search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்- போக்குவரத்து கடும் பாதிப்பு
    X

    வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்- போக்குவரத்து கடும் பாதிப்பு

    • குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
    • வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக வருகிறதா என ஆய்வு செய்தனர்.

    திண்டிவனம்:

    கடந்த 30-ந் தேதி ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் வழக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுவருகிறது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்களில் உள்ள வீடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, அதே சமயம் வெள்ளதால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் இந்த குளறுபடிகள் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே உள்ள மேல்பேரடிக்குப்ப கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மேல் பேரடிக் குப்பம் குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை செல்லும் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திண்டிவனம் தாசில்தார் சிவா, டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக வருகிறதா என ஆய்வு செய்தனர். இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×