என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
- உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கும் குணம் உண்டு.
- சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
வெந்தய கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது. வெந்தய கீரையில் சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் ஏ.பி.சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் இந்த கீரை மலச்சிக்கலையும் போக்கும்.
உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. ஜீரணத்தை சரிசெய்யவும், உடலில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தவும் இதனால் முடியும்.
இளம் பெண்களுக்கு உடல்சூடு காரணமாக தலையில் பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும். இதற்கு உணவில் வெந்தய கீரையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெந்தய கீரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். தாதுகளுக்கு பலத்தை கொடுக்கும். இந்த கீரை சற்று கசப்பான ருசியை தந்தாலும், உணவு பதார்த்தங்களில் கலக்கும் போது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சிறந்த ருசியையும், மணத் தையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
வெந்தயகீரை- 1 கட்டு (சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்)
கோதுமை மாவு- 100 கிராம்
கடலை மாவு- 100 கிராம்
பச்சைமிளகாய் 2
இஞ்சி- சிறுதுண்டு
மஞ்சள்தூள்- 1/ 2 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 1/ 2 தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு
சர்க்கரை- 1 தேக்கரண்டி
தயிர்- 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு-1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தய கீரை, தயிர், உப்பு, எண்ணெய், எலுமிச்சை சாறு, சர்க்கரை போன்ற கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து இந்த கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது நீர்விட்டு நன்கு பிசைந்து, நீன்கள் விரும்பும் கட்லெட் வடிவத்தில் தயார் செய்யலாம். அதனை இட்டிலிதட்டில் வைத்து வேக வைக்க வேண்டும்.
அதன்பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து கலக்க வேண்டும். வேகவைத்து எடுத்துள்ள கட்லெட்களை அதில் போட்டு சிறு தீயில் லேசாக கிளறி எடுக்கலாம்.
மேலும் இதனை குழந்தைகளுக்கு பிடித்தமான மாலை நேர உணவாக கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
- இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
- காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
உடல் ஆரோக்கியத்தை பேண பலரும் பலவிதமான முறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில், அருகம்புல் சாறு, ஏபிசி ஜூஸ் போன்றவற்றை காலையில் அருந்துவார்கள். இவை பல வகையில் உடல் ஆரோக்கியத்த்திற்கு வழி வகுக்கும். அதே போல், வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தாலும் பல நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அவை குறித்து பார்க்கலாம்...
* சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது.
* காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
* தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் உள்ள ஆக்சாலிக் அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து வயிற்றில் கற்களை உருவாக்கி விடும்.
* மாத்திரைகளை எப்போதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.
* இனிப்புகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
* வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.
* காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீயை குடித்தால் 'காபின்' ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை அதிகளவு சுரக்க வைத்து நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள், குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.
- கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது.
- பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது.
மனிதர்கள் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். இந்த கனவுகளில் பெரும்பாலும் நிகழ்கால வாழ்வுக்கு தொடர்பே இல்லாதவை ஆகும்.
இந்த கனவுகள் ஏன் வருகின்றன? மூளை இதனை ஏன் உருவாக்குகிறது? என்பது குறித்து நரம்பியல் மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை. பொதுவாக மனிதர்கள் தூக்கத்தில் கண்களை மூடி இருந்தாலும் மூளை தனது சுய கட்டுப்பாட்டை மீறி தனது செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் தோன்றுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் கனவுகளில் தோன்றும் சம்பவங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு பெரும்பாலும் பொருத்தம் இல்லாததாகவே தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஆரோக்கியமான மனநிலை உள்ள நபர் கனவு காணும்போது அந்த கனவில் வரும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும்போது தெளிவான கனவுகள் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் உறக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் கனவுகளின் அர்த்தத்தை அந்த நபர் அடையாளம் காண முடியாமல் குழப்பத்தை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது. ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதி கனவு ஆகும். தூக்கத்தை கெடுக்கும் கனவுகள் தொடர்ந்து வந்து அன்றாட சிந்தனையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது.
- வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பருவநிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் பலரையும் ஆட்கொள்ளும். இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாவதற்கு நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதும் காரணமாக அமைகிறது. அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களும் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. அந்த பழக்கவழக்கங்கள் பற்றியும் அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்ப்போம்.
ஆழ்ந்த தூக்கமின்மை
நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது. தூக்கத்தின்போது உடல் சைட்டோகைன்களை உற்பத்தி செய்யும். இதுதான் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவி புரியும். போதுமான நேரமோ, ஆழ்ந்தோ தூங்காதபோது இந்த சைட்டோகைன்களின் உற்பத்தி குறையும்.
மேலும் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் மற்றும் செல்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து எளிதில் நோய்த்தொற்று நெருங்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தினமும் ஆழ்ந்து தூங்குவது அவசியமானது.
மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அதனால் ஏற்படும் அதிக மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். எனவே மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமானது.
உணவு பழக்கம்
கொழுப்புகள் அதிகம் கலந்திருக்கும் உணவுகள், குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிக்கும். உடல் நோயை எதிர்த்துப் போராடும் திறனையும் குறைக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லதல்ல.
நோய் எதிர்ப்புக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஏ, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் குறைவது உடலை பலவீனப்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பாழ்படுத்திவிடும். அதனால் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
சர்க்கரை உட்கொள்ளுதல்
அதிக சர்க்கரை கலந்திருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். புரத அழற்சியை அதிகரிக்கும். குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் சமநிலையையும் சீர்குலைக்கும். எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
வைட்டமின் டி பற்றாக்குறை
வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் நோய்த்தொற்றுகள் எளிதில் ஆட்கொண்டுவிடும். வெளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடாமல் அறைக்குள் முடங்கி கிடப்பவர்களில் பலர் வைட்டமின் டி குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
எனவே தினமும் காலையில் குறிப்பிட்ட நேரம் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதித்து டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
ஆன்டி பயாடிக் பயன்பாடு
பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன் படுத்துவது நல்லது என்றாலும் அதனை அதிகம் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும்.
அடிக்கடி ஆன்டிபயாடிக் பயன்படுத்துவது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவின் சமநிலையையும் சீர்குலைக்கும். இதுதான் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டாக்டரின் பரிந்துரைக்கேற்ப அளவோடு ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.
உடற்பயிற்சி இன்மை
உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது ஆரோக்கியத்தை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும், அவற்றின் வேலைகளை திறம்பட செய்து முடிப்பதற்கும் துணை புரியும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது போன்ற பழக்கங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழி வகுக்கும்.
சுகாதார நடைமுறைகள்
சுகாதாரத்தை முறையாக பின்பற்றாவிட்டால் நோய்க்கிருமிகள் எளிதில் உற்பத்தியாகி நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவி நோய்களுக்கு நம்மை ஆளாக்கிவிடும்.
- கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.
- தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க, இஞ்சியை சிறிதாக வெட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
* முட்டை வறுவல் செய்யும்போது அசைவ வாசம் வராமல் இருக்க கொத்தமல்லியை நன்றாக கசக்கி தூவி கிளற வேண்டும். அப்போது வாசம் நீங்கிவிடும்.
* சோள மாவில் பலகாரம் அல்லது சப்பாத்தி, பூரி செய்யும்போது சிறிதளவு ஓமம் சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.
* சமையல் அறையில் ஈக்கள் தொல்லை அதிகமாக இருந்தால், ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கி போட்டு விட்டால் ஈக்கள் ஓடோடி விடும்.
* ரசத்தில் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்ப்பதற்கு பதில் கொஞ்சம் முருங்கைக்கீரையை நெய்யில் பொரித்து சேர்த்தால் ரசத்தின் சுவையும், மணமும் கூடுவதோடு சத்தும் அதிகமாகும்.
* கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.
* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க, இஞ்சியை சிறிதாக வெட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
* தோசை வார்க்கும் முன்பு, கல்லில் கொஞ்சம் பெருங்காயத்தைப் போட்டு, அதன் மீது எண்ணெய் ஊற்றி கல் முழுவதும் தேய்த்து விடுங்கள். பிறகு தோசை வார்த்துப் பாருங்கள். சூப்பராக எடுக்க வருவதுடன், தோசையும் மணக்கும்.
- கால் நகங்கள் `ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் ஒரு சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளர்ந்து வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு வழிவகுக்கும். உள்நோக்கி வளரும் கால் நகங்கள் 'ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
காரணங்கள்:
நகங்களை தவறாக வெட்டுதல் அல்லது மிக குறுகியதாக வெட்டுதல், நகங்கள் அசாதாரணமாக வளைந்து வளர்வது, முன்பகுதி இறுக்கமாக உள்ள காலணிகள் மற்றும் இறுக்கமான காலுறைகளை அணிதல், அடிபடுவது மற்றும் கனமான பொருள் கால் விரல் மீது விழும்போது ஏற்படும் காயம், தவறாக நிற்கும் அல்லது நடக்கும் தோரணை, மரபணு காரணங்களால் பிறப்பில் இருந்தே கால் நகங்கள் வளைந்து இருத்தல், அதிக வியர்வையின் வெளிப்பாட்டால் கால் விரல்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவது, மோசமான கால் பராமரிப்பு.
தீர்வு:
கால்களை தினமும் 4 அல்லது 5 முறை, 15 முதல் 20 நிமிடங்களுக்கு, வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது எம்சம் உப்பு கலந்த நீரிலோ ஊற வைக்க வேண்டும். இதனால் நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மற்ற நேரங்களில் கால்களை உலர்ந்த நிலையில் பராமரிக்க வேண்டும்.
நகங்களை வெட்டும் போது வளைவு வரை சென்று வெட்டாமல் நேராக வெட்ட வேண்டும். முன் பகுதி அகலமாக அல்லது விசாலமாக உள்ள காலணிகளையே பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளில் ரத்த நாளங்கள் பாதிப்புள்ளவர்களுக்கும், நரம்புகளை பாதிக்கும் டயாபட்டிக் நியூரோபதி பிரச்சனை உள்ளவர்களுக்கும் உள் நோக்கி வளரும் நகங்களால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தொற்றுக்கள் ஏற்பட்டால் அதை கட்டுக்குள் கொண்டு வர நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அழற்சியை தடுக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
இம்முயற்சிகள் அனைத்தும் பலன் தராவிட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம்.
- இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
- ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.
இயற்கையை நேசிப்பவர்கள் நிச்சயம் மலையேற்றம் செய்வதற்கு ஆசைப்படுவார்கள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி வழியே நடந்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி, இயற்கை அழகை ரசித்தபடி மலை மீது ஏறும் அந்த பயணம் ஆனந்த அனுபவத்தை கொடுக்கும். கூடவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும். அவற்றுள் சில...
1. இதய ஆரோக்கியம்
'ஹைகிங்' எனப்படும் மலையேற்றம் செய்வது இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதையும் மேம்படுத்தும். இதய நோய் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
2. தசை
மலையேற்றத்தின்போது பயணிக்கும் நிலப்பரப்பின் தன்மையை பொறுத்து தசைகளுக்கு கிடைக்கும் நன்மை மாறுபடும். மலையின் உச்சிப்பகுதியை நோக்கி ஏறும்போது தொடையின் தசை பகுதிகள், முழங்கால்களின் பின் பகுதி தசைகள், இடுப்பின் பின் பகுதி தசைகள் வலுவடையும். மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பு, முழங்கால்கள், முதுகு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெறும்.
3. எடை மேலாண்மை
கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மலையேற்றம் சிறந்த வழிமுறையாக அமையும். எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையானது மலையேறும் பாதையில் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் மலையேறுபவரின் உடல் எடையை பொறுத்து மாறுபடும்.
4. எலும்பு அடர்த்தி
மலையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எலும்புகளை பராமரிக்கவும் உதவும். உயரமான, தாழ்வான, மேடான, பள்ளமான என பல்வேறு நிலப்பரப்புகளில் நடப்பதால் ஏற்படும் அழுத்தமும், நெகிழ்வுத்தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். எலும்பு வளர்ச்சியையும் தூண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
5. மனநலம்
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கும். மலைப்பிரதேசங்களில் நடந்தபடி நேரத்தை செலவிடுவதும், அங்கு நிலவும் அமைதியான சூழலும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இந்த ஹார்மோன் ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்த வழிவகுக்கும்.
6. சமநிலை
மலைப்பகுதி போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் நடப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சமநிலையை பேண உதவிடும். திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.
குறிப்பாக வயதானவர்களுக்கு அதிக பலனை கொடுக்கும்.
7. சுத்தமான காற்று
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும், உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதிலும் மலையேற்றம் செய்யும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதற்கும் துணை புரியும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க இது அவசியம்.
- நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன.
- சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது.
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நெய்யில் தாவர எண்ணெய், வனஸ்பதி மற்றும் விலங்கு கொழுப்புகள் கலக்கப்படுவதாக தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
இன்றைய காலத்தில் சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தாலும் சில எளிய வழிகளைப் பயன்படுத்தி நாம் அதை கண்டறியலாம்.
சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது.
சிறிது நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய் ஆகும்.
இரண்டாவதாக, நெய்யை ஒரு வாணலியில் வைத்து சூடுபடுத்தும்போது அது உருகி பிரவுன் நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய். அதனை தவிர்த்து, காலதாமதமாக உருகி, மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும்.
ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும்.
- 8 வடிவத்தில் நடக்கும்போது இடுப்பு, வயிறு போன்ற உடல் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல்பட தூண்டப்படும்.
- ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் உதவிடும்.
வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு '8' நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் வடிவத்தை வரைந்து விட்டு நடக்க தொடங்கினால் போதும். அது நடப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. அவற்றுள் முக்கியமானவை என்னென்ன என்று பார்ப்போமா?
* வடக்கு-தெற்கு திசையை நோக்கியவாறு 8 வடிவில் கோடுகளை வரைந்து கொள்ள வேண்டும். பின்பு வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி நடக்க தொடங்க வேண்டும். பின்பு தெற்கில் இருந்து வடக்கி நோக்கி நடைப்பயிற்சியை தொடர வேண்டும். இப்படி கடிகார திசையிலும், அதற்கு எதிரெதிர் திசையிலும் தலா 15 நிமிடங்களுக்கு இந்த பயிற்சியை மேற்கொண்டு வரலாம்.
* இந்த பயிற்சியின்போது 8 வடிவ கோட்டின் மீது மட்டுமே கவனம் பதிந்திருக்க வேண்டும்.
* கூடுமானவரை செருப்பு, ஷூ அணியாமல் வெறுங்காலில் நடப்பதற்கு முயற்சி செய்யலாம். அப்படி வெறுங்காலில் நடப்பது கூடுதல் நன்மையை பெற்றுத்தரும்.
* நமது உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில்தான் நமது உள் உறுப்புகளின் முக்கிய இணைப்பு புள்ளிகள் அமைந்துள்ளன. நடக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக உள் உறுப்புகள் அனைத்தும் துரிதமாக செயல்பட தொடங்கும். அது சார்ந்த ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற உதவிடும்.
* 8 வடிவத்தில் நடக்கும்போது இடுப்பு, வயிறு போன்ற உடல் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல்பட தூண்டப்படும்.
* 30 நிமிடம் மேற்கொள்ளும் இந்த பயிற்சி சுவாசத்திற்கும் பலம் சேர்க்கும். மூக்கடைப்பு இருந்தால் அதில் இருந்து விடுபடவும் முடியும். இரு நாசித்துவாரங்களும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கான சூழல் உருவாகும்.
* நுரையீரல் மற்றும் சைனஸ் குழியில் சளி சேர்ந்திருந்தால் அது கரைவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
* தினமும் இரண்டு முறை அரை மணி நேரம் இந்த பயிற்சி செய்தால் பாத வெடிப்புகள், முழங்கால் வலிகள் உள்ளிட்டவையும் குணமாகுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
* இந்த பயிற்சியின்போது ஆழ்ந்து சுவாசிப்பதன் காரணமாக ஐந்து கிலோகிராம் அளவுக்கு ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவதால், நுரையீரலில் சேர்ந்திருக்கும் சளியும் வெளியேறும். ஆக்சிஜன் அதிகமாக உட்கொள்ளப்படுவதால் உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும்.
* தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன் மற்றும் முழங்கால் வலிகள், முடக்கு வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை கட்டுப்படும்.
* இந்த பயிற்சியை தொடர்வது கேட்கும் சக்தி மேம்படும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் உதவிடும்.
* கண் பார்வையை மேம்படுத்தும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கும் வித்திடும். வரையப்பட்டிருக்கும் கோடுகளை கூர்ந்து கவனித்தபடி செல்வதால், கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்று, கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
* இந்த பயிற்சி முதுமையை தள்ளிப்போடவும் செய்துவிடும். இளமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட வைக்கும்.
- சின்ன கண்ணாடி டம்ளரில் தொடங்கி, பெரிய தொட்டிகள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலவற்றில் மீன் வளர்க்கலாம்.
- நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும்.
நகர்ப்புற வீடுகளில் தொட்டிகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது. மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் அன்றாடம் சிறிது நேரம் தொட்டிகளில் நீந்தும் மீன்களை கவனித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி அடைவதுடன், இதய பாதிப்பும் குறைவதாக கூறப்படுகிறது.
வீடுகளில் மீன் வளர்க்கும்போது சரியான தொழில்நுட்பங்கள் தெரியாததால் சிறிது நாளில் மீன் வளர்ப்பதை விட்டு விடுகின்றனர். அலங்கார மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதன் மூலம் மீன் வளர்ப்பை எளிதாக செய்ய முடியும்.
* மீன் தொட்டி
சின்ன கண்ணாடி டம்ளரில் தொடங்கி, பெரிய தொட்டிகள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலவற்றில் மீன் வளர்க்கலாம். வீடுகளில் பெரிய மீன் தொட்டிகளும், அலுவலகங்களில் சிறிய மீன் தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
தொட்டிகள் சிறியதோ, பெரியதோ... மீன் வளர்ப்புக்கு வாங்கும் தொட்டி நீர்க்கசிவு இன்றி இருக்க வேண்டும். எத்தனை மீன்களை வளர்க்கப்போகிறோமோ அதற்கு தக்கபடி நீள, அகலத்தில் தொட்டி வாங்குவது நல்லது. பொதுவாக, மீன் வளர்ப்பு தொட்டியின் ஆழமும், அகலமும் ஒன்றாக இருத்தல் அவசியம்.
தேவைக்கு அதிகமான பெரிய தொட்டிகளை தவிர்க்க வேண்டும். அதிகமான ஆழமுள்ள தொட்டிகளில் நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் தொட்டி உடைந்து விடும் அபாயம் உண்டு. மீன் தொட்டியை சமதளமான இடத்தில் வைக்க வேண்டும். பெரும்பாலும், கண்ணாடி தொட்டிக்கு கீழ், தெர்மாக்கோல் வைப்பது நல்லது. இது விரிசலை தவிர்க்கும்.
* மண் இடுதல், நீர் நிரப்புதல்
முன்பெல்லாம், மீன் தொட்டிக்குள் சரளை கற்களை நிரப்புவார்கள். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. அக்வாஸ்கேப் என்ற கலை மூலமாக மீன் வளர்ப்பு தொட்டிகளை அலங்கரிக்கிறார்கள்.
நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மணலை மீன் தொட்டிக்குள் நிரப்பி, மீன்களுக்கு சிறப்பான வாழ்விடத்தை உருவாக்குகிறார்கள். மேலும் நீர் பரப்பில் வாழும் நீர்வாழ் தாவரங்கள், பாசி வகைகள், பாசி படர்ந்த மரக்கட்டை... இவற்றை மீன் தொட்டிக்குள் அமைத்து, மீன்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவே மீன் தொட்டியை உருவாக்குகிறார்கள். இது கொஞ்சம் செலவு நிறைந்த வேலை. எளிமையாக மீன் வளர்க்க நினைப்பவர்கள், சிறிய கூழாங்கற்களை தொட்டிகளில் பரப்பி விடலாம். மேலும், இறந்து போன மெல்லுடலிகளின் ஓடுகள், சங்குகள், சிப்பிகள் போன்றவற்றை பரப்பி விடலாம்.
இதற்குப் பின்னர், தொட்டிக்குள் எந்த அளவுக்கு நீரை நிரப்ப விரும்புகிறோமோ அந்த அளவுக்கு நீரை நேரடியாக விடலாம். பொதுவாக ஆழ்துளை கிணறு தண்ணீரை மீன் வளர்க்க பயன்படுத்தலாம்.
* நீர்த்தாவரங்கள்
நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும். மேலும், மீன்கள் வெளியிடும் கரியமில வாயுவை இந்த தாவரங்கள் கிரகித்துக்கொள்ளும். முட்டையிடும் மீன்கள் இந்த நீர்த்தாவரங்களில் முட்டையிடும். மீன் வளர்ப்புத் தொட்டிகளில் வேலம்பாசி, செரட்டோபில்லம், நாஜாஸ் உள்ளிட்ட நீர்வாழ்த்தாவரங்களை வளர்க்கலாம். மீன்களை இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளில் இந்த நீர்வாழ்த்தாவரங்கள் கிடைக்கும்.
* வளர்ப்பு முறை
மீன்களை விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்த உடனேயே ஏற்கனவே மீன்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தொட்டிகளில் விடக்கூடாது. புதிய மீன்களை ஒரு கண்ணாடி குடுவையில் நல்ல தண்ணீரில் ஒரு சில நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் ஐந்து சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் விட்டு உடனே எடுத்து விடவும்.
பிறகு கண்ணாடிக்குடுவையில் வைத்து இந்த மீன்களை ஒரு வாரம் வரை கவனித்து வர வேண்டும. அந்த மீன்களுக்கு எந்தவித நோய்களும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே மற்ற மீன்கள் வளரும் தொட்டிகளில் விட வேண்டும்.
* வியாபார வாய்ப்பு
இதுபோல், மீன் வளர்ப்பில் ஈடுபடும்போது இதனை சிறிய தொழிலாகவும் செய்யலாம். சிறிய குடுவை மற்றும் தொட்டிகளில் அழகான மீன்களை வளர்த்து விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டலாம்.
- ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும்.
- தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
டீன்-ஏஜ் காலம் என்பது தனிப்பட்ட முறையில் உடல் வளர்ச்சி மற்றும் மனமாற்றம் நிறைந்த காலகட்டம். தனித்துவமான பேஷன் ஸ்டைலை கண்டறிந்து வெளிப்படுத்த இளைஞர்கள் விரும்புகிறார்கள். இந்தப் பதிவில் டீன் ஏஜ் வயதினருக்கான சில பேஷன் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
* தனித்துவமான ஸ்டைல்:
டிரெண்டுகளை பின்பற்றுவது நல்லதுதான். ஆனால் உங்களுக்குப் பிடித்தமான, உங்களுக்கு நன்றாக பொருந்தக்கூடிய ஸ்டைலை கண்டறிவது முக்கியம். பல்வேறு ஸ்டைல்களை முயற்சி செய்து உங்களுக்கு எது பிடித்துள்ளது, எது நன்றாக இருக்கிறது என்பதை முயற்சித்து பார்த்து சரியாக தேர்ந்தெடுங்கள்.
* உடலுக்கு ஏற்ற உடைகள்:
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் அமைப்பு உண்டு. அதற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தோற்றத்தை சிறப்பாக மேம்படுத்தலாம். ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும். நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள் உடலுடன் ஒட்டி இருக்கும் வகையில் உடை அணிவது நல்லது. இதுவே குண்டாக இருந்தால், அதிக தளர்வாக இல்லாமல் உங்களை ஒல்லியாக காட்டும்படியான உடைகளை தேர்வு செய்யவும்.
* தரமான ஆடை:
ஆடை விஷயத்தில் எப்போதும் மலிவை நோக்கி செல்லக்கூடாது. உயர்தர ஆடைகள் உங்களை மற்றவர்கள் மத்தியில் சிறப்பாக காண்பிக்க உதவும். சில நேரங்களில் உயர்தர ஆடைகளை வாங்குவது அதிக மலிவான ஆடைகளை வாங்குவதை விட சிறந்தது. தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* கூடுதல் உபகரணங்கள்:
ஆக்சஸரிஸ் எனப்படும் கூடுதல் அழகு உபகரணங்கள் உங்கள் ஸ்டைலுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்க சிறந்த வழியாகும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள், தொப்பிகள், கூலிங் கண்ணாடிகள் மற்றும் பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை உங்களது தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
- கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது.
- நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.
ஆடாதொடா எல்லாருடங்களிலும் எளிதாக வளரக்கூடிய செடி. பல்வேறு செடிகளை தின்னும் ஆடுகள், இதை தொட்டுக்கூட பார்க்காது. ஆடு தொடாது என்பதால் இதற்கு ஆடாதொடா என்று பெயர். ஆனால் இதனை பெரும்பாலானவர்கள் 'ஆடாதொடை' என்று அழைப்பார்கள். இந்த செடி ஈட்டி வடிவ இலைகளை கொண்டிருக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும்.
ஆடாதொடா கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது. குரலை மெருகேற்றுகிறது. அதனால் 'ஆடாதொடா இலையும், ஐந்து மிளகும் பாடாத வாய் எல்லாம் பாடும்' என்ற முதுமொழி உருவாகி விட்டது.
இதன் இலை கசப்பு தன்மையுடையது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளில் சிக்கி இருக்கும் கபத்தைக்கூட வெளியேற்றிவிடும். நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.
நீடித்த இருமல், நுரையீரலில் கபம் சேர்வதால் உண்டாகும் இருமல், தொண்டைகட்டு, கிருமி தொற்றுக்களினால் உருவாகும் சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு ஆடாதொடா சிறந்த மருந்தாகும்.
காச நோயாளிகள் இருமும்போது சளியில் ரத்தம் காணப்படும். அவர்களுக்கு உடல் சோர்வுற்று மூச்சிரைப்பு ஏற்பட்டு மாலை நேரங்களில் காய்ச்சலும் உண்டாகும்.
இதற்கு பத்து ஆடாதொடா இலைகளை அரைத்து, ஆவியில் வேகவைத்து, சற்று ஆறிய பின்பு சாறு பிழிந்தெடுக்கவேண்டும். அதில் 10 மி.லி சாறு எடுத்து, 4 தேக்கரண்டி திப்பிலி பொடி கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
தேவையான பொருட்கள்
ஆடாதொடா இலை- 500 கிராம்
சர்க்கரை- 300 கிராம்
சுக்கு- 5 கிராம்
மிளகு- 5 கிராம்
திப்பிலி- 5 கிராம்
ஜாதிக்காய்- 5 கிராம்
தண்ணீர்- 200 மி.லி
செய்முறை:
ஆடாதொடா இலையை அரைத்து சிறிது நீர் கலந்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு, சர்க்கரையை கொட்டி பாகு காய்ச்சவும். பதம் வருவதற்கு சற்று முன்பாகவே ஆடாதொடா சாற்றை சேர்த்து, சிறுதீயில் கம்பி பதம் வரும் வரை வைத்திருக்கவும்.
பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய் போன்றவைகளை பொடித்து தூளாக்க வேண்டும். அதன்பிறகு தீயை அணைத்து விட்டு அந்த கலவையில் இந்த பொடிகளை சேர்க்க வேண்டும்.
ஆறிய பின்னர் தேன் கலந்து ஈரப்பதம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுளலாம்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம். சளி, இருமல், மாதவிடாய் சமயம் உண்டாகும் அதிக ரத்த போக்கிற்கும் இது சிறந்த மருந்து.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நீடித்த சளி, இருமல் தோன்றினால் இதை தினம் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுங்கள். அவர்கள் அந்த அவஸ்தையில் இருந்து விடுபட்டு விடுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்