search icon
என் மலர்tooltip icon

  கதம்பம்

  • உலகின் நீண்ட சுவர்களில் ஒன்றாக கருதபடுகிறது.
  • ஐம்பது ஆண்டுகள் இந்த கோட்டை மேல் பல தாக்குதல்கள் நடந்தும், இதை வீழத்தவே முடியவில்லை.

  சீன பெருஞ்சுவர் தெரியும், இந்திய பெருஞ்சுவர் தெரியுமா?

  ராஜஸ்தானில் 15ம் நூற்றாண்டில் ராணா கும்பாவால் உதய்பூர் அருகே கட்டபட்டது தான் கும்பல்கர் எனும் இந்த கோட்டைப் பெருஞ்சுவர். சுமார் 33 கிமி நீளமான சுவர் என்பதால் உலகின் நீண்ட சுவர்களில் ஒன்றாக கருதபடுகிறது. யுனெஸ்கோ பாதுகாக்கபட்ட கலாசார குறீடாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இந்த கோட்டையில் பிறந்தவர் தான் மகாராணா பிரதாப் சிங். அதனால் ராஜஸ்தான் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது இந்த கோட்டை. இதன் அகலம் 15 மீட்டர். எட்டு குதிரைகள் அருகருகே நடக்கமுடியும்.

  கிபி 1535ல் சித்தூர் முற்றுகையிடபட்டபோது,. அதன் இளவரசன் உதய் இங்கே தான் கொண்டுவரபட்டார். சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்த கோட்டை மேல் பல தாக்குதல்கள் நடந்தும், இதை வீழத்தவே முடியவில்லை.

  ஆனால் கிபி 1578ம் ஆண்டு, கோட்டைக்கு நீர் வரும் பகுதி அக்பரின் தளபதி ஷபாச்கானால் கண்டுபிடிக்கபட்டு, நீர் வரத்து அடைக்கபட்டு கோட்டை வீழ்ந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே ராணா பிரதாப் சிங் இதை மீண்டும் மீட்டுவிட்டார். அதன்பின் பெரியதாக இங்கே போர்கள் நடைபெறவில்லை. இந்த கோட்டையை பிடிக்க முடியாது என கருதியே விட்டு இருக்கலாம்.

  ப்ரிட்டிஷார் ஆட்சியில் 1818ல் சில சாதுக்கள் கோட்டையை பிடித்து புரட்சி செய்தார்கள். ஆனால் ப்ரிட்டிஷார் பேசி அவர்களை சரணடைய செய்துவிட்டார்கள்.

  - நியாண்டர் செல்வன்

  • ஆணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை நியாயமான பணம்பொருள் வரும் வழிகளை உருவாக்குதல்.
  • ஒருவரது உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வது.

  திருமணம் செய்து கொள்ள மணமக்களுக்கு ஜோதிடம் பத்து பொருத்தங்களை கூறுகிறது. ஆனால் திருமணம் மற்றும் காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்களை சங்ககாலம் இப்படி வறையறை செய்துள்ளது..

  1. குலம்: இரண்டுபேரும் ஒரே நல்ல குலத்தில் பிறந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைவன் உயர்ந்த குலத்தவனாக இருக்கலாம் அப்போது தடையில்லை.

  2.நற்பண்பு: நல்ல குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது. நற்குடிக்குரிய பண்புகளை ஆண், பெண் இருவரும் பெற்றிருக்கப் வேண்டும்.

  3. ஆண்மை: இது இன்று நாம் சொல்லும்படி பெண்ணை உடலளவில் சமாளிப்பது மட்டுமே ஆணுக்கு உரிய பண்பாக மட்டும் அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. பெண்ணுக்கும் அன்று ஆண்மை வேண்டி இருந்தது.

  ஆள் + மை = ஆண்மை, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டப்படும் ஆளுமைத்திறன்.

  ஆணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை நியாயமான பணம்பொருள் வரும் வழிகளை உருவாக்குதல். அவ்வழிகளில் தவறாமல் இருந்து பணம் பொருட்களைச் சேர்த்தல்.

  பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை அப்படிச் சேர்த்த பொருளைச் சேமித்தல். அதனை தேவைக்கேற்ப முறையான வழியில் செலவிடுதல்.

  4. வயது: பழந்தமிழ் மரபில் ஆணிற்கு 18 வயதும் பெண்ணிற்கு 16 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனை இந்த காலத்தில் 23/21 அல்லது 25/21 அல்லது26/23 அல்லது 28/25என்று அவர்கள் வசதிக்கு வச்சுக்குங்க.

  5. உருவம்: இது ஒருவர் மற்றவரை விரும்பும்படி அமைந்த தோற்றப்பொருத்தம்.

  6. மனப் பொருத்தம்: இருவரிடத்தும் உள்ள மனவோட்டங்கள் ஒத்திருப்பது. ஒருவரது உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வது. அதாவது ஒத்துப் போகும் குணங்கள்.

  7. நிறை : தமக்கிடையில் நடப்பனவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்.

  8. அருள்: ஒருவரிடத்து உள்ள குறைகளைப் பெரிது படுத்தாது, நிறைவுகளை நினைவில் கொண்டு செலுத்தும் அன்பு.

  9. உணர்வு : மொழியால் வெளிப்படுத்தப்படாத போதும் ஒருவரின் உள்ளக் குறிப்பினை இன்னொருவர் அறியும் தன்மை.

  10.திரு: இருவரையும் ஒருமித்துக் காண்பவர்கள் மனதில் தோற்றப்பொருத்தம் நடத்தைகள் பற்றி குறித்து ஏற்படும் மதிப்பு.

  இன்றைக்குப் பொருந்தாத சில பண்புகளை விட்டுப் பார்த்தால், இன்று இவை காதலன் காதலிக்கு மட்டுமல்ல இப்பொருத்தங்கள் கணவன் மனைவிக்கு இடையேயும் தேவைப்படுகின்றன. இதன்படி இல்வாழ்வில் இணைந்தவர்கள் வாழ்வில் என்றும் வசந்தம வீசும் என்பதில் ஐயமிலலை.

  -கோபிகா வாசன்

  • தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.
  • முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.

  தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் இராமலிங்க அடிகளே.

  தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.

  தமிழ்நாட்டில் முதன் முதலில் மும்மொழிப் பாட சாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) நிறுவியவர் இராமலிங்க அடிகளே.

  தமிழ்நாட்டில் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.

  தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தைக் கண்டவர் இராமலிங்க அடிகளே.

  தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர் இராமலிங்க அடிகளே.

  தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கண்டவர் இராமலிங்க அடிகளே.

  தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் இராமலிங்க அடிகளே.

  தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையையும் கட்டியவர் இராமலிங்க அடிகளே.

  -அண்ணாமலை சுகுமாறன்

  • ஹலோவுக்கு என்ன பொருள் தெரியுமா? வேறொன்றுமில்லை.
  • எல்லாரும் போனில் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்று ஆனது.

  தொலைபேசியை எடுத்து பேசுவதற்கு முன் "ஹலோ" என்று சொல்லுகிறோமே, அந்த ஹலோவுக்கு என்ன பொருள் தெரியுமா?

  வேறொன்றுமில்லை.. தொலைபேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல்லின் காதலி பெயர் "மார்கரெட் ஹலோ".

  கிரகாம் பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசியில் முதன்முதலில் பேசியபோது தன் காதலியின் பெயரை (ஹலோ) சொல்லி அழைத்தார். அதுமுதல் எல்லாரும் போனில் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்று ஆனது.

  -சுந்தரம்

  • மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார்.
  • தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

  1954-ம் ஆண்டில் தந்தை பெரியார் புத்த மத மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய தந்தை பெரியார் "எல்லோரும் என்னை பெரியார் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கும் மேலே ஒரு பெரியார் இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா?" என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.

  பெரியார் அப்படி கேட்டதும் "பெரியாருக்கு மேலே ஒரு பெரியாரா? யார் அவர்?" என்று அந்தக் கூட்டத்திலிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுக்கத் தொடங்கியபோது தன்னுடைய பேச்சுக்கான விளக்கத்தை தந்தை பெரியாரே சொல்லத் தொடங்கினார்.

  "உங்களுக்கு எல்லாம் நான் பெரியார். எனக்குப் பெரியார் கலைவாணர்தான். ஏனென்றால் நான் மேடை ஏறி சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச் சொன்னால் கல்லால் அடிக்கிறார்கள். நான் பேசுகின்ற அதே கருத்துக்களைத்தான் கலைவாணர் சினிமாவில் சொல்கிறார். ஆனால் அதைப் பார்க்கவும், கேட்கவும் காசு கொடுத்து போகிறார்கள். இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது நியாயம்தானே. அவர்தானே எனக்குப் பெரியார்" என்று தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

  -கயல்விழி

  • இரண்டாம் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மரத்தினாலான பெஞ்சுகள்.
  • மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மின் விளக்குகளோ காற்றாடிகளோ இருக்காது.

  ஆங்கிலேயர் காலத்தில் தனியார் வசம் இருந்த ரெயில்வே கம்பெனிகளை 1947-இல் சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றிணைத்து இந்தியன் ரெயில்வே என்ற பெயரில் நாட்டுடைமை ஆக்கியது நேரு அரசு.

  அப்போது முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்று மூன்று வகையான பெட்டிகள் உண்டு.

  முதல் வகுப்பு பெட்டிகளில் இருக்கைகள் பஞ்சு மெத்தைகளால் ஆனவை. அந்த பெட்டிகளில் மின் விளக்குகள் காற்றாடிகள் போன்ற வசதிகள் இருக்கும்.

  இரண்டாம் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மரத்தினாலான பெஞ்சுகள்.

  இரண்டாம் வகுப்பில் மின் விளக்குகள் உண்டு. காற்றாடிகள் இருக்காது.

  மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மின் விளக்குகளோ காற்றாடிகளோ இருக்காது.

  -சுந்தரம்

  • பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.
  • வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார்.

  திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்பதையும் தாண்டி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.

  வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.

  1989ல் அருப்புக்கோட்டை சிவன் கோவிலில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் அவர் கூறிய தத்துவம் இது..

  மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும்.. வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு.

  ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.

  வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவர் உள்ளான். அவன் தான் பூட்டாங்கயிறால் வண்டியையும் மாட்டையும் இணைத்து இயக்குகிறார்.

  பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.

  நம் உடலுக்குப் பெயர் அசித்து. ஆன்மா பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு. உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது.

  இறைவன் என்னும் வண்டிக்காரன், பிராண வாயு என்னும் பூட்டான் கயிற்றால் உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டு உள்ளார்.

  வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர்.

  மரணம் வரும்வரை சரணம் சொல்ல வேண்டும் என்றபோது கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.

  - ஆர்.எஸ். மனோகரன்

  • நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
  • எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது.

  பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில், ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு பெண்மணியை பார்த்துக் கேட்டார். "உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?".

  அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக, "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை" என்றார்.

  கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார். "என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது.

  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது என் சம்பந்தப்பட்ட விஷயம்... வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால்,நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்.

  நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், , நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்.என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.

  "திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன்,பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்.. நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு... இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.

  -உதயேந்திரன்

  • தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
  • நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.

  நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

  அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தியால்..

  1) மனக் கவலை தூள் படும்.

  2) கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

  3) ஒற்றைத்தலைவலி சரியாகும்.

  4) நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.

  5)ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்.

  6) முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்.

  எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

  - சிவசங்கர்

  • பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
  • ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை.

  தமிழ் திரைப்படத்துறையில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்.

  இவரது இயற்பெயர் ராமையா. இவர் தந்தை பெயர் நாராயணசாமி நாயனார். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார்.

  பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று எண்ணிய இவர், வேலையை விட்டுவிட்டு சேலத்தில் இருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் எழுதினார். அப்போது இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் ராமையாதாஸ்.

  அன்றைய காலத்தில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பெண்கள் என்றால் 'தேவி'யென்றும் ஆண்கள் என்றால் 'தாஸ்' என்றும் தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்வார்கள்.

  அதன் பிறகு, தானே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கி முதலில் சிறுவர்களை வைத்தும் அதன் பின்னர் இளைஞர்களை வைத்தும் நாடகங்கள் நடத்தினார். அதில் ஒரு நாடகம், "மச்சரேகை'. இந்த நாடகத்தின்போது தான், பின்னாளில் பல படங்களை எழுதித் தயாரித்து இயக்கிய ஏ.பி. நாகராஜன் தஞ்சை ராமையாதாசிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

  ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை. எல்லாம் அனுபவப் படிப்புத்தான். இவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இவரைச் சிறந்த முறையில் உருவாக்கிய நாடக ஆசிரியர் ராமையாதாஸ் தான்.

  -பாண்டியன் சுந்தரம்

  • பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார்.
  • கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்” என்றார்.

  ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

  அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, "வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்" என்றார்.

  அதற்கு நண்பர், "உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை" என்றார்.

  பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.

  அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.

  அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட... வென்று சிரித்துவிட்டார். பிறகு அவர், "பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா... கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!" என்றார்.

  அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, "உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்" என்றார்.

  அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கிவிட்டது..

  -சந்திரன் வீராசாமி