என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
- முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம்.
- எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது.
பெருவாரியான பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்தும் அளிக்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். முகத்தை விட அதிகமாக கழுத்தில் தான் நிறைய வியர்வை தங்குகிறது, மற்றும் நகை, அணிகலன் அணியும் போது நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
* எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.
* முகத்தையும், கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.
அதேபோல் ஓட்ஸ், யோகர்டு, தக்காளி ஜூஸ் கலந்து பேக் போடவும் இது கழுத்து கருமைக்கு நல்ல பலனை தரும்.
* கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணி. சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்யவும். கழுத்துக் கருமை போகும்.
* கழுத்தின் கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது.
உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.
* அதேபோல் தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.
* ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும்.
* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விட்டு பிறகு கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
* தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும்.
* ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தமாவு நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நாளடைவில் அந்த கறுப்பு நீங்கிவிடும்.
* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை கழுத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வரலாம்.
* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.
* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு, தயிர் கலந்தும் தடவலாம்.
- கூந்தலை நேராக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்.
- போதிய ஊட்டச்சத்து இல்லாததால் தலைமுடி பாதிப்படைகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். போதிய ஊட்டச்சத்து இல்லாமை பராமரிப்பு இல்லாதது போன்றவை தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
இதுதவிர முடியை நேராக்குவதற்கு பலரும் ஸ்ட்ரெய்ட்னரை பயன்படுத்துகின்றனர். முடியை நேராக்குவதற்கு அதிக வெப்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் இது நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்காது.
இயற்கையாகவே வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தலைமுடியை ஸ்ரெய்ட்னிங் செய்யலாம். இதில் முடியை நேராக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன. அந்த வகையில் தலைமுடியை சேதப்படுத்தாமல் நீண்ட நேரான கூந்தலுக்கு உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.
கற்றாழை ஹேர் மாஸ்க்
தலைமுடிக்கு கற்றாழை பயன்படுத்தும் போது அது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தலை முடியை மிருதுவாக்குகிறது.
முதலில் அரை கப் வெதுவெதுப்பான எண்ணெய் மற்றும் அரை கப் கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் கலந்து தலைமுடிக்கு தேய்த்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் கழுவலாம்.
வாழைப்பழ ஹேர் பேக்
வாழைப்பழம், தயிர், ஆலிவ் எண்ணெய் போன்ற 3 பொருட்கள் அனைத்துமே இயற்கை கண்டிஷனர்களால் நிரம்பியதாகும். நன்றாக பழுத்த வாழைப்பழங்களுடன் ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் கலந்து பிசைந்து பேஸ்ட் பதத்திற்கு செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் பூசி சிறிது நேரம் கழித்து வாஷ் செய்ய வேண்டும்.
பால் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
பால் புரதச்சத்து நிறைந்தது என்பதால் இது தலைமுடியை மென்மையாக்குகிறது. முடியின் தண்டையும் பலப்படுத்துகிறது. பாலுடன் தேன் கலந்து தலையில் தேய்த்து சுமார் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து கழுவலாம்.
முட்டை, ஆலிவ் ஆயில்:
முட்டையும், ஆலிவ் ஆயிலும் தலைமுடிக்கு ஊட்டமளித்து நன்மைகளை அளிக்கிறது. இது தலைமுடியை நேராக்குவதற்கு உதவுகிறது. 2 முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். இதனை ஒரு மணிநேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் வாஷ் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை நேராக்கவும், மென்மையாக்கவும் உதவுகிறது.
விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்
முதலில் விளக்கெண்ணெயை சூடாக்கி தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதை சுற்றி சூடான அல்லது ஈரமான துண்டை தலையில் போர்த்தி அரைமணிநேரம் கழித்து மென்மையான ஷாம்பு போட்டு வாஷ் செய்ய வேண்டும்.
- எண்ணெயில் ஃபேட்டி ஆசிட்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் ஆகியவை உள்ளன.
- எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
தற்போது முடி உதிர்வு என்பது இளைஞர்களிடையே காணக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்வதற்கும், மீண்டும் வளருவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆனால் சிலர், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், புதிய முடி வளரவும் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
நாம் உண்ணும் தவறான உணவு உட்பட பல காரணங்களால் இது ஏற்படலாம். இது தவிர காற்று மாசுபாடு, மன அழுத்தம், தைராய்டு, ஹார்மோன் மாறுபாடு மற்றும் சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என அனைத்தும் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
ஆனால் முடிக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதன் மூலமாக அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என நினைக்கிறோம். கூந்தலை பராமரிப்பதற்காக வாரந்தோறும் தவறாமல் எண்ணெய் குளியல் செய்பவர்களும் உண்டு.
தலைக்கு எண்ணெய் தடவினால் முடி நன்றாக வளரும் என்பது முழுமையான உண்மையல்ல. இருப்பினும், தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தேவையில்லை என்றாலும், கூந்தலை வறட்சி இல்லாமல் பராமரிக்க இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தருணத்தில் நம் அனைவருக்கும் எழும் ஒருகேள்வி, யாரெல்லாம் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தலாம்?, பயன்படுத்தக்கூடாது? என்பது தான்.
எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:
* தலையில் எண்ணெய் தடவுவதால் உச்சந்தலை வறண்டு போகாமல் இருப்பது. ஏனெனில் வறண்ட கூந்தல் உடைந்து நரைக்கும் வாய்ப்புள்ளது.
* வறண்ட கூந்தல் இருந்தால், தினமும் சிறிது எண்ணெயை கண்டிஷனர் போல தடவலாம். பொதுவாக தினசரி எண்ணெய் தேய்ப்பது அவசியமில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
* பொதுவாக எண்ணெயில் ஃபேட்டி ஆசிட்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் ஆகியவை உள்ளன. இதனால் பளபளப்போடு, முடியில் ஏற்படக்கூடிய நுனி பிளவு, உச்சந்தலை வறட்சி, பொலிவின்மை சரி செய்யப்படுகிறது.
யார் எல்லாம் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது?
சிலருக்கு இயற்கையாகவே தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெய் வெளியாகும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தலைக்கு தினந்தோறும் எண்ணெய் தேய்க்கக்கூடாது.
அதேபோல் பொடுகு பிரச்சனை இருப்பவர்களும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது. ஏனெனில் எண்ணெய் காரணமாக பொடுகுத் துகள்கள் உச்சந்தலையிலும் முடியிலும் ஒட்டிக்கொள்கின்றன. எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில், பொடுகு குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கலாம். எண்ணெய், இறந்த சரும செல்கள் சேர்ந்து, உச்சந்தலையில் அழுக்கு மற்றும் அரிப்பு ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆயில் மசாஜ் செய்து தலைக்கு குளிப்பது நல்லது. தோல் மருந்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கன்டிஷனர்கள் அல்லது இயற்கையான மூலிகை பொருட்களை பயன்படுத்துவது கூடுதல் பலனளிக்கக்கூடும்.
- சருமம் எண்ணெய் பசைத் தன்மையுடன் இருக்கும்.
- தோல் வறண்டு அரிப்பு பிரச்சனை ஏற்படும்.
மழைக்காலம் சருமத்தை மிகவும் பாதிப்படைய செய்கிறது. சிலருக்கு தோல் வெடிப்பு ஏற்படும் அல்லது எண்ணெய் பசைத் தன்மையுடன் இருக்கும். எனவே இந்த நேரத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் தான் சரும பிரச்சனை வரும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறை சீசன் மாறும் போதும் சருமப் பிரச்சனை ஏற்படும். குறிப்பாக மழைக்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு அரிப்பு பிரச்சனை ஏற்படும்.
மழைக்காலத்தில் சருமம் எண்ணெய் பசையாக மாறும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அதிகமாக வியர்க்கும். இதனால் முகப்பரு பிரச்சனை ஏற்படும். தோலில் இருந்து துர்நாற்றம் ஏற்படும்.
மேலும் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். எனவே இதனை தவிர்க்க பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தோல் நோய் தொற்றுகள் மற்றும் தோல் அலற்ஜி போன்றவை ஏற்படும்.
தவிர்க்கும் வழிகள்:
வாரத்திற்கு ஒருமுறை ஸ்கின் எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு சருமம் தெளிவாகும். முகப்பரு நீங்கும்.
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். மழைக் காலங்களிலும் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மேட் ஃபினிஷிங் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும்.
மேக்கம் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மழை காலத்தில் மேக்கம் நனைந்தாலும் அதனால் எந்த சரும பாதிப்பும் ஏற்படாது.
மாய்ஸ்சரைசர் சருமத்தை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எண்ணெய் பசை சருமம் இருந்தால் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் இரண்டு முறை லேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
டோனரை பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால் களிமண் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இது எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்துகிறது.
- கரும்புள்ளிகள் அல்லது தழும்புகள் இருப்பது முக அழகையே கெடுத்து விடும்.
- ஆண், பெண் இருவரும் முக அழகை பராமரிக்க அதிகமாகவே முயற்சி செய்வார்கள்.
ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் தங்களை அழகாக காட்டுவதில் அதிக முக்கியத்துவம் காட்டுவார்கள். அதிலும் தங்களின் முக அழகை பராமரிக்க அதிகமாகவே முயற்சி செய்வார்கள்.
முகம் என்னதான் அழகாக இருந்தாலும் முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது தழும்புகள் இருப்பது முக அழகையே கெடுத்து விடும்.
ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.
* கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.
* முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
* வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
* எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
* வெங்காயம் மற்றும் பூண்டை சரிசமமாக எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் இருக்கும் கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகள் மறையும்.
- இளைஞர்கள் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இளநரைதான்.
- வீட்டிலேயே சீயக்காயை பயன்படுத்தி இளநரையை போக்கலாம்.
இன்றைய இளைஞர்கள் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இளநரைதான். அதற்கு காரணம் நமது உணவு முறையாக இருக்கலாம், காலநிலை மாற்றமாக இருக்கலாம், இல்லை முன்னோர்களின் வழியில் வந்தவையாகக்கூட இருக்கலாம்.
பெண்களுக்கு கூந்தல் அழகு. கூந்தலை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் மருந்துகள் பற்றி பார்ப்போம். வீட்டிலேயே சீயக்காயை பயன்படுத்தி இளநரையை போக்கும் ஷாம்பு தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சீயக்காய்- ஒரு கிலோ
வெந்தயம்- 50 கிராம்
பச்சை பயறு- 50 கிராம்
காயவைத்த எலுமிச்சம் பழம் தோல்- 50 கிராம்
கறிவேப்பிலை- 50 கிராம்
ஒரு கிலோ சீயக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெந்தயம், பச்சைபயறு, எலுமிச்சை தோல், கறிவேப்பிலை ஆகியவற்றை காய வைத்து எடுத்து பொடியாக்கி சேர்க்க வேண்டும்.
இந்த பொடியுடன் சாதம் வடித்த தண்ணீர் அல்லது வெந்நீர் பயன்படுத்தலாம். சீயக்காய் பவுடரில் வெந்நீர் சேர்த்து பசையாக்கி கொள்ளவும். இதை தலையில் சேர்த்து குளித்துவர தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். இளநரை சரியாகும்.
சீயக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும். ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடி வெளுப்பாக வாய்ப்புள்ளதால் சீயக்காய் பொடியை பயன்படுத்துவது நல்லது.
- ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது.
- முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது.
உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி, வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா? இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா? முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும்,
அதற்குரிய பலனைப் பெறவில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் இந்த பிரச்சனைக்கு பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன.
ஆளிவிதை
ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
அப்படி கொதிக்கும் போது, அதிலிருந்து ஓர் ஜெல் போன்று வரும், அப்போது இறக்கி குளிர வைத்து, அந்த ஜெல்லை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தில் உள்ள சல்பர் தான்.
இளநீர்
இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை முடியின் வேர்ஜ்களில் படும்படி தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முடியை அலச வேண்டும். இந்த முறை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய்
விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் தூங்குவதற்கு முன்பு, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்
நெல்லிக்காய்
நெல்லிக்காய் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் சிறப்பான பொருள். இது தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது. எனவே 6-7 உலர்ந்த நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
அதிமதுர வேர்
நிச்சயம் இந்த பொருள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த அதிமதுர வேருக்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது.
எனவே 1/4 கப் அதிமதுர வேர் பொடியை சிறிது பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, வழுக்கை உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் தலையில் உள்ள பல பிரச்சனைகள் அகலும்.
செம்பருத்தி பூ
செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் செம்பருத்திப் பூ மயிர்கால்களை வலிமைப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் பொடுகுத் தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.
முட்டை மாஸ்க்
முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.
- நெயில்பாலிஷ்கள் நகங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.
கைகளை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். அதிலும் கை விரல்களில் உள்ள நகங்கள், நெயில்பாலிஷ்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது உடை மற்றும் மனநிலைகளுக்கு ஏற்ப நகங்களில் நெயில்பாலிஷை போடுவார்கள். ஆனால் சில நேரங்களில் நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தப்படும் ரிமூவர் இல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...
ஹேன்ட் சானிடைஷர்
நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற ஹேன்ட் சானிடைஷர் பயன்படுத்தலாம். சிறிய துண்டு பஞ்சில் ஹேன்ட் சானிடைஷரை ஊற்றி நகங்களை துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதில் நீங்கிவிடும்.
வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு
நெயில் பாலிஷை அகற்ற வினிகர் மற்றும் எலுமிச்சை உதவியாக இருக்கிறது. இதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் நான்கு சொட்டு வினிகர் கலந்து கொள்ள வேண்டும். இதனை கை விரல் நகங்களில் தட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பின்னர் காட்டன் பஞ்சினால் துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதாக அழிந்துவிடும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு
நகங்களில் உள்ள கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு உதவுவது போல நெயில் பாலிஷையும் அகற்றுகிறது. இதற்கு சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்க வேண்டும். இந்த நீரில் 5-ல் இருந்து 10 நிமிடங்கள் நகங்கள் நனையும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு நகங்களில் உள்ள நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.
டூத் பேஸ்ட்
முதலில் டூத் பேஸ்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஸ்சின் உதவியுடன் நகங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும்.
பெர்ஃபியூம்
நெய்ல் பாலிஷை அகற்ற பெர்ஃபியூம் உதவியாக இருக்கிறது. சிறிது பெர்ஃபியூமை காட்டனில் தெளித்து நகங்களை துடைக்கலாம். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்த்துவிடலாம்.
- அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
குளிக்கும் போது முடி உதிர்வது என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே எளிதில் தீர்வு காண முடியும்.
முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள் கூட தலைமுடியையை தேய்த்து குளிக்கும் போது முடி உதிருவதை பார்த்திருப்பார்கள்.
பலர் தலைமுடியை கட்டிக்கொண்டு குளிக்கச் செல்வார்கள். தண்ணீரில் முடியை நனைத்த பிறகு அவிழ்த்து விடுவார்கள். இதனால் கூந்தல் உதிரும் அபாயம் அதிகம் உண்டு. எனவே குளிப்பதற்கு முன் தலைமுடியை சீப்பு வைத்து சீவி சிக்குகளை அகற்றிவிட்டு தேய்த்து குளிக்கும் போது முடி உதிர்வை தவிர்க்க முடியும்.
சிலர் அதிக விசையுள்ள ஷவர் அல்லது ஓடும் தண்ணீரான ஆறு குளங்களில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் முடியின் வேர்கள் வலுவிழக்க நேரிடும். குறிப்பாக முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தலைமுடியை சுத்தம் செய்யும் போது ஷாம்பு போட்டு சுத்தம் செய்வதுண்டு. குறிப்பாக ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை அதிக அளவில் பயன்படுத்தும் போது முடி வறட்சி அடைந்து முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
மேலும் ஷாம்புவுடன் கண்டிஷனரை பயன்படுத்தாமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். குறிப்பாக வறண்ட கூந்தலை உடையவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தாவிட்டால் முடி உடைதல், முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும்.
பலர் தலைக்கு குளிப்பதையே மிகவும் அலட்சியமாக இருப்பார்கள், தலைக்கு குளித்த பிறகு ஈரத்தை உறிஞ்சுவதற்கு டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாளும் போது முடி பலவீனம் அடைந்து உதிர்கிறது.
முடி உதிர்வுக்கான காரணங்கள்:
* போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும். ஜின்க், செம்பு, புரதம் மற்றும் இரும்பு சத்து உங்கள் உணவில் நிச்சயம் இருக்க வேண்டும்.
* வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும்.
* உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும்.
* தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
* பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
* கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும்.
* இருதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.
* அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
* புற்றுநோய், குடல் நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்.
* கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், தலைமுடி உதிர்வு ஏற்படும்.
* சரியான முறையில் தலைமுடியை பராமரிக்கவில்லை என்றாலும், முடி உதிர்வு ஏற்படும்.
* வயதாவதால் முடி உதிர்வு ஏற்படும்.
* உடல் எடை குறைவு காரணமாக முடி உதிர்வு ஏற்படும்.
- அடர்த்தியான கண் புருவங்கள், கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது.
- கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருள்.
இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புவர். நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. இதனை இயற்கையாகவே வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி செய்யலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்தானது கண் இமை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில் தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவும் போது இமைகளை நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்:
கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக அமைகிறது. மேலும் கண்களை அழகாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் முடியின் புரதங்களை பாதுகாக்கிறது. இதற்கு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை மஸ்காராவை பயன்படுத்தி கண் இமைகளில் லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.
வைட்டமின் ஈ:
வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது இமைகளை வலுப்படுத்துவதுடன், அவை உடைவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு சுத்தமான தூரிகை அல்லது விரலை பயன்படுத்தி சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயை கண்களில் தடவ வேண்டும். இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் இமைகளை ஈரப்பதமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெய்:
முடி ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயமாகும். ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் இது முழுமையான தோற்றத்தைத் தருகிறது. ஒரு சத்தான மஸ்காரா அல்லது பருத்தி துணியை எண்ணெயில் தோய்த்து, படுக்கைக்கு முன்னதாக கண் இமையில் தடவ வேண்டும். பிறகு இதை காலையில் கழுவி விடலாம். இப்போது தடிமனான, ஆரோக்கியமான கண் இமைகளைப் பெறலாம்.
- சரும வறட்சி, தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
- பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.
கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது வழக்கம்.
ஆனால், மழைக்காலங்களில் வேறுவிதமான சரும பிரச்சினைகளும் ஏற்படும். குறிப்பாக, சரும வறட்சி உள்பட தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
இதனை சமாளிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..
தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் முகம், உடல் முழுக்க தடவி, வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கும், மழை காலத்திற்கும் ஏற்ற டிப்ஸ். இது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்குவது அவசியம். அவ்வாறு ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை நீக்கலாம். கெமிக்கல் பேஷியலை செய்வதற்கு பதிலாக பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.
அந்த வகையில், சரும பொலிவுக்கு பப்பாளி பழம் எப்போதும் சிறந்தது. பப்பாளி பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி காய்ந்ததும் சிறுது நேரம் கழித்து கழவி விடவும். இது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.
உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மழைக்காலத்தில் சேற்று புண் அதிகம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர விரைவில் குணமாகும்.
- போஹேமியன் ஃபேஷன் என்பது மேற்கத்திய மற்றும் இந்திய பாணிகளுக்கு இடையிலான இணக்கமான இணைப்பாகும்.
- பொஹேமியன் நகைகள் பொதுவாக இறகுகள், மணிகள், கற்கள் மற்றும் தோல் போன்ற இயற்கைப் பொருட்களையும், சிக்கலான வடிவமைப்புகளையும் துடிப்பான வண்ணங்களையும் கொண்டுள்ளது.
"போஹோ" என்ற வார்த்தை உண்மையில் சுதந்திரமான அழகியல் என்பதை குறிக்கிறது. "போஹோ" என்பது போஹேமியன் என்பதன் சுருக்கமாகும், அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த பயணிகள் அல்லது அகதிகளாக இருந்தனர். இது உண்மையில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அழகியலை பிரதிபலிக்கும் வாழ்க்கை முறை ,பயணம் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறது. போஹேமியன் பாணி 1700 களில் தோன்றியது, ஆனால் ஃபேஷனில் அதன் செல்வாக்கு 19 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது.
போஹோ நகைகள் என்பது போஹேமியன் கலாச்சாரத்திலிருந்து உருவான ஒரு பாணியாகும். இது சுதந்திரமான, பழங்குடி இனமாக விவரிக்கப்படுகிறது.
போஹோ நகைகள் தனித்துவமானது, ஏனெனில் ஒவ்வொரு துண்டுகளும் கையால் செய்யப்பட்டவை. பிரத்யேக போஹேமியன் நகைகள் பிரகாசமான வண்ணங்கள், துணிகள், தோல், பிரம்பு மற்றும் பிற இயற்கையான மூலப்பொருட்களின் கூறுகளைக் கொண்டுள்ளன. சரியான போஹோ தோற்றத்தை கொடுக்க விளிம்புகள் மற்றும் குஞ்சங்களும் உள்ளன. சில கலைஞர்கள் தங்கள் படைப்புகளை எதிர்பாராத அலங்காரத்துடன் இணைத்து அதை இன்னும் தனித்து நிற்கச் செய்கிறார்கள். பொஹோ நகைகள் தங்க மஞ்சள், பிரகாசமான இளஞ்சிவப்பு, ஜேட், டர்க்கைஸ், செவ்வந்தி, குங்குமப்பூ மற்றும் மெஜந்தா போன்ற வண்ணங்களில் விளையாடுவதை காணலாம். வெற்று நிறங்களுக்குப் பதிலாக கலப்பு வண்ணங்களும் உள்ளன.
போஹேமியன் பாணி உலகளாவிய பிரபலத்தை அடைந்துள்ளது, இது ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கு தனித்துவமான மற்றும் தனிப்பட்ட அணுகுமுறையை விரும்பும் நபர்களை ஈர்க்கிறது. இது சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டின் உணர்வை ஊக்குவிக்கிறது, பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக வாழ விரும்புபவர்களையும், சில சமயங்களில் நாடோடியாக வாழ்வதையும், காலனிகள் அல்லது கம்யூன்களில் வசிப்பவர்களையும் இந்த நகைகள் ஈர்க்கிறது, சமூகத்தின் வலுவான உணர்வை வளர்க்கிறது. பெண்களின் போஹோ ஸ்டைல் நகைகள் என்று வரும்போது, மிகவும் தனித்துவமானது, சிறந்தது என்று சொல்லலாம். ஒரு ஜோடி வண்ணமயமான இறகு காதணிகளை அணியும்போது, நீங்கள் சுதந்திர பறவையாக உணர்வீர்கள்.
போஹேமியன் ஃபேஷன் என்பது மேற்கத்திய மற்றும் இந்திய பாணிகளுக்கு இடையிலான இணக்கமான இணைப்பாகும். இந்திய அழகியல் போஹோ பாணிக்கு நன்றாக உதவுகிறது. இயற்கை துணிகள், பிரகாசமான வண்ணங்கள் ஆகியவற்றின் வசதியையும் எளிமையையும் வெளிப்படுத்தும் ஒரு எளிய வழி போஹேமியன் பாணி. போஹேமியர்கள் சமூக கட்டமைப்புகள் மற்றும் மரபுகள் மீதான அலட்சியத்தின் அடிப்படையில் வண்ணமயமான எதிர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றனர்.
தற்போது, இந்தியாவில் உள்ள போஹேமியன் பாணியில் பேன்ட் அல்லது கட்-ஆஃப் ஷார்ட்ஸ் முதல் ஜீன்ஸ், மேக்சி டிரஸ்கள், டூனிக்ஸ், ஜிப்சி ஸ்கர்ட்ஸ், வால்மினஸ் பெட்டிகோட்ஸ், பட்டன் டவுன் காலர் குர்தா போன்ற அனைத்து வகையான பொருட்களும் அடங்கும். போஹேமியன் சிக் ஃபேஷன் ஹெட்பேண்ட் போன்ற ஆபரணங்களிலும். ஆடம்பரமான பெல்ட்கள், சங்கு மற்றும் வண்ண மர வளையல்கள், பிரேஸ்லெட் நகைகள், ரத்தினக் கற்கள், மணிகள் மற்றும் துப்பாக்கி உலோகத் துண்டுகள், கணுக்கால்கள், மிக்ஸ் அண்ட் மேட்ச் நெக்லஸ்கள், தொங்கும் காதணிகள் காலணிகளைப் பொறுத்தவரை, இது கோலாபுரி சப்பல்கள், மொஜ்ரிகள் மற்றும் பாரம்பரிய வடிவங்களைக் கொண்ட செருப்புகளுடன் உயிரோட்டமாகத் தெரிகிறது. பொஹேமியன் நகைகள் பொதுவாக இறகுகள், மணிகள், கற்கள் மற்றும் தோல் போன்ற இயற்கைப் பொருட்களையும், சிக்கலான வடிவமைப்புகளையும் துடிப்பான வண்ணங்களையும் கொண்டுள்ளது.
இந்த பாணி கடந்த காலத்தில் மக்களின் ஃபேஷன் உணர்வை பாதித்தது. இது இன்றைய தலைமுறையை மிகவும் ஆட்கொண்டுள்ளது.
போஹேமியன் நகைகள் நிதானமான, கவலையற்ற பாணியுடன் தொடர்புடையது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் போஹேமியன் ஃபேஷன் உணர்வைத் தழுவும் நபர்களிடையே பிரபலமாக உள்ளது. கழுத்தணிகள், காதணிகள், வளையல்கள், மோதிரங்கள் மற்றும் கணுக்கால்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இதைக் காணலாம். தனித்துவமான மற்றும் தனிப்பட்ட தோற்றத்தை உருவாக்க பல்வேறு துண்டுகளை கலந்து அடுக்குவதற்கு இந்த பாணி அனுமதிக்கிறது. போஹேமியன், அல்லது போஹோ, பாணியானது அதன் சுதந்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அழகியல், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் காலங்களிலிருந்து தாக்கங்களை பெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்