search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் இயக்குனர், டீன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

    கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அதுபோல் நேற்று நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அங்குள்ள ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.
    • மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார்.

    போதை தலைக்கேறிய மாணவிக்கு திடீரென தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவி, தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரும், இந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மாணவருக்கு பிறந்தநாள் என்பதால், அவர் சக மாணவர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார்.

    இதில் மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்த மாணவியை அவரது வீட்டுக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகளுக்கு மது வாங்கி கொடுத்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரம், கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று தொடங்கியது. புதுவை முழுவதும் வைக்கபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன், மாட்டு வண்டிகள் மூலம் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகர் சிலை முன்னே செல்ல அனைத்து சிலைகளும் அணிவகுத்து பின்னே சென்றன. ஊர்வலம் செல்லும் நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.படேல் சாலை வழியாக மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பிறகு விநாயகர் சிலைகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் திடீரென விநாயகர் சிலை அந்தரத்தில் மேலே சுழன்று மீண்டும் கரை பகுதிக்கு சென்றது. கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பொது மக்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு மேலே வந்து சுழன்றது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து கூச்சலிட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே கவர்னர் கைலாஷ்நாதன் தலைக்கு மேல் கிரேனில் ஏற்றிய 21 அடி விநாயகர் சிலை 3 முறை சுழன்றது.

    இதனை உணர்ந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கிரேன் ஆபரேட்டரிடம் கூறினர். கிரேன் ஆபரேட்டர் சுதாரித்து கொண்டு விநாயகர் சிலை சுழல்வதை நிறுத்தி கடல் பக்கம் திருப்பினார். அதேநேரத்தில் பாதுகாப்புடன் போலீசார் கவர்னரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இதனால் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

    • பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
    • நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர்.

    பாகூர்:

    புதுவை இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவுக்கு, கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை மீனவ கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சுமார் 96 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது.

    இதில், ஐ.ஆர்.பி.என். பட்டாலியன் போலீசாருக்கு, தலைமையகம், குடியிருப்புகள், பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த திட்டத்திற்கு, நரம்பை மீனவ கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும் அதனையெல்லாம் மீறி, பட்டாலியன் போலீசார் டெண்ட் கொட்டகை அமைத்து கண்காணித்து வந்தனர். இதனிடையே அப்போது பதவியில் இருந்த அமைச்சர், மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக வலியுறுத்தி வந்தார்.

    இது தொடர்பாக கவர்னர், போலீஸ் உயர் அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மீனவ மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆளும் கட்சி, எதிர் கட்சி என அரசியல் கட்சிகள் தேர்தலின் போது, நரம்பை கிராமத்தில் பட்டாலியன் மையம் வராது என வாக்குறுதி அளித்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் பல ஏக்கர் நிலம் சுற்றுலா துறைக்கும், உண்டு உறைவிடப்பள்ளி திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது. மீதமிருந்த இடத்தை நரம்பை கிராம மக்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்தி கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பட்டாலியன் படை கட்டுமான பணி கைவிடப்பட்டது என நம்பி இருந்தனர்.

    இந்நிலையில் புதுவை பட்டாலியன் போலீசார், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, துணை கமாண்டன்ட் சுபாஷ், உதவி கமாண்டண்ட் ரிஸ்வா சந்திரன், செந்தில் முருகன், ராஜேஸ் மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் இன்று காலை நரம்பை கிராமத்திற்கு வந்தனர்.

    இதனையறிந்த, நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், மீனவ கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதட்டமாக காணப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

    இதனால் எம்.எல்.ஏ.வுக்கும், பட்டாலியன் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதையடுத்து, பட்டாலியன் போலீசார் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பினர். தொடர்ந்து, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மீனவ மக்களிடம் பேசியதாவது:-

    கடந்த பட்ஜெட்டில் கூட, முதல்-அமைச்சர் ரங்கசாமி, இங்கு கடல் சார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். சுற்றுலா திட்டம், மீன் வளம் துறையின் மூலமாக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இருந்தது.

    இந்த பிரச்சினை மீண்டும் வராத அளவிற்கு, ஒரு நிரந்திர தீர்வு கிடைக்க துணையாக நிற்பேன். இது தொடர்பாக, ஊர் பஞ்சாயத்தாருடன், முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சரரை சந்தித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஒழுங்கு முறை மின்சார ஆணைய அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதன்பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முன்தேதியிட்டு கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இந்த மானியம் கண்துடைப்பு மோசடி என இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கம்யூனிஸ்டு (எம்.எல்.) இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • ரீகன் மீது சிறுமியின் தரப்பில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
    • சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தவளகுப்பம் அருகே தமிழகப் பகுதியான கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் என்ற சையது (வயது 30).

    இவர் புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையே இவருக்கு தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகினார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    இதன் பிறகு சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதையடுத்து ரீகன் மீது சிறுமியின் தரப்பில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்படி போக்சோ சட்டத்தில் ரீகன் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ரீகனுக்கு போக்சோ சட்டப்பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார்.

    மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

    • பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.
    • புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநில மாணவர்களுக்காக 64 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

    இது புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக அமைப்பினர் புதுச்சேரி அரசிடம் அந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களின் பெயரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    அதன்படி விரைவில் அரசு ஊழியர்கள் தவிர, அனைவருக்குமான மருத்துவ நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி உள்ளன. இதில் பயன்பெறுபவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியின் தடையில்லா சான்றிதழை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.
    • புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 55-ன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் 16.6.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.

    அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ. 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50-ம் என்பது அப்படியே தொடரும்.

    மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ 7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ 9.65, 400 யூனிட்களுக்கு மேல் ரூ 10.70, 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கையில், புதுச்சேரி, தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு அமைச்சர் ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா கூட்டணி கட்சியினர் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இதனை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
    • போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி கோகிலாவும், பங்கு சந்தையில் முதலீடு செய்ய மர்ம நபர் அனுப்பிய படிவத்தை நிரப்பி அனுப்பியுள்ளார். பின்னர் பெங்களூருவில் உள்ள குளோபல் சாப்டவேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கோகிலாவை தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் ஆட்டோ மெட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் டிரேடிங் செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளது.

    இதை நம்பி கோகிலா கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து கோகிலா, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர் தலைமையின் கீழ் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கடந்த 2 மாதங்களாக பல்வேறு இணைய வழி தொழில் நுட்ப உதவியுடன் பணம் பரிவர்த்தனை, வாடஸ்-அப் மற்றும் இணையதளத்தில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெங்களூரு மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை பெங்களூரு விரைந்தது. இந்நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த தூபைல் அகமது, பிரவீன், முகமது அன்சார், நெய்வேலியை சேர்ந்த ஜெகதீஷ், ராமச்சந்திரன். பிரேம் ஆனந்த், விமல் ராஜ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை, புதுச்சேரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், துபாயை தலைமை இடமாக கொண்டு குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தெரியவந்தது.

    இந்தியா. ஹாங்காங், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கால் சென்டர்கள் அமைத்து, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதில் பணிபுரிந்த அனைவரும் பொது மக்களை ஏமாற்றுவது தெரிந்தே வேலை செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு நெய்வேவியை சேர்ந்த நவ்ஷத் கான் அகமது என்பவர் தலைவராக இருந்துள்ளார். அவருடைய மனைவி சவுமியா, நாமக்கல்லில் உள்ள கால் சென்டருக்கு உரிமையாளராக இருந்துள்ளார். இதில் தொடர்புடைய மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேர் தற்போது துபாயில் உள்ளனர்.

    பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால் சென்டர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தில் இயங்கவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு இன்டர்நெட்டை (வி.பி.என்.) பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களூருவில் சொகுசு பங்களா, ஏற்காடு, புதுச்சேரி மற்றும் ஆரோவில், கொடைக்கானலில் ரிசார்ட் வாங்கி உள்ளனர். இந்தியாவில் மட்டும் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்த சொத்துக்களை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 4 சொகுசு கார், 1 பைக், வேன், 100-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து 3 வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் ரூ.56 கோடி மோசடி செய்யப்பட்ட பணம் வந்துள்ளது. இதில் ரூ.27 கோடி உள்ள ஒரு வங்கி கணக்கை மட்டும், இந்தியா முழுவதும் உள்ள இணையவழி போலீசார் முடக்கி உள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவர்கள் இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 1,57,346 நபர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளனர். அதில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து, அங்கு பணி புரிந்த ஊழியர்களையும் இவ்வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். விரைவில் அவர்கள் உதவியுடன் துபாயில் பதுங்கியுள்ள நவ்ஷத் கான் அகமது மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பா.ம.க. தலைவர்களை விமர்சித்து பேசினார்.

    கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணையின்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருக்கு 2-வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

    • கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
    • மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்சன் மகாலில் இன்று கடலூர் தி.மு.க. கவுன்சிலர் கே.ஜி.எஸ்.டி. சரத் திருமணம் நடந்தது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்கள் அமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் வழங்கினர். தொடர்ந்து தி.மு.க. இளைஞரணிக்கு ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர்.

    மணமக்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தம்பி சரத், நிவேதா திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சரத் இளைஞரணியை சேர்ந்தவர். அவரின் தந்தையும் இளைஞரணியில் பணியாற்றியவர். திருமண விழா கழக நிகழ்ச்சிபோல எழுச்சியுடன் நடக்கிறது.

    திராவிட இயக்கத்தின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். கழகத்தின் முதல் பொருளாளர் நீலமேகத்தின் கொள்ளு பேரன் சரத். அவர் மக்களோடு எளிமையாக பழகக்கூடியவர். அதனால்தான் 23 வயதிலேயே கடலூர் நகராட்சி மாமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

    இளைஞரணி மாநகர துணை அமைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர, படிப்பதற்கு உரிமை இல்லை. இன்று ஆண்களுக்கு நிகராக சரிசமமாக பெண்கள் வந்துள்ளனர். பெண்கள் ஆண்களை விட அதிகமாக வெளிநாடு சென்று படிக்கின்றனர். இந்த மாற்றத்தை கொண்டுவந்தது தி.மு.க. பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவந்தவர் கலைஞர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

     


    ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டில் 520 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பெண்களும் மாதம் சராசரியாக ரூ.ஆயிரம் வரை இத்திட்டத்தால் சேமிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை தி.மு.க. அரசு வழங்குகிறது.

    இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ரூ.1,000 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். காலையில் மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை பெற்று பயனடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்து வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும், முதல் பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பணிக்கு செல்லும் பெண்களில் 42 சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.

    இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும், பெண்களும் தமிழக அரசின் சாதனைகளை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசின் தூதுவர்களாக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும். மணமக்கள் இருவரும், பெரியாரும், பகுத்தறிவும் போல, அண்ணாவும், மாநில சுயாட்சியும் போல, கலைஞரும், தி.மு.க.வும்போல, கழக தலைவரும், தமிழக மக்களும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. க்கள் ரவிக்குமார், கவுதம சிகாமணி, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
    • குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    மின்துறையின் வரவு - செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும்.

    ஆணையம் கட்டண உயர்வு தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகேட்டு கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்கும். ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும்.

    ஜூன் மாதம் முதல் உயர்வு இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது.

    ஜனவரி மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது.

    இதனைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடர் நடந்ததால் மின் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல், அதாவது 2 மாதம் முன்கூட்டியே நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 50 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ. 1.45 ஆக இருந்தது. அது ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது.

    100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான்கட்டணம் ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

    வர்த்தகபயனபட்டிற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் அவர்களுக்கான நிலைக்கட் டணமானது கிலோவாட் டுக்கு ரூ.75-லிருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. உயர் மின் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-லிருந்து ரூ.6ஆகஉயர்ந்துள்ளது. அவர்களுக்கான நிலைக் கட்டணம் ரூ. 420-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.

    சிறு விவசாயிகளுக்கான நிலைக் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.75- லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

    குறைந்த மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.35-லிருந்து ரூ.7 ஆகவும், உயர்மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் ரூ.5.45-லிருந்து ரூ.6.00 ஆகவும், நிலைக்கட்டணங்களும் கிலோவாட்டுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

    ×