search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய சேலம் அணி 171 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை 175 ரன்களை எடுத்து வென்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ராஜேந்திரன் விவேக் 43 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் 19 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கடைசி 11 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேலம் அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் கோவை அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கோவை அணி பெற்ற 6வது வெற்றி இதுவாகும்.

    சேலம் சார்பில் பொய்யாமொழி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.
    • தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீருக்கு இது முதல் தொடராகும்.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
    • ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.

    ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.
    • சுப்மன் கில் கடின உழைப்பாளி, அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் போகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல். தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்கள் குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்தநாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.

    இதற்கிடையே, ஆர்.சி.பி. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சுப்மன் கில் சில காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சுற்றி வருகிறார். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் ஒரு துணை கேப்டன். அவருக்கு திறமை இருப்பதாக நான் நம்புகிறேன்.

    அவர் தனது பேட்டிங்கில் தொடர்ந்து பணியாற்றினால், பல ஆண்டுகளாக கேப்டனாக அவர் இன்னும் நிறைய மேம்படுத்த முடியும். கேப்டனாகவும் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு உள்ளது.

    இந்த ஆண்டு அவர் குஜராத்துக்காக (டைட்டன்ஸ்) தொடங்கினார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வைப்பது கொஞ்சம் வேலை என அவருக்குத் தெரியும். அதை நோக்கி அவர் செயல்படுவார். சுப்மன் கில் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் கடின உழைப்பாளி. அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்குத் தள்ளப் போகிறது என தெரிவித்துள்ளார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.

    இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்குடன் மோதினார்.

    இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்திக்கிறார்.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, பிரான்சில் தொடங்கிய ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் கொரிய அணி அறிமுகத்திற்காக படகில் வந்து கொண்டிருந்த போது, அறிவிப்பாளர் பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரில் அறிமுகப்படுத்தினார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் இன்னும் நடந்து வருவதால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தென் கொரியாவின் விளையாட்டு அமைச்சகத்திடம் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பத்தை ஒப்புக்கொண்டதுடன் வருத்தமும் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், கொரிய மொழியில் மன்னிப்பு கோரியுள்ளது.

    அதில், அறிமுக விழாவில் தென் கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    • சரப்ஜோத் சிங் மற்றும் ஜெர்மனி வீரர் ஆகியோர் தலா 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
    • சரப்ஜோத் சிங் 16x, ஜெர்மனி வீரர் 17x பெற்றிருந்ததால் வாய்ப்பை இழந்தார்.

    துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்று இன்று மதியம் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 33 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 10 முறை இலக்கை நோக்கி சுட வேண்டும். மொத்த புள்ளிகள் கணக்கிடப்பட்டு முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் பதக்கத்திற்கான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்திய வீரரான சரப்போஜத் சிங் தொடக்கம் மற்றும் ஐந்தாவது சுற்றில் சிறப்பாக செயல்படவில்லை. முதல் சுற்றில் 94 புள்ளிகளும், 5-வது சுற்றில் 93 புள்ளிகளும் பெற்றார். 4-வது சுற்றில் 100 புள்ளிகள் பெற்று அசத்தினார். மொத்தமாக 577 புள்ளிகள் பெற்றார். இதில் 16 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார்.

    அதேவேளையில் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர், துருக்கி வீரர் இஸ்மாயின் கெலேஸ் ஆகியோரும் 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

    ஆனால் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர் 17 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார். சரப்ஜோத் சிங் 16 முறைதான் துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டதால் 9-வது இடம் பிடித்து பதக்கப்போட்டிக்கான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூழிலையில் இழந்தார்.

    மற்றொரு வீரர் அர்ஜுன் சிங் சீமா 574 (17 முறை 10) புள்ளிகள் பெற்றி 18-வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
    • ரஷிய வீரர் ரூப்லெவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.

    இதில் ரஷிய வீரர் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.

    இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-7 (6-8), 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதில் வெற்றி பெற்ற பிரான்சிஸ்கோ, இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டியை சந்திக்கிறார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர் 59 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 75.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயெ அதிர்ச்சி காத்திருந்தது.

    தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி 18 ரன்னிலும், பென் டக்கெட் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மார்க் வுட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 6 ரன்னும், ஜோ ரூட் 2 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தியது.
    • வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தியது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று தொடக்க விழாவுடன் தொடங்கியது. இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான போட்டி நடைபெற்றது. தகுதி சுற்றில் சீனா, தென்கொரியா, கஜகஸ்தான், ஜெர்மனி அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன.

    முதல் இரண்டு இடங்களை பிடித்த சீனா- தென்கொரியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்திற்காக மோதின. கஜகஸ்தான்- ஜெர்மனி அணிகள் வெண்கல பதக்கத்திற்காக மோதின.

    வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.

    சீனா- தென்கொரியா இடையிலான தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    இதன்மூலம பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது சீனா. தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றது.

    • முதல் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய பதிரனா 19 விக்கெட் எடுத்தார்.
    • சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு என்றார் பதிரனா.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரனா இடம்பெற்றுள்ளார்.

    பதிரனா 2022-ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐ.பி.எல். தொடரில் சிஎஸ்கே அணிக்காக 19 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.

    இந்நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் பதிரனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. ஓய்வறையில் டோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

    நான் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இருப்பேனா என தெரியாது. ஆனால் 2025 ஐ.பி.எல். தொடரை சி.எஸ்.கே. அணி நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.

    • ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர்.
    • இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர்.

    ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர்.

    இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.

    தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீரரும் 30 முறை சுட வாய்ப்பளிக்கப்படும். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும்.

    சீனா (632.2), கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின.

    முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் தங்கப் பதக்கத்துக்காகவும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காகவும் போட்டிப் போடும். 

    ×