search icon
என் மலர்tooltip icon

  ஆசிரியர் தேர்வு

  • பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து இந்த பதிவை தனது X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்
  • என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்

  அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது X பக்கத்தில் "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன்!" என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

  3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்" என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து இந்த பதிவை தனது X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

  • விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
  • திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

  தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

  இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

  • துவாரகா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
  • பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கினார்.

  குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலமாக இது கருதப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நகரமாக இருந்த துவாரகா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

  பேய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பண்டைய துவாரகாவின் பொருட்களை நீருக்கடியில் மக்கள் காணலாம். 

  இன்று, வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  பிரதமர் மோடி நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுபோய் காணிக்கையாக செலுத்தினார்.

  இதுகுறித்து தனது அனுபவத்தைப் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

  தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா. எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
  • தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

  கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது

  இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

  இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

  இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.

  2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

  இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

  • தனுஷின் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
  • ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

  தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

  அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

  இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக நடிக்கிறார். அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • பிரான்ஸ் தேசிய கொடியை மஹ்ஜோபி அவமதித்து வீடியோ பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது
  • நாட்டை அவமதிப்பவர்களை எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம் என்றார் டர்மனின்

  பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் (Bagnols-sur-Ceze) பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்தவர் இமாம் மஹ்ஜோப் மஹ்ஜோபி (Mahjoub Mahjoubi). துனிசியா (Tunisia) நாட்டை சேர்ந்த மஹ்ஜோபி 38 வருடங்களுக்கு முன்பே பிரான்சில் குடியேறியவர்.

  மஹ்ஜோபி ஒரு சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை "சாத்தான்" என பொருள்பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

  பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மஹ்ஜோபியை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை உத்தரவிட்டது.

  மஹ்ஜோபி வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்தது.


  ஆனால், மஹ்ஜோபி தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

  "கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் மஜ்ஜோபி பிரெஞ்சு எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டார். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாட்டிற்கு எதிரானவர்கள் எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம்" என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gerald Darmanin) கூறினார்.

  இந்நிலையில், துனிசியா தலைநகர் துனிஸ் (Tunis) செல்லும் விமானத்தில் அவர் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

  வெளிநாடுகளிலிருந்து பிரான்சிற்கு வந்து வாழ்பவர்களை அந்நாடு வெளியேற்ற விரும்பினால், உடனடியாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டு குடியுரிமை சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
  • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

  2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

  அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

  இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

  மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

  • 2012ல் அறிமுகமான டொவினோ பல மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்
  • "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்

  தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

  சில நேரங்களில், ஒரு சில ரசிகர்கள் வினோதமான கோரிக்கைகளை தங்களுக்கு பிடித்தமான திரைப்பிரபலங்களுக்கு வைப்பதும், அதற்கு அந்த பிரபலங்கள் பதிலளிப்பதும், இணையத்தில் சுவாரஸ்யமாக செய்திகளாக பரவி வருகின்றன.

  மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ் (Tovino Thomas). 2012ல் திரையுலகில் அறிமுகமான டொவினோ பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


  டொவினோ தாமசிற்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்து ஒரு பதிவை வெளியிட்டார்.


  அதில் அந்த ரசிகர், "எனது வீடியோவை டொவினோ தாமஸ் பார்த்து விட்டு, அதற்கு கமென்ட் (comment) பதிவிட்ட பிறகுதான் நான் எனது தேர்விற்கு படிக்க தொடங்குவேன்" என பதிவிட்டு, டொவினோ தாமசின் ஐடி-யையும் டேக் (tag) செய்திருந்தார்.

  இந்த பதிவை கண்ட டொவினோ தாமஸ், "போய் படி மகனே" என பதிலளித்தார்.

  இதே போல் ஒரு ரசிகை, நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das) பெயரை குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார்.


  2012ல் "பெருமான்" எனும் தமிழ் திரில்லர் திரைப்படத்தில் அறிமுகமாகி "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் அர்ஜுன் தாஸ்.


  அவருக்கு அந்த ரசிகை, "அர்ஜுன் தாஸ் எனது வீடியோவை பார்த்து, அது குறித்து கமென்ட் அளித்த பிறகுதான் நான் நீட் முதுநிலை (NEET PG) தேர்விற்கு தயாராக தொடங்குவேன்" என பதிவிட்டு அர்ஜுன் தாஸ் ஐடி-யையும் டேக் செய்திருந்தார்.

  இந்த பதிவை கண்ட அர்ஜுன் தாஸ், "டாக்டர், நீங்கள் முதுநிலை தேர்வை வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்ததும் எனக்கு ட்ரீட் (treat) வைக்க வேண்டும். (விளையாட்டிற்கு கூறினேன்). நீங்கள் தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தேர்வில் வெல்லுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்" என பதிலளித்தார்.

  இரண்டு வெவ்வேறு ரசிகர்களின் வித்தியாசமான கோரிக்கைகளும், திரைப்பிரபலங்களின் பதில்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதித்து வருகின்றனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • 18-வது மக்களவை இளைஞர்களின் விருப்பத்தின் அடையாளமாகவும் இருக்கும்.
  • உற்சாகமும், ஆற்றலும் நிறைந்த இளைஞர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி இன்று 110-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தைக் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செய்ய இந்த நாள் சிறப்பான நாள். பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, உலகம் வளர்ச்சி பெறும் என மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

  இந்தியாவில் பெண்கள் சக்தியானது அனைத்து துறைகளிலும் புதிய உச்சத்தை தொடுகிறது. கிராமங்களில் வசிக்கும் பெண்களால் டிரோன்களை இயக்க முடியுமா, பறக்கவைக்க வேண்டுமா என கேள்வி எழுந்தது. ஆனால் இன்று அதுவும் சாத்தியமானது. இயற்கை விவசாயம், நீர் சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பெண்களின் தலைமைப்பண்பு வெளிவந்துள்ளது.

  ரசாயனங்களால், நமது அன்னை பூமியானது அவதிப்பட்டது. வேதனையடைந்தது. ஆனால், நமது பூமியை காப்பதில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கை வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

  தேர்தல் பணியில் இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக பங்கேற்கிறார்களோ, அந்த அளவுக்கு அதன் முடிவுகள் நாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

  வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். உற்சாகமும், ஆற்றலும் நிறைந்த இளைஞர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

  18-வது மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இளைஞர்கள் பெறுகிறார்கள். இதன் பொருள் 18-வது மக்களவை இளைஞர்களின் விருப்பத்தின் அடையாளமாகவும் இருக்கும் .

  இளைஞர்கள் அரசியல், பொது அறிவு குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். விளையாட்டு, திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

  பாராளுமன்ற தேர்தலுக்கான சூழல் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. மார்ச் மாதத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

  110 எபிசோட்களில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் பற்றி மக்களுடன் பேசியது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

  மன் கி பாத் என்பது மக்களால் மக்களுக்காக, மக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு திட்டம். பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் சட்டத்தைப் பின்பற்றி அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாது. அடுத்ததாக 111-வது எபிசோடில் மன் கி பாத்தில் மக்களுடன் உரையாடுவேன் என தெரிவித்தார்.

  • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

  ராஞ்சி:

  இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திணறியது.

  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

  இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுமையாக ஆடிய துருவ் ஜுரல் அரை சதம் கடந்தார். 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

  இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.