என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே வீடு புகுந்து பெண் குத்திக்கொலை: வாலிபர் வெறிச்செயல்
- வாலிபர் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தேவிகலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (26) என்பது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.