search icon
என் மலர்tooltip icon

  உள்ளூர் செய்திகள்

  • இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்.
  • சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.

  சென்னை:

  தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தினத்தந்தி என்ற நாளிதழை ஆரம்பித்து அதன் மூலம் பட்டித்தொட்டி எல்லாம் தமிழை பாமர மக்களும் அறிய செய்தவர் சி.பா.ஆதித்தனார். அவரது நினைவு நாளில் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.

  விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரம் நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு.

  இந்த மூன்றும் நாம் நம்பி இருக்கிற நிலையில் அ.தி.முக. ஆட்சியில் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள்.

  இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்

  காவிரியில் இந்த வருடம் 50 சதவீதம் தண்ணீர் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 50 சதவீதத்தை கூட கேட்க பெறாத துப்பில்லாமல் விவசாயிகளுக்கு தண்ணீர் பாசனத்திற்கு வழியில்லாத வகையில் ஒட்டுமொத்த துரோகத்தையும் தி.மு.க. அரசு செய்கிறது. சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.

  திருவள்ளுவரைப் பொருத்தவரை உலகப் பொதுமறை தந்தவர் உலகம் முழுவதும் அதிகமான அளவுக்கு ஒரு மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்றால் அது திருக்குறள். திருவள்ளுவரைப் பொருத்த வரையில் ஜாதி கிடையாது மதம் கிடையாது இனம் கிடையாது அப்படி இருக்கின்ற ஒருவரை காவி உடை அணிந்து திரு வள்ளுவரை சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று.

  தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன. தமிழினத்தையும் திருவள்ளுவரையும் அவமானப்படுத்துகிறவிதமாக தான் கவர்னரின் செயலை பார்க்க முடிகிறது. கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது.

  ஜாதி மதம் இனம் மொழி எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் நேசிக்க கூடிய ஒரு மிகப்பெரிய உன்னத தலைவர் ஜெயலலிதா. அண்ணாமலை போன்றவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறவர்கள்.

  குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கருத்து என்பது நிச்சயமாக யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.

  எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறை ஒரே காவல்துறை தான். தி.மு.க. ஆட்சியில் ஏண்டா காக்கி சட்டை போடுறோம் என்கின்ற மனக்கஷ்டத்தில் காவலர்கள் இருக்கிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • வட திசையில் நகர்ந்து நாளை மாலை தீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

  சென்னை:

  மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது.

  அது வங்காளதேசத்திற்கு தென்மேற்கே 800 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும்.

  இது மேலும் வட திசையில் நகர்ந்து நாளை மாலை தீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தீவிர புயலானது 26-ந்தேதி நள்ளிரவு தீவிர புயலாக மேற்கு வங்காள கடற்கரையை ஒட்டிய சாகர் தீவு மற்றும் கிபுபராவுக்கும் இடையே நாளை மறுநாள் நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையில் கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யும்.

  கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், திருப்பூர், நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

  • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
  • பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  சென்னை:

  தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  இதையடுத்து ஜூன் மாதம் 4-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. மேலும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

  இந்நிலையில் பள்ளிகள் வரும் ஜூன் 4-ந்தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  2024-25-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 4-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

  மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

  • பட்டாசு ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

  சிவகாசி:

  விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம் பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

  இந்த பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய அரசு வழங்கக்கூடிய நாக்பூர் லைசன்ஸ் மற்றும் சென்னை லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உரி மம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் பட்டாசு விபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

  இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பேரியம் நைட்ரேட் என்ற பச்சை உப்பு மற்றும் தொடர் வெடிக்கான தடையை அறிவித்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பேன்சி ரக தொடர் வெடிக்கான சாட் வெடிகளையும் அதில் பயன்படுத்தப்படும் பச்சை உப்பையும் கண்டுகொள்ளாமல்விட்டது.

  மேலும் தொடர் வெடியின் வகைகளில் ஒன்றான சரவெடி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே மூடி வருவதால் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் இன்று முதல் (24-ந்தேதி) மறு அறிவிப்பு வரும் வரை காலவறையற்ற விடுமுறை அளிப்பதாக அனைத்து சங்க உறுப்பினர்களாலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இதையடுத்து இன்று காலை பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் ஐயா சி.பா.ஆதித்தனார்.
  • தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

  தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச் செய்த ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் சகலமானவர்களுக்கும் சமமாக தமிழ் செய்திகளை எளியவருக்கும் எளிய பதிப்பாக சென்றடைய செய்து செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர்.

  எளிய செய்தி ஊடகத்திற்கு நாட்டில் மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் இன்று செய்தி ஊடகமாக மட்டுமல்லாமல் ஒளி ஊடகமாகவும் அவரது முயற்சி இன்று வெற்றிகரமாக பரிமளித்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  திருச்செந்தூர்:

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலையில் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குறிச்செல்வி, டாக்டர் சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஸ், மாநில இணைச் செயலாளர்கள் செல்வகுமார், இசக்கி முத்து, ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் பஜார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  இதில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணி ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், வரதராஜா ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், அச்சுத ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவபால ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபரர் ஆதித்தன், எஸ்.எஸ் ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன்,ராமானந்த ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை.
  • தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வலசப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

  அப்போது அந்த காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் காரின் மீது மோதியது. மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசு காரும் பஸ் மீது மோதியது.

  அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


  இந்தநிலையில் விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை. அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில் சோதனை செய்த போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு டன் அளவிற்கு குட்கா பொருட்கள் இருந்தன.

  காருடன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது, திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்தனரா என்ற விவரம் தெரியவரும். இதனால் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
  • போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

  கே.கே. நகர்:

  திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

  இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

  அப்போது சிவகங்கை, மேலதெரு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 53) மற்றும் சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த ஜபருல்லாகான் (56) ஆகிய இருவரும் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் பிறந்த தேதியில் மாற்றம் செய்தும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

  இதனை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.
  • சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது.

  கடலூர்:

  கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.

  இந்த பஸ் நிறுத்தம் வழியாக கடலூரில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.

  இந்நிலையில் தினந்தோறும் இவ்வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

  இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் நிற்காமல் வெளியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஒரு அரசு பஸ், புதுச்சேரி அரசு பஸ் உள்பட 8 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.