search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    • இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
    • கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம்.

    மனைவியை கணவன் பலவந்தத்தின்மீலம் பாலியல் வன்புணர்வு [Marital rape] செய்வதை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மனைவியின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கணவன் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் பலாத்காரமாக கருத வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கபட்டன.

    இதனால் இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில், மனைவியின் அனுமதியை மீற செயல்பட கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும் அதை பாலியல் பலாத்காரமாக வரையறுப்பது மிகவும் கடுமையானது. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இதை அனுமதித்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம். எனவே கணவன் மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் பலாத்காரமாக அறுதியிட்டு தண்டனை வழங்குவது சமூக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
    • பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

    பந்தக்கால் நடப்பட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரான் மீதான தாக்குதலை உடனே தொடங்கும்படி முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
    • ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பேசினார்.

    வாஷிங்டன்:

    லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஈரானின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது. ஈரான் எண்ணெய் ஆலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    • அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
    • அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

    சண்டிகர்:

    அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எனவே அரியானாவில் 4 முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அரியானாவின் நுஹ் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம்.

    ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியல் அமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன.

    அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.

    நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள்.

    அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்து விட்டது.

    பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

    • ஏரியில் தத்தளித்த படகில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
    • மேலும் சிலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம்.

    கோமா:

    ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் மினோவில் இருந்து வடக்கு கிவு மாகாணத்தின் கோமா பகுதியை இணைக்கும் ஏரியில் நேற்று படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் 278 பயணிகள் இருந்தனர்.

    ஏரியை ஒட்டி அமைந்துள்ள கிடுகு துறைமுகம் அருகே சென்றபோது அதிக பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் பயணித்த பலர் ஏரி நீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர்.

    தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. தண்ணீரில் தத்தளித்த 10 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த ஏரியில் மீட்புப் பணி தொடர்கிறது.

    இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியாகினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என உள்ளூர் கவர்னர் தெரிவித்தார்.

    படகு விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
    • இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அமெரிக்க வகைப்படுத்த வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான தொடர் அத்துமீறலில் ஈடுபடும் நாடாக அமெரிக்க அரசு வகைப்படுத்த வேண்டும்.

    2024-ல் இந்தியாவில் பல்வேறு தனிப்பட்ட நபர்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், மத தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள், மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் மத சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அமைப்பு ஒரு தலைபட்சமாக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த அமைப்பு அரசியல் திட்டத்துடன் செயல்படும் ஒருதலைபட்சமான அமைப்பு. இதன் அறிக்கையானது இந்தியா குறித்து பொய் தகவல்களை கூறுவதுடன், கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற அறிக்கைகளை தயாரிப்பதை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்குள் நடக்கும் மனித உரிமை பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் அந்த அமைப்பு பயன்பெறும் என்றார்.

    • ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாளுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும்.
    • ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

    மொத்தம் 11.72 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.2.028.57 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதன்மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இல்லை:
    • இதனால் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்தது. இதையடுத்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையைக் கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன.

    ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். இதேபோல் புளோரிடா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹெலன் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

    புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

    அதன்பின், 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வங்காளம், மராத்தி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    சிறப்பு மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

    • எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
    • சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விஜய் டாடா அளித்த புகாரில், "மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரமேஷ் கவுடா ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். என்னிடம் போனில் பேசிய குமாரசாமி சன்னபட்னா இடைத்தேர்தலுக்காக ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டினார். பணம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், ரியல் எஸ்டேட் தொழிலை நடத்த முடியாது என்றும் பெங்களூரில் பிழைப்பு கூட நடத்த முடியாது என்று மிரட்டினார்.

    சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி (எச்.டி. குமாரசாமியின் மகன்) போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ரூ.50 கோடி தேவை என்று ரமேஷ் கவுடா மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.

    சன்னபட்னா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    • பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி ஒதுக்கீடு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது," என்று தெரிவித்தார்.

    "வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கிய பொருளாதார மையம் ஆகும். நகருக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது."

    "118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.



    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "மாண்புமிகு பிரதமர்

    நரேந்திர மோடி, உங்களுடனான எனது கடைசி சந்திப்பைத் தொடர்ந்து எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

    • சாவர்க்கர், அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல.
    • பிராமணராக இருந்து கொண்டு மாமிசம் உண்பதை வெளிப்படையாக பிரசாரம் செய்து வந்தார்.

    சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தினேஷ் குண்டுராவ், "சாவர்க்கர், அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல. அவர் மாட்டிறைச்சியையும் சாப்பிட்டு வந்ததாக சிலர் கூறுகின்றனர். பிராமணராக இருந்து கொண்டு மாமிசம் உண்பதை வெளிப்படையாக பிரசாரம் செய்து வந்தார்.

    பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா இஸ்லாத்தை மிக தீவிரமாக பின்பற்றுவர் அல்ல. அவர் பன்றி இறைச்சியைக் கூட சாப்பிட்டார். ஜின்னா முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளமாக மாறினார். அவர் ஒருபோதும் அடிப்படைவாதி அல்ல" என்று தெரிவித்தார்.

    சாவர்க்கர் குறித்த காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×