என் மலர்
தமிழ்நாடு
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை- 2 பேருக்கு சிறை... இலங்கை நீதிமன்றம் உத்தரவு
- ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது.
- 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ந்தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்லை தாண்டி வந்ததாக கூறி ராதா (44), முத்துராம லிங்கம் (51), யாக்கோபு (24), இவரது மகன்கள் பொன் ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் இதேபோல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து சகாய ராபர்ட்டுக்கு 1 வருட சிறை தண்டனையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.