என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி, கிருஷ்ணகிரியில் கனமழை: மரம் சரிந்து விழுந்து மின்விநியோகம் ரத்து
- கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.
தருமபுரி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக பெஞ்சல் புயல் உருவாகி தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நகர பகுதியில் நேற்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. வெயிலே தெரியாமல் காலை முதல மதியம் வரை குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. மதியம் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை இரவு விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால், அத்திவாசிய பொருட்கள் கூட வாங்க வெளிவர முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.
நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், 4ரோடு, பச்சையம்மன் கோவில் தெரு, சேலம் மெயின்ரோடு, மதிக்கோண்பாளையம், முகமதுஅலி கிளப்ரோடு, குமாரசாமிப்பேட்டை, மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் தருமபுரி நகரில் கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த புளியமரம் இன்று காலை சாய்ந்து விழுந்தது.
இதில் அந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால் வண்டியின் முன்பு சேதமாகி இருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
மரம் சாய்ந்து விழுந்தால் தருமபுரி நகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. உடனே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், அனுமந்தபுரம், பொம்மஅள்ளி, கெரகோடஅள்ளி, நாகணம்பட்டி, திண்டல், தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதியில் இரவு தொடங்கி காலை வரை பலத்த மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், பெரும்பாலை, பாலக்கோடு, அரூர், கம்பை நல்லூர், பாப்பிரெட்டிப் பட்டி, தொப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை கனமழை கொட்டியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பொதுமக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:
தருமபுரி-30மி.மீ, பாலக்கோடு-15மி.மீ, மாரண்டல்-6மி.மீ, பென்னாகரம்- 12 மி.மீ, ஒகேனக்கல்- 3 மி.மீ, அரூர்- 91.4 மி.மீ, பாப்பிரெட்டிப் பட்டி-75மி.மீ, மொரப்பூர்- 86 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 318.4 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெஞ்சல் புயல் எதிரொலியால் இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது.
இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், லண்டன்பேட்டை, சேலம் மெயின்ரோடு, பெங்களூரு சாலை, சப்-ஜெயில் ரோடு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
இதேபோன்று மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாம்பாறு, பாரூர், கிருஷ்ணகிரி டேம், உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்தது.
தொடர்ந்த பெய்து வரும் மழையின் தாக்கம் காரணமாக, பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பம்பாறு அணையில் 95 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் 71 மி.மீ, போச்சம்பள்ளி தாலுகாவின் பெணுகொண்டபுரத்தில் 46.4 மி.மீ மற்றும் பாரூரில் 37.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதிகளில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.