என் மலர்
தமிழ்நாடு
காட்பாடியில் ரெயிலில் அடிபட்டு சென்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
- பிளாட்பாரம் வழியாக ரெயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார்.
- செந்தில் குமார் ரெயில் சக்கரத்தில் சிக்கியதால் அவருடைய கால்கள் துண்டானது.
வேலூர்:
சென்னை அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் சென்னையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
வேலூர் காட்பாடி வந்திருந்த இவர் இன்று அதிகாலை மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக வந்தார்.
2-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. பிளாட்பாரம் வழியாக ரெயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார்.
அப்போது ரெயில் திடீரென புறப்பட்டது. இதில் நிலை தடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்தார். அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கியதால் அவருடைய கால்கள் துண்டானது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காட்பாடி ரெயில்வே போலீசார் செந்தில்குமார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் அடையாள அட்டை மூலம் இறந்தவர் செந்தில்குமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.