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம்) வந்துள்ளது.

    அவர் 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார். அவர் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார். எனினும் அதிகாரிகள் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் வயதான தம்பதியினர் சட்ட உதவியை நாடிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு உரிய விளக்கம் அளித்துள்ளது.

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    ×