search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செஞ்சி-விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரம் எழுதும் பணியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரம்
    X

    செஞ்சி-விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரம் எழுதும் பணியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரம்

    • மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.
    • காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    விழுப்புரம்:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந்தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.

    மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்நிலையில் மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்த தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெறுவதற்காக நேற்று மாலை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

    அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலை சந்தித்து, மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.

    அந்த மனுவில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மாநாட்டை நடத்துவதாகவும், ஏற்கனவே காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை எந்தெந்த முறைகளில் பின்பற்ற இருப்பதாகவும், அது தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. அம்மனுவுடன், மாநாட்டு திடல், மேடை, வாகனங்கள் நிறுத்துமிடங்கள், வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலை இவற்றை உள்ளடக்கிய மாதிரி வரை படத்தையும் இணைத்துக் கொடுத்தனர்.

    இம்மனுவை பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து பதில் தெரிவிப்பதாக கூறினார்.

    அதன் பின்னர் வெளியே வந்த புஸ்சி ஆனந்த், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந்தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷிமோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    மாநாட்டையொட்டி செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தினர் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக கிராம புறங்களில் அதிகளவில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.

    Next Story
    ×