search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரியில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு- 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது
    X

    வீராணம் ஏரியில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு- 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

    • சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
    • சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50அடியாகும்.

    இந்த ஏரி சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர்வரத்து இருக்கும்.

    இந்த ஏரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் தற்போது 46.8 அடி தண்ணீர் உள்ளது. மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான மீன் சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் ஏரி அமைந்துள்ள லால்பேட்டையில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.

    நீர்வரத்து அதிகமாக உள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வி.என்.எஸ் மதகு வழியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், வெலிங்டன் ஓடை வழியாக 18 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் திருநரையூர், சித்தமல்லி, அறந்தாங்கி உள்ளிட்ட 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

    என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அங்குள்ள பெருமாள் ஏரியில் வந்தடையும். தற்போது அதிக அளவில் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் பெருமாள் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள பெல்லாந்துறை அணைக்கட்டில் இருந்தவினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    Next Story
    ×