search icon
என் மலர்tooltip icon
    • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
    • மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

    புதுடெல்லி:

    பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

    பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரில் நடைபெற்றது.

    'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

    சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடினர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ரஷியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷிய அதிபர் புதினைச் சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

    பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இது 5 ஆண்டுக்கு பிறகு இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 44 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 80 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி 50 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா தலா 38 ரன்கள் எடுத்தனர்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இலங்கை 38.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

    ஆட்ட நாயகன் விருது மகேஷ் தீக்ஷனாவுக்கு அளிக்கப்பட்டது.

    • புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது.

    புவனேஸ்வர்:

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ம் தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    அதன்படி, 24-ம் தேதி மாலை 5 மணி முதல் 25-ம் தேதி காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்ப்படுகிறது.

    டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஆஸ்திரியா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஜோடி உடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-5, 10-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் காலிறுதியில் போபண்ணா ஜோடி அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதுகிறது.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    பிரியங்கா காந்தியின் கையில் ரூ.52 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளது. 30.09.2024ம் தேதியின் படி பிரியங்கா காந்தியின் டெல்லி எச்டிஎப்சி வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம் பணம் உள்ளது. டெல்லி யுசிஓ வங்கியில் ரூ.80,399 ரொக்கப்பபணம் இருக்கிறது. அதேபோல் கேரளா கனரா வங்கியில் ரூ.5,929 சேமிப்பாக இருக்கிறது.

    மியூச்சுவல் பண்ட் முறையில் ரூ.2.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சொந்தமாக ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த காரை அவரது கணவர் ராபர்ட் வதேரா 2004ல் பரிசளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு ரூ.8 லட்சமாகும். ரூ.1.15 கோடி மதிப்புக்கு தங்க நகை ஆபரணங்கள் உள்ளன. இதுதவிர ரூ.29.55 லட்சம் மதிப்பிலான 59.83 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது.

    மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 689க்கு அசையும் சொத்து உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் மொத்தம் ரூ.37.91 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. அதேபோல் அசையா சொத்துகளை எடுத்து கொண்டால் பிரியங்கா காந்தியிடம் ரூ.7 கோடியே 74 லட்சம் உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.27 கோடியே 64 லட்சத்துக்கு அசையா சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மொத்தமாக பார்த்தால் பிரியங்கா காந்தியிடம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் என்று மொத்தம் சுமார் ரூ.12 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.
    • 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது

    வங்கதேசம் 

    வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனையில் ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டங்களின்மூலம் தூக்கி எறியப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆபத்தான சூழலில் இந்தியாவுக்குத் தப்பி வந்து தஞ்சமடைந்துள்ளார் ஹசீனா.

     

    வங்கதேச நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் அவருக்கு எதிராக பேசியவர்கள், செயல்பட்டவர்கள் என பலர் அவ்வப்போது காணாமல் போயினர். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அந்த சிறைகளிலிருந்து வெளியே வந்தவர்கள் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

     கண்ணாடிகளின் வீடு 

    இந்த சிறைகளுக்கு 'அயினாகோர்' என்று பெயர். இதற்கு கண்ணாடிகளின் வீடு என்று பொருள். 2009இல் ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.

    அரசுக்கு எதிராக சிறிய அளவில் போராட்டம் நடத்தியவர்களும் கூட அதிகாரப்பூர்வமாகக் கடத்தப்பட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு தடயம் இல்லாமல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய சிலர் ரகசிய ராணுவ தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டனர். அதுவே அயினாகோர் என அழைக்கப்பட்டது என அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

    காணாமல் போனவர்கள் 

    ஹசீனா அரசுக்கு சவாலாக இருக்கும் யார் ஒருவரையும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த காணாமல் போகும் நிகழ்வு என்று அந்த இதழ் கூறுகிறது. இதன்படி, 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    சித்ரவதை

    சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களில், சிலர், தங்களுடைய இடத்திற்கு மேலே காலையில் ராணுவ அணிவகுப்பு நடப்பதற்கான சத்தம் கேட்டது என கூறுகின்றனர். சிறையில் உள்ளவர்களால், அவர்களை தவிர வேறு நபர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே அதற்கு கண்ணாடிகளின் வீடு என பெயர் வந்துள்ளது. விசாரணையின்போது, உடல்ரீதியான சித்ரவதைகளைக் கைதிகள் அனுபவித்தனர்.

    அந்த சித்திரவதைகளால் அவர்கள் உயிரிழக்காமல் இருக்க சுகாதார பரிசோதனைகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை கைதிகளுக்கு முடி வெட்டி விடப்படும். அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்ய வேண்டும் என்பதே இந்த சிறைகள் ஏற்படுத்தப்பட முக்கிய இலக்கு என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

    ஜன்னல்கள்

    வழக்கறிஞர் அகமது பின் காசிம் 2016-ல் பிடிக்கப்பட்டார். அவருடைய கண்களையும், கைகளையும் கட்டி சிறையில் வைத்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பின்பு வெளியே வந்ததும், முதன்முறையாக புதிய காற்றை சுவாசிக்கிறேன் என்றார்.

    சிறைக்குள் ஜன்னல்கள் இல்லை. வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது. எல்லா நேரமும் காசிமுக்கு உலோகத்திலான கைவிலங்கு போடப்பட்டு இருந்தது. சிறைகளின் அறைகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும். சிறை அறைகளில் பெரிய மின்விசிறிகள் ஓடியபடி இருக்கும்.

    காவலர்களின் உரையாடல்கள் கைதிகளுக்குக் கேட்க கூடாது என்பதற்காகவும், கைதிகளை மனரீதியாக நிலைகுலைய வைப்பதற்கும் இதுபோன்ற விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

     

    அதிகாரம் 

    வரலாறு நெடுகிலும் அதிகார மையங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளின் ஒரு வடிவமே இந்த கண்ணாடிகளின் வீடு. இதற்கு ஷேக் ஹசீனா உட்பட ஆட்சியாளர்கள் யாரும் விதிவிலக்கல்ல. சில இடங்களில் அது கண்ணாடிகளின் வீடாக இருக்கிறது, சில இடங்களில் அது வேறு வடிவங்களில் இருக்கிறது என்பதே ஒரே வேறுபாடு.

    • துருக்கியில் பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது.
    • பதில் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அங்காரா:

    துருக்கி தலைநகர் அங்காராவில் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது.

    இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர் என்றும், 14 பேர் காயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. பதில் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் படையினர், போலீசார், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால் அப்பகுதி கலவர பகுதியாக காட்சி அளிக்கிறது. குர்தீஷ் பிரிவினைவாதிகள் அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி அதிபர் எர்டோகன் ரஷியா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    • ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம்.

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இரு நாட்டு எல்லை பிரச்சினையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    சீன அதிபரை சந்தித்த போது, இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதும், இருதரப்பு நம்பிக்கை தொடர்வதும் மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

    இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம். இந்தியா-சீனா உறவு நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்."

    "எல்லையில் கடந்த நான்கு ஆண்டுகளில் எழுந்துள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை வரவேற்கிறோம். எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் நம் உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர்.
    • நான் அஜித்தின் ரசிகன். இயக்குனரும் அஜித்தின் ரசிகர்தான்.

    மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவில் தான்கென ஒரு அடையாளத்தை நிறுவும் வகையில் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர்.

    மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் துல்கர் சென்னையில் நடத்த அதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

    அஜித்தின் மங்காத்தா படத்தை போல லக்கி பாஸ்கர் படத்திலும், பணம் தொடர்பான விஷயங்கள் இருக்கிறது, எனவே அஜித்தை பின்தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுபப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், நான் அஜித்தின் ரசிகன். இயக்குனரும் அஜித்தின் ரசிகர்தான். அஜித்தை வைத்து படம் பண்ணவேண்டும் என்பது அவருடைய ஆசை.

    ஒருவரை தொடர வேண்டும் என பிளான் செய்யத் தெரியாது. அஜித்குமாரை நான் நிறைய மதிக்கிறேன். அவர் மாதிரி வேறு யாரும் வர முடியாது, அவர் அப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×