என் மலர்
தமிழ்நாடு
சலவன்பேட்டையில் கணவன், மனைவி தற்கொலை
- விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர், சலவன்பேட்டை, சேஷாலம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவரது மனைவி மாலா (60). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 11 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்ற நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். முருகேசன் அவரது மனைவி இருவரும் கடன் பெற்றவர் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அவர்கள் பணத்தை தருவதாக காலம் கடத்தி வந்தனர்.
பின்னர் நீங்கள் எனது தந்தையிடம் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. இதனால் நீங்கள் யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கினர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் முருகேசனின் வீட்டில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
அதில் சலவன்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனாக வாங்கினார். அவர் இறந்து விட்டதால் அவரது மகன்களிடம் பணத்தைக் கேட்டபோது இறந்தவர்களிடமே பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத விரக்தியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.