search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
    • சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    வன விலங்குகள், பறவைகளை பூங்காக்களில் கூண்டுக்குள் பார்க்கும் பார்வையாளர்கள் பரவசப்படுவார்கள். அதே நேரம் அவை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஆபத்தாக மாறிவிடும்.

    அந்த வகையில் நெருப்புக்கோழி ஒன்று சாலைகளில் ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி திடீரென சுரங்க பாதை பகுதிக்குள் புகுந்தது.

    தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய இந்த நெருப்புக்கோழி சாலைகளில் ஓடியதோடு, சில வாகனங்கள் மீது மோதி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    சிலர் தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், நெருப்புக்கோழி அழகாக ஓடுகிறது எனவும், மற்றொரு பயனர் நெருப்புக்கோழிக்கு சுதந்திரம் கிடைத்தது எனவும் பதிவிட்டுள்ளார்.

    • பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
    • நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர்.

    அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆற்றில் உள்ள இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில் அப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர். அவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் கவுதமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்தினார்.

    இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    • இந்த மாதம் தொடக்கத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.

    நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெரத் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக்காணக்கானோர் காயம் அடைந்தனர். மேலும் வீடுகளை இழந்தனர்.

    அம்மாகாண மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒருமாத காலம் ஆனது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைக்க 400 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒருவாரம் அனுமதி அளித்தது.

    ஒருவாரம் விசாரணைக்குப் பிறகு இன்று அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்கா அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது. "கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. அதன்படி டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கண்டனத்தை தெரிவித்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது தொடர்பாக கூறுகையில் "தனிப்பட்ட தூதர உரையாடல்கள் பற்றி பேசவில்லை. நாங்கள் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பது ஆகியவற்றை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதை யாரும் எதிர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

    வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களுடைய நடவடிக்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தேர்தலை சந்திக்க மிகவும் சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதை நாங்கள் அறிவோம்" என்றார்.

    ஏற்கனவே அதிருப்தியில் உள்ள இந்தியா, மேலும் அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    • ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக உள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி (33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
    • மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.

    பாங்காங்:

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

    குடிமக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டினருக்கு சொர்க்கப்பூமியாக நிகழும் தாய்லாந்துக்கு புதுமண ஜோடிகள், வாலிபர்கள் அதிக அளவில் வருகை தருவர். ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.

    இதனையடுத்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் உள்பட பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர். 415 எம்.பி.க்கள் எண்ணிக்கை கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்தில் 10 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

    இந்தநிலையில் பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்டமசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் தைவான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து மாறும். 

    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.

    இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.




    மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.



    இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-

    கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.

    • இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 பேர் பலியானார்கள்.
    • ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, "மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம்.

    இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பரதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன" என்றார்.

    • ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு.
    • சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

    தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் உண்டானது. சுவாவில் இருந்து 591 கி.மீ. தென்மேற்கு பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டதாக நில அதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.

    பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • கடன்களை அடைக்க வேண்டும் என்று நான் கடுமையாக படித்தேன்.
    • சொத்து விபரத்தை மறைத்து பொய் கூறியதால் தான் உழைப்பின் அருமையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.

    சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாங் யூடொங் தனது மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை என நாடகமாடி வந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகன் ஜான்ங் ஜிலோங் சமீபத்தில் அளித்த பேட்டி சீன வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் பேசிய ஜான்ங் ஜிலோங், எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர்கள் என்பதே தெரியாது. சாதாரண குடியிருப்பில் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில் தான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த நிறுவனமும் கடனில் இயங்குவதாக அப்பா தெரிவித்திருந்தார்.

    அதனால் அந்த கடன்களை அடைக்க வேண்டும் என்று நான் கடுமையாக படித்தேன். படிக்கும் போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது மாதம் 6 ஆயிரம் யுவான் சம்பளம் கிடைக்கும். அதை எனது தந்தையிடம் கொடுத்து கடனை அடைக்குமாறு கூறுவேன். நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அப்பா எங்களின் பொருளாதார நிலை குறித்து கூறினார். அவர் சொத்து விபரத்தை மறைத்து பொய் கூறியதால் தான் உழைப்பின் அருமையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.

    • சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது.
    • இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தின் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர். விபத்தில் இந்திய குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பலில் இருக்கும் இந்திய குழு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    எனினும், விபத்து சமயத்தில் பால்டிமோர் மேம்பாலத்தில் பணியாற்றி வந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மேம்பாலத்தில் ஏற்பட்ட குழிகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    "இதுவரை நடைபெற்ற தேடுதல் முயற்சி, இங்குள்ள கடல்நீரின் வெப்பநிலை மற்றும் பல்வேறு காரணங்களை வைத்து பார்க்கும் போது, விபத்தில் சிக்கியவர்களை இனியும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை," என்று அமெரிக்க கடலோர காவல்படையை சேர்ந்த ஷானன் கிலரீத் தெரிவித்துள்ளார்.

    "பால்டிமோரின் ஸ்காட் கீ மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தை +1-202-717-1996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது.

    ×