என் மலர்
உள்ளூர் செய்திகள்
தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாள்: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
- அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி.
- ராமநாதபுரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை யொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட் சன் தேவ ஆசீர்வாதம் மேற் பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி, 19 எஸ்.பி, 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமக்குடி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 150 நவீன சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 163 (1) தடை உத்தரவு கலெக்டர் உத்தரவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.