என் மலர்
இந்தியா
- பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
- ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.
இதற்கிடையே பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதில் அவர் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு இருப்பது குறித்து ஊடகத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 'பிரதமர் மோடி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை படித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து நாட்டுக்கு பதில் சொல்லுங்கள்.
பிரிஜ்பூஷன் சிங்கை பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டின் பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அமைதியாக இருக்கிறார். விளையாட்டுத்துறை மந்திரி கண்ணை மூடிக் கொள்கிறார்.
பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். தாமதப்படுத்தி வருகின்றனர். இவரை ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.
- பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
- கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இதில் டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். மேலும் ஷாருக் ஷைபியை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண் டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அதே ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த புஷன்ஜித் சித்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணூரில் நேற்று நடந்த சம்பவத்திற்கும், ஏற்கனவே 3 பயணிகள் தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த 2 சம்பவத்தையும் இணைத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் இதுதொடர்பான தகவல்களையும் சேகரிக்க உள்ளனர். சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட மாநிலங்களில் சந்தேகப்படும் நபர்கள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான ஷாருக் ஷைபியின் காவல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது.
- இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த மாதம் முதல் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு 2 மடங்காக அதிகரித்தது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்து காணப்படுகிறது.
ஆங்கில வருட பிறப்பு முதல் ஏப்ரல் மாதம் வரை உண்டியல் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்தது.
கடந்த மாதம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் சுமார் 35 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் மே மாத உண்டியல் வருவாய் ரூ.110 கோடி மட்டுமே வசூலானது. மற்ற மாத உண்டியல் வசூலைவிட இது குறைவாகும்.
திருப்பதியில் நேற்று 62,407 பேர் தரிசனம் செய்தனர். 33,895 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் இலவச நேர ஒதுக்கீட்டில் வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
- ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் முள்ளக்கல்லை சேர்ந்தவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் ஜலந்தர் ஆயராக இருந்தார். அப்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த பிரச்சினை கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிராங்கோ முள்ளக்கல் ஜலந்தர் ஆயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. அவரது ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாலியல் புகார் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும், மறைமாவட்ட நன்மைக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- உலக சாதனைக்காக நடத்தப்பட்ட விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
- திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பராம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா கடந்த 26-ந்தேதி நடந்தது.
உலக சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஒரு மணப்பெண் தனது கணவர் பையில் மறைத்து வைத்திருந்த குட்காவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். யாரும் பார்க்கவில்லை என அந்த மணப்பெண் நினைத்துள்ளார்.
ஆனால் விழாவை பதிவு செய்த கேமிராவில் இந்த காட்சி பதிவானது. மணக்கோலத்தில் புதுப்பெண் குட்கா போடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 38 வினாடிகள் கொண்ட வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- தரமற்ற சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட இந்த சாலையின் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை போடப்படுவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.
இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை தார்பாய் போன்று அப்பகுதி மக்கள் வெறும் கைகளால் தூக்குவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 38 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தரமற்ற இந்த சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் மகாராஷ்டிரா அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Video Shows Maharashtra Villagers Lifting Newly-Made Road With Bare Hands https://t.co/R9JaB0eDMh pic.twitter.com/QyF45StasI
— NDTV (@ndtv) June 1, 2023
- கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
- விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு விமானங்கள் மூலமே வருகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவதற்கு விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வெளிநாடு வாழ் கேரள மக்கள் அரசிடம் புகார் கூறியிருந்தனர்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் இக்கோரிக்கையை ஏற்று கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி கேரள அரசு ஆலோசித்து வருவதாக மாநில சிறுதுறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார்.
கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒரு பயணிகள் கப்பல் மணிக்கு 35 கிலோ மீட்டர் தூரம் சென்றால் பைபோரில் இருந்து துபாய் சென்றடைய 3½ நாட்கள் ஆகும். இதற்கு கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையே ஆகும்.
இதுவே விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால் கப்பல் பயணத்தில் பயண நேரம் அதிகமானாலும், கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிய முதல் மாநிலம் கேரளா என்ற பெருமையை பெறும்.
- ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
- என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.
இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
- பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து சனோஜ்குமார் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்குட்பட்ட மனாட்டு பகுதியை சேர்ந்தவர் சனோஜ்குமார் சிங். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று புதுமண தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
ஆனால் திருமணத்திற்கு முன்பே பிரியங்கா குமாரி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரியங்கா குமாரியை சனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இருவரும் வீட்டை விட்டு ஓடுவதற்கும் திட்டமிட்டு இருந்தனர். இந்த விபரம் சனோஜ்குமாருக்கு தெரிய வந்தது.
அவர், பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தனது மனைவியை அவரது விருப்பப்படி காதலருடன் அனுப்பி வைத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
- நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.