என் மலர்
தமிழ்நாடு
தீயணைப்பு வாகனம் நிறுத்த அனுமதி கேட்டு விஜய் கட்சியினர் மனு
- விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
- காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம்:
தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மாநாட்டில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாடுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகள், வக்கீல்களுடன் சென்று மனு அளித்திருந்தார். மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகளை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டு அனுமதிக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் நாளன்று தீயணைப்பு வாகனம் பாதுகாப்பிற்கு நிறுத்த விக்கிரவாண்டி தீயனைப்பு நிலையத்திலும் ஆம்புலன்ஸ் நிறுத்த முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், சாலைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம், ரெயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் தயார் செய்து வருவதால் காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.